கிழக்கு ஊடக சங்கம் விடுக்கும் கண்டன அறிக்கை: 05.08.2015
நேற்று (04.08.2015) செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீ.ல.மு.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பொறியியலாளர் ஷிப்லி பாறூக், அவரது காத்தான்குடி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது அங்கு சமூகமளித்திருந்த ‘இம்போர்ட்மிரர்’ இணையதளத்தின் செய்தியாளர் மிஸ்பான் என்பவர், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் எழுப்பிய கேள்விகள் தொடர்பில் அங்கு சமூகமளித்திருந்த மற்றுமொரு உள்ளுர் ஊடகவியலாளரான ரி.எல். ஜௌபர்கான் என்பவர் அவரது அதிருப்திகளைத் தெரிவித்து குறுக்கீடு செய்ததுடன், இச்சந்திப்பு முடிவடைந்து ஊடகவியலாளர்கள் வெளியேறிய சமயத்தில் ‘இம்போர்ட்மிரர்’ செய்தியாருடன் அவர் மீண்டும் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கவும் முற்பட்டதாக சக ஊடகவியலாளரால் எமது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த அநாகரிகமான குறுக்கீடு, அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் முயற்சிச் செயற்பாடுகள் குறித்து கிழக்கு ஊடக சங்கம் தனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கின்றது.
இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி. சிவகீர்த்தா பிரபாகரன் ‘ஈஸ்ட்லகூன்’ ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதும் சக ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்கள் தொடர்பிலும் உள்ளுர் ஊடகவியலாளரான ரி.எல். ஜௌபர்கான் இடையூறு செய்து பதிலளிக்க முற்பட்டதாகவும், ஊடக சந்திப்புக்களில் அவ்வாறான கேள்விகளைக் கேட்கக் கூடாது என அறிவுறுத்தியதாகவும் எமது சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
ஊடக சந்திப்புக்களின்போது அவற்றை ஏற்பாடு செய்பவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற முனையும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை இவ்வாறெல்லாம் இடையூறு செய்து தடுக்க முனைவதும், ஏற்பாட்டாளர்கள் சார்பில் பதிலளித்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவதும் ஊடக தர்மமாகாது என்பதை நாம் வலியுறுத்த விரும்புவதோடு, தமது புஜபல பராக்கிரமத்தால் நிராயுதபாணிகளாக சமூகமளிக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி தாக்கியடக்க முனைகின்ற பேடித்தனமான செயற்பாடுகளையும் எமது சங்கம் உலகெங்கும் ஓங்கியொலிக்க இத்தால் கண்டிக்கின்றது.
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(தலைவர்)
வீ. பத்மசிறீ
(பொதுச் செயலாளர்)

Leave a comment