“வறுமையை முழுமையாக உணர்ந்தவன் நான்”: ஹிஸ்புல்லாஹ்

Hizbulla– எம்.ஐ.அப்துல் நஸார்

காங்கேயனோடை: நேற்றிரவு (02) காங்கேயனோடையில் ஏ.சீ.எம்.றிபாய் மௌலவியின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாம் உலமாக்களுக்காக ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்டியிருக்கிறோம். வருடாந்தம் சுமார் 3500 மௌலவிமார் மதரசாக்களிலிருந்து வெளியேறி எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எமக்கு முன்பிருந்த அரசியல் தலைவர்கள் அர்ப்பணிப்போடு முயற்சி செய்தார்கள். எமது நோக்கத்தை அல்லாஹ் அங்கீகரித்தான். நாம் உலமாக்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கினோம். ரிதிதென்ன பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியில் பாரிய பல்கலைக்கழகமொன்றை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.

என்மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். நான் இலஞ்ச ஊழல் செய்யாமல் இருப்பது இவர்களுகாக அல்ல. எம்மைப் படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கின்ற அல்லாஹ்வுக்கு பயந்துதான்.

நான் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஒரு ஆலிமுடைய மகன். நான் எட்டாம் வகுப்புப் படிக்கின்றபோது கடையில் வேலை செய்தவன். வறுமையை முழுமையாக உணர்ந்த ஒருவன். எனது வாழ்க்கையை உயர்த்துவதிலே எனது சிறிய வயதில் மிகவும் கஷ்டப்பட்டவன்.

என்னுடைய மக்கள் என்னை அளவு கடந்து நேசிக்கிறார்கள். நானும் அவர்களை மிகவும் நேசிக்கின்றேன்.
புலிகளுடைய அட்டகாசத்தின் காரணமாக அரசியலுக்கு யாரும் முன்வரவில்லை அப்போதுதான் நான் முன்வந்தேன். எனது அரசியல் வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது கிடையாது.

இலங்கை அரசாங்கத்தோடு மாத்திரமல்லஇ சவூதி அரசாங்கத்துடனும் நாம் உறவுகளை பேணிவருகின்றோம். நாம் இப்போது தான் ஒப்பந்தங்களைச் செய்து வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலத்தில் இன்னும் பன்மடங்கு வேலைகளை செய்யவிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் மகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மீனவ சங்கத் தலைவர் கையூம், கணக்காளர் பௌஸான் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் பெருந்திரளான ஆதரவாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

Published by

Leave a comment