- புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் கூட்டணியில், NFGGயின் சார்பில் மரச்சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடுகின்ற பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பெண்கள் பலரும் தங்க நகைகளை தமது தேர்தல் நன்கொடைகளாக வழங்கி வருகின்றனர்.
NFGGயின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, இதுவரை 23 பவுண் எடையுள்ள தங்க நகைகள் இவ்வாறு இப்பிரதேசப் பெண்களினால் நன்கொடையாக வழங்கப்படுள்ளதாகத் தெரிவித்தார்.
தமது முன்னணியின் தேர்தல் செலவினமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் தலா 50 இலட்சம் ரூபா வீதம் ஒரு கோடி ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கும் குறைவான நிதியே முன்னணியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

தமது முன்னணியின் வெற்றிவாய்ப்பு இரண்டு மாவட்டங்களின் தேர்தல் களங்களிலும் பிரகாசமாகவுள்ள இன்றைய நிலையில், மேலும் முனைப்பாக இறுதிக்கட்டப் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் தேர்தல் நிதி வழங்க விரும்பும் ஆர்வலர்கள் தாமாக முன்வர வேண்டியது அவசியமாகும் எனவும் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.
தமது முன்னணியின் தேர்தல் செலவினங்கள் வெளிப்படையானது என்றும், முன்னணியின் அங்கத்தவர்கள் வழங்கும் நிதியுதவயைக் கொண்டே பிரச்சாரப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்ட பொறியியலாளர் அப்துர் றஹ்மான், மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் மிகப் பிரமாண்டமாக முன்னெடுத்துவரும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்குச் செலவாகும் கோடிக்கணக்கான பணம் எந்தவழியில் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறித்து வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Leave a comment