-
ராசி
தோப்பூர்: இம்மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வில் மலர்ச்சியும் அபிவிருத்தியும் உண்டாக வேண்டும் அதில் முன்னேற்றம் காண்பதே ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றி என தோப்பூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இம்ரான் மகரூப் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது கிராமப் புறங்களில் வாழ்கின்ற மக்களை இதற்கு முன்பு வந்த அரசியல் வாதிகள் வாக்குகளை வழங்குகின்ற இயந்திரங்களாகவே பயன்படுத்தி வந்தார்களே தவிர அவர்களின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் எந்தவிதமான பங்களிப்புக்களும் செய்யவில்லை. உங்கள் வாக்குகளினால் வெற்றி பெற்ற அவர்களின் பார்வையில் அது தென்படவுமில்லை என்பதை இன்று நாம் காணக்கூடியதாகவே உள்ளது.
உங்கள் வாக்குகளினால் பாராளுமன்றம் செல்லும் அரசில்வாதிகளினால் எந்தவிதமான பலனும் கிடைக்காத போது அவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களை வழங்கி பாராளுமன்றம் அனுப்புவதில் எந்தவிதமான பயனையும் இனியும் அடையப்போவதில்லை. ஆகவேதான் மலர்ந்திருக்கும் இந்த எழுச்சி மயமான நல்லாட்சிக்கான அரசியல் பயணத்தில் நீங்களும் இணைந்து பயணிக்க தயாராக வேண்டுமென இந்தத்தருணத்தில் உங்களிடம் நான் கூறிக்கொள்கின்றேன்.
பாராளுமன்றத்தை அலங்காரப்படுத்தவோ, பெயருக்கு பின்னால் கௌரவ அடைமொழிக்காகவோ, சொகசு வாழ்வுக்காகவோ நான் உங்களிடம் பேசவில்லை சந்தர்ப்பத்தை வழங்குங்கள் அதன் பயனையும், பலனையும் இம்மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும் படி நான் செய்து காட்டுகின்றேன். அப்போதுதான் உங்களுக்கு தெளிவாக புரியும் ஏன் இவ்வளவு காலமும் கண்மூடித்தனமாக இருந்தோமென அவ்வாரான ஒரு செயலை இனியும் செய்யாமல் இருப்பதோடு இந்தமுறை வாக்களிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய தலைமுறைக்கு சந்தர்ப்பத்தை நீங்களாகவே வழங்குவீர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார். இதன் போது தேப்பூர் பிரதேச மூத்த ஐக்கிய தேசிய கட்சி அரசில்வாதிகள், அரசியல் பிரமுகர்கள், புத்தஜீவிகள், ஏராளமான அரசியல் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Leave a comment