கோலாலம்பூர்: இந்தியப் பெருங்கடலிலுள்ள ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான சிதிலங்கள், பெரும்பாலும் கடந்த ஆண்டு காணாமல் போன மலேஷிய விமானம் எம் எச் 370இன் பாகங்களாக இருக்கக்கூடும் என்று மலேஷிய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் விடுத்திருக்கும் அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விமான சிதிலங்கள், மேலதிக ஆய்வுகளுக்காக பிரான்ஸில் இருக்கும் தவ்லோஸுக்கு கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகம் விமான இறக்கையின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது. கிடைத்திருக்கும் விமான சிதிலம் காணாமல் போன மலேஷிய விமானம் எம் எச் 370இன் பாகம் தானா என்பது அங்கே ஆராயப்படும்.
ஒரு விமானத்தின் எல்லா பாகங்களிலும் அந்த விமானத்தின் வரிசை எண் பதிந்திருக்கும் என்பதால் அது எந்த விமானத்தின் பாகம் என்பதை விரைவாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
தென் பிராந்திய கடல் பகுதியில் எந்த ஒரு போயிங் 777 வகை விமானமும் இதுவரை விபத்துக்குள்ளானதில்லை.
தற்போது விமானத்தின் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்கு கிழக்கே 6000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தான் தேடுதல் பணியின் கவனம் குவிந்து இருந்தது. அந்த பகுதியிலிருந்து விமானத்தின் சிதிலங்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விமானத்தில் 239 பேர் பயணித்திருந்தனர்.
இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

Leave a comment