காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.ம.சு. முன்னணியின் தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ், ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வை கடந்த 04.08.2015 செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, அல்மனார் அறிவியற்கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.எல். மும்தாஸ் மதனி, ஹிரா பௌன்டேஷன் அமைப்பின் திட்டமிடல் உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான ஏ.எம். நௌஷாத், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பொதுச்சந்தையின் குத்தகையாளர் எம்.சீ.எம். காலிதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடிப் பிரதேசத்தைப் பொறுத்த வரை கீரியும் பாம்புமாகக் கருதப்பட்டு வந்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ்வும், பிரதம ஆசிரியர் புவி. றஹ்மதுழ்ழாஹ்வும் மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாடிய இச்சந்திப்பு இடம்பெற்ற விதம் மற்றும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்களை தங்களின் இணையதளம் ஊடாக வாசகர்களுடன் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே பகிர்ந்துகொள்வதுடன், இதனை இப்பிரதேச அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பதிவு செய்துகொள்ளவும் விரும்புகின்றேன்.
கடந்த 08.05.2015ம் திகதி வெளிவந்த 337வது ‘வார உரைகல்’ பத்திரிகையுடன் சுமார் 12 வாரங்களாக இப்பத்திரிகையின் வரவு தடைப்பட்டிருப்பது குறித்து வாசகர்கள் பலரும் என்னுடன் தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பி வருகின்றனர்.
பத்திரிகை வெளியீடு தடைப்பட்டிருந்தமைக்கான உண்மையான காரணிகள் பலவும் ஒரு புறமிருக்க, பொதுத் தேர்தலொன்று நடைபெறவுள்ள இக்காலப் பகுதியிலும் எனது பத்திரிகை வெளிவராதிருப்பது குறித்து பலரும் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்ததையும் என்னால் அவதானிக்க முடிந்தது.
எனது அபிமான வாசகரான ஓய்வு பெற்ற ஆசிரியரொருவர் என்னிடம் இதுபற்றிக் கூறிய கருத்து, உண்மையில் என்னைப் பெரதும் அதிர்ச்சியடையச் செய்தது. தற்போது தேர்தல் களத்திலுள்ள சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ அவர்கள்;தான் ஒரு தொகைப் பணத்தை எனக்குத் தந்து தேர்தல் முடியும் வரைக்கும் பத்திரிகை வெளியீட்டைத் தடுத்திருக்கிறார் எனத் தான் கேள்வியுற்றதாக அவர் கூறினார்.அவரது கருத்தை மறுத்த நான், உண்மையில் எனது இருதய சிகிச்சை இடம் பெற்று ஒராண்டு கழிந்ததால் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் பெற்றுக் கொண்டு வைத்தியரின் ஆலோசனைக்கமைய சில வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டதும், அதையடுத்து றமழான் மாத நோன்பு மற்றும் பெருநாள் என்பவற்றை எதிர்கொண்டதும், இவ்வாறான காரணங்களால் செலவினங்கள் அதிகரித்து பத்திரிகையை வெளியிடுவதற்கான முதலீடு இல்லாமல் போனதன் காரணமாகவே பத்திரிகையை வெளியிட முடியவில்லை என்றும் கூறியதோடு, எவராவது இச்சமூகத்தில் முன்வந்து 25,000 ரூபாவை எனக்கு கடனாகத் தந்து உதவினால்கூட மறு வாரமே என்னால் பத்திரிகையை வெளியிட முடியுமென்றும் அவருக்கு எடுத்துரைத்தேன்.
இதுபோலவே, ஜாமியுழ்ழாபிரீன் சந்தையின் குத்தகையாளரும், எனது அபிமான வாசகருமான எம்.சீ.எம். காலிதீன் உட்பட பலரும் கேட்டபோதும் உண்மையான காரணத்தைக் கூறியிருந்தேன்.
எனது நிலையை உணர்ந்த சந்தைக் குத்தகையாளர் காலிதீன், சில தினங்களின் பின்னர் என்னைச் சந்தித்து, பத்திரிகையை மீண்டும் வெளியிடுவதற்கு ஒருவர் ஒரு நிபந்தனையுடன் உதவி செய்ய முன்வந்துள்ளார் என்றார்.
என்ன நிபந்தனை எனக் கேட்டதற்கு, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் செலிங்கோ கடன் முழுவதையும் செலுத்தி விட்டார். அதற்குரிய ஆதாரங்கள் எல்லாம் அவர் தருவார். நீங்கள் ஒருவர்தான் உங்களின் பத்திரிகையில் அதுபற்றி தொடர்ச்சியாக எழுதி வந்திருப்பதால், அவர் அக்கடனைக் கொடுத்துவிட்ட செய்தியையும் உரிய முக்கியத்துவமப்படுத்தி வெளியிட வேண்டும் என்பதுதான் அவரது நிபந்தனை என்றார்.
அப்படியா..? செலிங்கோ கடனை அவர் செலுத்தி விட்டாரா..? அப்படியென்றால் அதனை நான் உரிய முக்கியத்துவம் அளித்தல்ல, மிகவும் முக்கியத்துவமளித்துப் பிரசுரிக்க வேண்டியதுதான் ஊடக தர்மமாகும். கண்டிப்பாக அவ்விடயத்தை நான் வெளியிடுவேன். அதற்குரிய ஆதாரங்களைத் தரச் சொல்லுங்கள் என்றேன்.
நான் கூறிய இக்கருத்தை அவரிடம் தெரிவித்து, அவரின் முடிவைக் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக காலிதீன் கூறினார். அதன்படி 04ம் திகதி மாலை என்னுடன் அவர் தொடர்பு கொண்டு, இன்று இஷாத் தொழுதுவிட்டு எனது வீட்டுக்கு அவரும், குறித்த நபரும் வருவதாகத் தெரிவித்தார்.
அவ்வாறே அவர்கள் இருவரும் எனது வீட்டுக்கு வந்தனர். அவருடன் வந்தவர் ஊடகவியலாளர் ஏ.எம். நௌஷாத். இருவரையும் வரவேற்று உட்கார்ந்து பேசினோம். நௌஷாத் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது, ஹிஸ்புழ்ழாஹ்வின் தலைமையிலான ஹிறா பௌன்டேஷனில்தான் பல்வேறு திட்டங்களையும்; வரைந்து கொடுக்கும் கடமையில் தான் தற்போது இணைந்திருப்பதாகச் சொன்னார்.
பத்திரிகையை வெளியிட எவ்வளவு பணம் தேவைப்படும் என அவர் கேட்டார். 25,000 ரூபாய் இருந்தால் போதும். ஆரம்பித்து விடலாம். பின்னர் அது வாராந்தம் தொடரும். எனக்கு இனாமாகத் தராவிட்டாலும், கடனாகத் தாருங்கள். வாராந்தம் 5000 ரூபா வீதம் ஐந்து வாரங்களில் திருப்பித் தந்து விடுவேன் என பத்திரிகை வெளியீடு தொடர்பாகவும், செலிங்கோ கடன் செலுத்தப்பட்ட விடயம் தொடர்பாகவும் சுமார் 20 நிமிடங்கள் உரையாடினோம். பின்னர் செலிங்கோ கடன் செலுத்திய ஆவணங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் வருவதாகக் கூறி இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.
இதன் பிறகு சிறிது நேரத்தில் நௌஷாத்திடமிருந்து ஏற்கனவே அவர் என்னிடம் தெரிவித்திருந்த 0714744604 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு பல அழைப்புக்கள் வந்தன. அவ்வழைப்புடன் தொடர்பை ஏற்படுத்தியும் உரையாடலைத் தொடர முடியவில்லை. நானும் அவரது இலக்கத்துடன் தொடர்பு கொள்ள அழைப்பை ஏற்படுத்தியபோதும், அப்போதும் உரையாடலை மேற்கொள்ள முடியவில்லை.
இதுபற்றி மார்க்கட் குத்தகையாளர் காலிதீனுக்கு நான் தெரியப்படுத்தினேன். அவர் அதனைத் தெரியப்படுத்தியிருப்பார் போலும், சற்று நேரத்தில் 0718080156 என்ற வேறோர் இலக்கத்திலிருந்து ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் நௌஷாத் பேசினார். முன்னர் தந்த இலக்கத்திலிருந்து தொடர்பு கொள்வதில் ஏதோ சிக்கல் உள்ளது போல் தெரிகிறது. இதுவும் எனது இலக்கம்தான் என்று அவர் விவரம் தெரிவித்து உரையாடலைத் தொடர்ந்தார்.
செலிங்கோ கடனைச் செலுத்தியதற்கான ஆதாரங்களை எல்லாம் எடுத்து விட்டேன். நீங்கள் நீங்கள் ஹிஸ்புழ்ழாஹ் சேருடன் நேருக்கு நேர் சந்தித்து இக்கடனைச் செலுத்திய விடயங்கள் பற்றி ஒரு நேர்காணலும் எடுத்துப் பிரசுரித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். அதற்கான ஏற்பாட்டை தனிப்பட்ட இடமொன்றில் நான் செய்கிறேன். நீங்கள் வருவீர்களா? எனக் கேட்டார்.
அதற்கு நான், அப்படி அவரது பேட்டியையும் சேர்த்துத்தான் பிரசுரிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் ஒரு ஊடகவியலாளரான நீங்களே அவரைப் பேட்டி கண்டு அதனைத் தொகுத்துத் தரலாம். அதனைச் சேர்த்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் எனக்கில்லை. ஆனால் அவரது முகத்தைப் பார்க்கவும் எனக்கு விருப்பமில்லை. அந்தளவுக்கு கடந்த காலங்களில் அவர் எனக்கு பல அநியாயங்களையும், அபாண்டங்களையும், உண்மைக்குப் புறம்பான கூற்றுக்களையும் தெரிவித்திருக்கிறார். எனவே நீங்களே அவரைப் பேட்டி கண்டு தொகுத்துத் தாருங்கள் என்றேன்.
அதற்கவர், சேர் (ஹிஸ்புழ்ழாஹ்) இப்போது எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்த்து வருகிறார். அந்த வகையில் உங்களுடனுள்ள பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள விரும்புகிறார். நீங்கள் இருவரும் ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டால் உங்களது பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். உங்களுக்குச் செய்த பிழைகளுக்காக அவர் மன்னிப்புக் கேட்கவும் தயாராகவே இருக்கிறார். எனவே இதனை நீங்கள் சற்று சீரியஸாக யோசியுங்கள் என்றார் நௌஷாத்.
புதிலளித்த நான், அவரை எந்த வகையிலும் என்னால் சென்று சந்திக்க முடியாது. நான் அவ்வாறு சந்தித்தால் வேறு விதமான வதந்திகள் எல்லாம் ஊரில் பரவத் தொடங்கிவிடும். ஆவற்றையெல்லாம் மறுதலித்து என்னால் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவரை நான் வந்து சந்திக்கும் கதையை கைவிடுங்கள். எனக்கும் அவருக்கும் இடையிலுள்ள பிரதான பிரச்சினை, அப்துர்றவூப் மௌலவிக்கு எதிராக நான் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த காணி அபகரிப்பு வழக்கினை வாபஸ் பெறுமாறு ஹிஸ்புழ்ழாஹ் கேட்டுக் கொண்டதற்கமைய நான் வாபஸ் பெற்றமையாகும்.
அப்துர்றவூப் மௌலவியுடன் காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தை ஓற்றுமைப்படுத்திய பின்னர் எனது வீட்டுக்கு வந்த ஹிஸ்புழ்ழாஹ், என்னிடமும், எனது மனைவியிடமும் அப்துர் றவூப் மௌலவிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் பெறுங்கள். அவரால் அபகரிக்கப்பட்ட மூன்று வீடுகளுக்கும் பதிலாக நான் மூன்று வீடுகளைத் தருவேன். அவரை இனியும் நீதிமன்றத்திற்கு ஏற்றுவது உங்களுக்கும், நமதூருக்கும் அழகல்ல. நீங்கள் தயவு செய்து வழக்கை வாபஸ் பெறுங்கள். நான் அழ்ழாஹ்வின்மீது சத்தியமாக சுனாமி நிவாரணமாகக் கட்டப்படும் வீடுகளில் மூன்று வீடுகளை உங்களுக்குத் தருவேன் என வாக்குறுதியளித்தார்.
அதன்படி நாங்கள் அந்த வழக்கை வாபஸ் பெறுவதற்குச் சம்மதித்து முறைப்படி வாபஸ் வாங்கினோம். அப்துர் றவூப் மௌலவியின் மகன் ஸெய்னி தஹ்லானும், கொழும்பு ஃபெயர் லங்கா ட்ரவல்ஸ் நிறுவன உரிமையாளர் மஹ்றூப் ஹாஜியாருமாக வழக்குச் செலவுத் தொகையாக எமக்குத் தந்த இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் புதிய காத்தான்குடி எச்.ஐ. புரத்தில் ஒரு காணியை வாங்கி றஹீம் மௌலவி என்பவரின் பெயருக்கு எழுதிக் கொடுத்த பின்னர்தான் அக்காணியில் அவர் எமக்கு ஒரு வீட்டைத் தந்தார்.
அந்த வகையில் எமக்கு இன்னும் இரண்டு வீடுகளை அவர் தர வேண்டும். இந்தப் பிணக்கு இம்மையில் அவரால் தீர்;க்கப்படாவிட்டால் மறுமையில் அழ்ழாஹ்வின் சந்நிதானத்தில் எடுத்துக்கொள்ளப்படும். எனது இந்த வழக்கை எதிர்கொள்ளாமல், தீர்த்து வைக்காமல் அவர் மறுமையில் சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ தப்பிச் சென்று விட முடியாது.
எமக்கு வாக்குறுதியளித்து றவூப் மௌலவியை சட்டத்தின் பிடியிலிருந்து தந்திரமாகத் தப்ப வைத்த சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ், இன்றிரவே அவரது வாக்குறுதியை நிறைவேற்றத் தயார் என்றால் உடனடியாகவே நானும், எனது மனைவியும் அவர் அழைக்கின்ற இடத்திற்கு வருவதற்குத் தயாராக உள்ளோம. அப்படியல்லாமல் அவரை நம்பி அவரைச் சந்திக்க என்னால் வர முடியாது என்றும் நான் சகோதரர் நௌஷாத்திடம் உறுதியாகத் தெரிவித்தேன்.
இதற்கு பதிலளித்த நௌஷாத், சரி. நீங்கள் அவரைச் சந்திக்க வர வேண்டாம். அவர் உங்களைச் சந்திக்க உங்களின் வீட்டுக்கு வந்தால் நீங்கள் அவருடன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்? எனக் கேட்டார்.
எமது வீட்டுக்கு அவர் வந்தால் நாம் மனிதத்தன்மையுடன் வரவேற்போம் என்றேன்.
நாங்கள் இன்றிரவு 11:00 மணியளவில் உங்களின் வீட்டுக்கு வந்து உங்களைச் சந்திக்கிறோம் என்றார் நௌஷாத்.அதன்படி பதினொரு மணி தாண்டிய சில நிமிடத்தில் சகோதரர் நௌஷாத் மாத்திரம் அவரது வெள்ளை நிறக் காரில் வந்திறங்கினார். வேறு வாகனங்கள் எதுவும் வீதியில் காணப்படவில்லை. அவரை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டதும் தெருக்கதவை மூடினேன். ஆவரை அமரச் சொன்னபோது, அங்கிருந்த கதிரையில் அமராமல் முன் விறாந்தாவில் கட்டப்பட்டிருந்த சீமெந்துக் கட்டில் அவர் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டார்.
ஒரு ஐந்து நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் கதவு தட்டப்பட்டது. சேர் வந்து விட்டார் போலும் என்றார் நௌஷாத். நான் சென்று தெருக்கதவைத் திறந்தேன். சகோதரர் ஹிஸ்புழ்ழாஹ்வும், அவருடன் வந்தவர்களும் முன்னே நின்றவாறு எனக்கு ஸலாம் கூறினார்கள். நானும் அவர்களுக்கு பதிலுரைத்து விட்டு, வாருங்கள் என கைலாகு கொடுத்து வரவேற்றேன்.
உங்ளே வந்த ஹிஸ்புழ்ழாஹ் என்னை ஆரத்தழுவி நெஞ்சணைய இரு கைகளாலும் இறுக அணைத்துக் கொண்டார். நானும் அவ்வாறே அவரைத் தழுவிக் கொண்டேன். நான் அவரது அணைப்பிலிருந்து விடுபட்டபோது, பின்னால் நின்று கொண்டிருந்த மும்தாஸ் மௌலவியும் என்னை அணைத்து தழுவிக் கொண்டார். பின்னர் எல்லோரும் ஆசனங்களில் அமர்ந்தோம்.
‘இதென்ன.. வடிவான கட்டொன்று கட்டியிருக்கிறீர்கள்?’ என ஹிஸ்புல்லாஹ் பேச்சைத் தொடங்கினார்.
‘ஓம்.. தலைக்குள் அலுப்புத் தடட்டும்போது சற்று நேரம் இதில்தான் வந்து சாய்ந்து எழுவேன். இந்தக் கட்டின்மீது ஏறி நின்றுதான் மேலே கட்டப்பட்டிருந்த பிடவைச் சுருளுக்குள் இருந்து காத்தான்குடி பொலிசார் கஞ்சாப் பார்சலை எடுத்து என்னைக் கைது செய்துகொண்டு போனார்கள்’ என்று நானும் தொடர்ந்தேன்.எனது வீட்டில் கஞ்சா கைப்பற்றப்பட்ட கதையைக் கேட்டதும் அவரது முகபாவம் மாறியதை அப்போது நான் அவதானிக்கத் தவறவில்லை. குற்றமுள்ள மனது குறுகுறுக்கும்தானே..?
‘மிகவும் மெலிந்து விட்டீர்கள் போல் தெரிகிறது..?’ என்று நான் பேச்சைத் திருப்ப, நௌஷாத், மும்தாஸ், காலிதீன் எல்லோருமாகக் கதைத்து சூழலைக் கலகலப்பாக்கினர்.
இந்த நேரத்தில் எனது மூன்றாவது மகளின் கணவர் நஸீர் முன்வறாந்தாவுக்கு வந்தார். அவரை நான் அறிமுகப்படுத்தினேன். இருவரும் கைலாகு செய்து கொண்டனர். அங்கிருந்த ஆசனமொன்றில் அவரும் அமர்ந்து கொண்டார்.
பின்னர் எனது இளைய மகன் அங்கு வந்தார். அவரையும் ஹிஸ்புழ்ழாவிடம் அறிமுகப்படுத்தினேன்.
இன்றுதான் உயர்தரப் பரீட்சை எழுதத் தொடங்கியுள்ளார் என்றபோது, அவரது கல்வி மற்றும் பரீட்சைகள் தொடர்பாக சில நொடிகள் அவருடன் ஹிஸ்புழ்ழாஹ் உரையாடினார்.
எனது மருமகன் நஸீர் என்னையும், ஹிஸ்புழ்ழாஹ்வையும் மிகவும் வியப்புடன் பார்த்தார். அதைக் கவனித்த நான், ‘என்ன..? எங்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்கள்..? எங்களிருவரையும் ஊரிலுள்ளவர்களும், வெளியூரவர்களும் எப்படி வித்தியாசமாகப் பார்த்தாலும் நானும், இவரும் இந்த ஊரில் ஒன்றாக, ஒரே சைக்கிளில் ஓடித்திரிந்து பொது வேலை செய்தவர்கள்தான். இவரை சைக்கிள் பாரில் ஏற்றிக் கொண்டு நான் மட்டக்களப்புக் கச்சேரிக்கு தினமும் மிதித்துச் செல்வேன். அப்படி நெருக்கமாகப் பொது வேலையை ஆரம்பித்தவர்கள்தான் நாங்கள்’ என்று ஆரம்பித்து, முன்னாள் அமைச்சர் டாக்டர் பரீட் மீராலெப்பை அவர்கள் முதன் முதலாக புதிய காத்தான்குடி கிராம அபிவிருத்திச் சங்கத்தை ஆரம்பித்து அதற்குத் தலைவராக ஹிஸ்புழ்ழாஹ்வும், நான் செயலாளராகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு பொதுப்பணி செய்த வரலாற்று நிகழ்வுகளை எனது மகன், மருமகன் உட்பட அங்கிருந்த அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்தேன்.
தொடர்ந்து, ‘நீங்கள் செலிங்கோ கடனை எல்லாம் கொடுத்து முடித்து விட்டதாக நௌஷாத் என்னிடம் கூறினார். அதற்கான ஆதாரங்களைத் தருவதாகவும் சொன்னார். எடுத்து வந்துள்ளீர்களா? எனக் கேட்டேன். பக்கத்திலிருந்த பத்திரிகை போன்ற ஒன்றில் ஹிஸ்புழ்ழாஹ் கை வைத்தபோது, மும்தாஸ் மௌலவி வேறு பிரச்சினையொன்றைக் கதைக்க அவரும் கையை எடுத்துக் கொண்டு அவரது பேச்சில் கவனம் செலுத்தினார். ஆதாரங்களை அவர் தரவில்லை.
பின்னர் என்னைப் பார்த்து, ‘எனக்கு துஆ செய்து கொள்ளுங்கள்’ என்றார் ஹிஸ்புழ்ழாஹ்.
‘என்னால் மனம் வைத்து உங்களுக்கு துஆச் செய்ய முடியாது. காரணம், நீங்கள் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரின் முக்கியமான குட்வின் சந்தியில் வைத்து ஊர்மக்கள், உலமாக்கள் முன்னிலையில் என்னை ‘லஃனதுழ்ழாஹ்’ என்று சபித்துப் பேசியிருக்கிறீர்கள். எனது பத்திரிகையை வாங்கி எனக்கு முன்னாலேயே கிழித்து எனது முகத்தில் வீசி எறியுமாறு உங்களது உள்ளுர் வானொலியில் கேட்டிருக்கிறீர்கள்.’‘றவூப் மௌலவிக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த காணி அபகரிப்பு குற்றவியல் வழக்கை, எமக்கு மூன்று வீடுகள் தருவதாக வாக்குறுதி தந்து வாபஸ் பெறச் செய்து ஏமாற்றியுள்ளீர்கள். உசைன் பைலா போன்ற உங்களின் அடியாட்களை வைத்து என்னைத் தாக்கச் செய்துள்ளீர்கள். காத்தான்குடி பொலீசாரை ஏவி விட்டு எனது வீட்டில் கஞ்சா இருந்ததாகப் பிடிக்கச் செய்து வஞ்சம் தீர்;த்திருக்கிறீர்கள். இப்படியெல்லாம் என்மீதும், எனது குடும்பத்தினர் மீதும் அரசியல் அதிகாரத்துடன் அடாவடித்தனம் செய்த உங்களுக்கு எப்படி என்னால் துஆச் செய்ய முடியும்?’ என்று நயவஞ்சகத்தனம் இல்லாமல் அவரது முகத்துக்கு நேரே நான் பதில் கேள்வி எழுப்பினேன்.
மும்தாஸ் மௌலவி உட்பட அங்கிருந்த அனைவரும் எனது பதிலால் வாயடைத்துப் போய் மௌனமாக இருந்தனர். பின்னரும் நானே பேச்சைத் தொடர்ந்தேன்.
‘நான் 2000மாம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டது, உங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 1989 மற்றும் 1994 தேர்தல்களில் வென்ற நீங்கள் எம்.பி.யாகவும், பிரதியமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் அப்துர்றவூப் மௌலவியின் பள்ளிவாசலுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என்பதற்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகவே அப்போது அவரது ஆதரவாளனாக இருந்த நான் 2000மாம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். அவ்வேளையிலும் றவூப் மௌலவி முனாபிக்தனமாகவே நடந்து கொண்டார். தான் இனிமேல் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென்றும், தனது ஆதரவாளர்கள் அவரவர் விரும்புவோருக்கு ஆதரவளிக்கலாம் என்றும் மஞ்சள் கலரில் நோட்டீஸ் ஒன்றை அடித்து அறிவித்தார்.’
‘அதற்கமைய பெரிய சமது மௌலவி, சின்ன சமது மௌலவி, சுப்யான் மௌலவி போன்ற உலமாக்களும், ஆதரவாளர்களும் என்னை ஆதரித்து அந்தத் தேர்தலில் வேலை செய்தனர். நான் 934 வாக்குகளைப் பெற்றேன். 20,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்ற நீங்கள், 550 விருப்பு வாக்குகள் குறைந்ததினால் தோல்வியடைய, ஓட்டமாவடி முகைதீன் அப்துல் காதர் எம்.பி.யானார்.’
‘இப்போது உங்களை றவூப் மௌலவி தரப்பினர் தெய்வமாக மதித்து ஆதரிக்கின்றனர். 1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் உங்களை ஆதரிப்போம் என்று நான் குல்லிய்யா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியபோது, இப்றாகீம் மௌலவி என்னைப் பார்த்து, ‘நீங்கள் ஹிஸ்புழ்ழாஹ்வோடு போய்ப்படுங்கள்’ என்று கூறினார். இப்போது அவர் உங்களைப் புகழ்ந்து கவிதைகள் படிக்கின்றார். நான் 1994ம் ஆண்டுத் தேர்தலில் உங்களுக்கு ஆதரவளித்து, ‘நமது மகன் ஹிஸ்புழ்ழாஹ்’ என்ற பெயரில் ஒரு திரைப்படமும் தயாரித்து வெளியிட்டு, இந்த மாவட்டம் முழுவதும் திரையிட்டு உங்களை வெற்றி பெறச் செய்தேன்.’
‘நீங்கள் இப்போது றவூப் மௌலவியின் பள்ளிவாசலை பல மாடங்களாகக் கட்டுவதற்கு உதவி செய்கிறீர்கள். றவூப் மௌலவியின் பள்ளியை மட்டுமல்ல, இந்த ஊரிலுள்ள பள்ளிவாசல்களை எல்லாம் நீங்கள் தங்கத்தால் வார்த்துக் கட்டியெழுப்பிய போதிலும் எனது குமர்களுக்குரிய இரண்டு வீடுகளையும் தராமல் மறுமையில் உங்களால் என்னிடமிருந்து தப்ப முடியாது. முதலில் நீங்கள் அடியார்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் அழ்ழாஹ்விடமிருந்து உங்களால் தப்ப முடியும்.’
‘கடனாளிகள்மீது இரக்கம் காட்டுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. கடன்பெற்றவர் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையிலிருந்தால் அதனை அழ்ழாஹ்வுக்காக விட்டுக் கொடுக்குமாறும் நமது மார்க்கம் கூறுகிறது. நீங்கள் உங்களின் மனைவிக்காகப் பிணை நின்று செலிங்கோ நிதியத்தில் அவருக்கு மில்லியன் கணக்கில் கடன் பெற்றுக் கொடுத்தீர்கள். உண்மையில் நீங்களும், உங்களின் மனைவியும் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருந்தால் நானுட்பட இந்த ஊரும், முஸ்லிம் சமூகமும் உங்கள் மீது இரக்கம் காட்டி அந்த விடயத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அந்த நிலைமைக்கு ஆளாகவில்லை. இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறீர்கள்.’
‘ஆனால் 2000மாம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு நான் இப்படிக் கடனாளியாகி, தலைமறைவாகி இருந்தபோது அப்துர் றவூப் மௌலவி எனது குடும்பத்தின்மீது மார்க்க வரையறையை மீறி அடர்ந்தேறினார். காலஞ்சென்ற அவரது ஆதரவாளர் ஜலால்தீன் ஹாஜியார் கைத்துப்பாக்கியைக் காட்டி எனது மனைவியை மிரட்ட, அவளுக்குச் சொந்தமாக இருந்த மூன்று ஆதனங்களையும் அப்துர் றவூப் மௌலவி தனது பெயருக்கு அச்சுறுத்தி எழுதிப் பெற்றுக் கொண்டார்.’
‘அந்த நிர்க்கதியான நேரத்தில், ‘நான் பெண்பிள்ளைக்காரி.. சில தகரங்களை எடுத்துக் கொண்டு காணியை விட்டு வெளியேறுகிறேன்’ என்று றவூப் மௌலவியிடம் எனது மனைவி அழுது கெஞ்சிக் கேட்டபோதும் அவரது கல்நெஞ்சு கரையவில்லை. உடுத்த பிடவையுடன் எனது மனைவி, மக்களை அவர் வெளியேற்றினார். எனது கடன் விவகாரத்தில் இப்படித் தலையிட்ட றவூப் மௌலவி, உங்களின் செலிங்கோ கடன் விடயத்திலும் இவ்வாறு தலையிட்டு உங்களின், உங்களின் மனைவியின் ஆதனங்களைப் பெற்று விற்று கடன்காரர்களுக்குக் கொடுத்திருந்தால் அவரது செயற்பாடு நியாயமாக வரலாற்றில் பதிவாகியிருக்கும். ஆனால், அவர் ஆளுக்கொரு வகையாக நடந்து கொண்டிருப்பதன் மூலம் அவரை ஓர் மார்க்க அறிஞராக அன்றி அநீதியாளராகவே நான் பார்க்கின்றேன்.’
‘அதுமட்டுமல்ல, எனது மகளின் திருமணத்தையும் அப்துர் றவூப் மௌலவியே பிரித்து வைத்தார். அதனால்தான் அவரது மகளின் மண வாழ்க்கையையும் அழ்ழாஹ் பின்னாளில் பிரித்து வைத்து, தானே நீதியாளருக்கெல்லாம் மாபெரிய நீதியாளன் என்பதை என் கண் முன் நிரூபித்தான்.’
‘முன்னாள் காதி நீதிபதி காலித் ஹாஜியார் இப்போதும் உயிரோடிக்கின்றார். நீங்கள் அவரிடம் சென்று கேட்டுப் பாருங்கள். மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்த நான் ஊர் திரும்பி றவூப் மௌலவிக்கு எதிராக வழக்கு வைத்த பின்னர் காதி நீதிபதி என்னைக் கண்டபோது, ‘றவூப் மௌலவி மட்டும் எனக்கு கடிதம் எழுதாமல் இருந்தால் நான் உங்கள் மகளுடைய திருமணத்தைப் பிரித்திருக்க மாட்டேன்’ என்று அவர் சொன்னார். இதுவெல்லாம் எவ்வளவு பெரிய அநியாயம்? இவர்களெல்லாம் அழ்ழாஹ் பொருந்திக்கொள்ளும் நீதிமான்களா? இருந்து பாருங்கள். இம்மையில் இவர்களெல்லாம் எப்படி மோசமான நிலைமைக்குள்ளாகி மரணிப்பார்கள் என்பதை.’
‘எனது வீட்டில் கஞ்சா இருந்ததாகப் பொலீசார் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைகள் முடிந்து விட்டது. இன்ஷா அழ்ழாஹ் வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி அதன் தீர்;ப்பு வெளியாகும். உங்களின் மகன் வெளிநாட்டுப் பெண்களுடன் கூத்தடித்துத் திரிகின்றார் என்பதைப் படம் போட்டு பத்திரிகையில் வெளிப்படுத்திய என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காத்தான்குடிப் பொலீசாரை ஏவி விட்டு இந்த இடத்தில்தான் கஞ்சா இருந்ததென்று அவர்கள் எடுத்துக்காட்டி என்னைக் கைது செய்தது எவ்வளவு மோசமான செயல். இப்படியெல்லாம் என்னைப் பழிவாங்கிய உங்களுக்கு நான் எப்படி துஆச் செய்ய முடியும்?’
‘ஏதோ.. உங்களுக்கு இறைவன் மீண்டும் இந்த மாவட்டத்தில் ஆட்சியதிகாரம் செய்யும் வல்லமையைத் தந்தால் நீங்கள் மக்களுடன் நீதியாக நடந்து கொள்ளுங்கள். நல்லாட்சியைத் தொடருங்கள்.
மரணத்தையும், மறுமையையும் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது பத்திரிகை வெளிவருவதற்கு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும், உங்களது செலிங்கோ கடனைக் கொடுத்ததாச் சொல்லும் விடயத்திற்கு ஆதாரங்கள் தந்தாலும், தராவிட்டாலும் இறைவன் நாடுகின்றபோது இந்த மண்ணில் என் மூலம் இப்பத்திரிகையை வெளிப்படுத்துவான். அதை உங்களாலோ, வேறு எவராலுமோ ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.’
‘நான் கடந்த பத்து வருடங்களாக இந்த மண்ணைத் தளமாகக் கொண்டு அநீதிக்கும், அக்கிரமங்களுக்கும் எதிரான மக்களின் குரலாகவும், நீதி நேர்மைமிக்க நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற இலட்சியத்துடனும் எனது பத்திரகை மூலம் போராடி வருபவன். அவ்வாறான காலம் ஒன்று இந்த நாட்டிலும், நமது மாவட்டத்திலும் இப்போது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் உங்களை என்னால் ஆதரிக்க முடியாது. நயவஞ்சகத்தனமாக என்னால் பேசவும் முடியாது. நீங்கள் விரும்பினால் என்னை றஹ்மதுழ்ழாஹ் என்று அழைக்கலாம். நானும் உங்களை ஹிஸ்புழ்ழாஹ் என்று அழைப்பேன். நீங்கள் என்னை ‘லஃனதுழ்ழாஹ்’ என்றால் நானும் உங்களை ‘ஹிஸ்புஷ்ஷைத்தான்’ என்றுதான் சொல்வேன். – என வெளிப்படையாக மனந்திறந்து கதைத்தேன்.
தேநீர் குடிப்போம் என்றேன். இல்லை வேண்டாம்.. இப்போதுதான் ஏறாவூரில் குடித்து விட்டு வருகிறோம் என்று கூறியவாறு எழுந்தார் ஹிஸ்புழ்ழாஹ். ஏனையோரும் ஆயத்தமானார்கள். வாசல் வரைக்கும் சென்று அவர்களை வழியனுப்பி வைத்தோம்.
அத்துடன் இச்சந்திப்பின் சூத்திரதாரியான நௌஷாத்தின் தொடர்பு இல்லாமலானது. மறுநாள் 05ம் திகதி தொலைபேசியில் அவரைப் பிடித்தபோது, ஏறாவூருக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், ஊர் திரும்பியதும் தொடர்பு கொள்வதாகவும் சொன்னார்.
அன்றிரவு அவருக்கு ஒரு ளுஆளு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். ‘நேற்று பேப்பர் வெளிவர வேண்டுமென்பதில் நீங்கள் காட்டிய ஆர்வம், நீங்கள் தருவதாகச் சொன்ன ஆதாரம், வாக்களித்த உங்களின் சொந்த நிதியுதவி என்பவை குறித்து இன்றைய நிலைப்பாடு என்ன? தயவு செய்து உடன் பதில் தரவும்’ –
இதுதான் அந்த குறுஞ்செய்தியின் சாராம்சம்.
அதற்கு, இப்பத்தி வரையும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை காலை வரை மௌனமே பதில்.
இப்போது எனக்குள் ஒரு சந்தேகம். ஒரு வேளை இந்த நௌஷாத் என்பவரைப் பயன்படுத்தி, மார்க்கட் குத்தகையாளர் காலிதீன் மூலம் தொடர்பை ஏற்படுத்தி, என்னை ஹிஸ்புழ்ழாஹ்வின் இடத்திற்கு வரவழைத்துச் சந்திக்க வைத்து, எனக்கும் சில மில்லியன்களைத் தந்து விட்டதாக ஊருக்குள் தனது வழக்கமான பொய் மூட்டைகளில் ஒன்றை அவிழ்த்து விடுவதற்கு ஹிஸ்புழ்ழாஹ்வும், மும்தாஸ் மௌலவியும் சேர்ந்து மேற்கொண்ட சதி நடவடிக்கையாக இது இருக்குமோ? என்பதுதான் அந்தச் சந்தேகமாகும்.
‘அழ்ழாஹ் சூழ்ச்சிக்காரர்களில் எல்லாம் மகா சூழ்ச்சிக்காரன்’ என்ற இறைவாக்கை யாவரும் மறக்காதிருப்போமாக!
Published by


Leave a comment