காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், அக் கட்சியின் மட்டக்களப்பு மவட்ட மகளிர் அணி பொறுப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் பெண்கள் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்ஸா
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (30) முற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு வழங்கும் தனது தீர்மானத்தை அறிவித்தார்
சல்மா அமீர் ஹம்ஸா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை போட்டியிட வைக்கவில்லை. புதிதாக இணைந்தவர்களையும் செல்வாக்குக் குறைந்தவர்களையும் போட்டியிட வைக்க வேண்டாம் என பல தரப்பினராலும் கோரபட்ட போதும் அந்த விடயம் கருத்தில் எடுக்கப்படவில்லை. காத்தான்குடிக்கு உரிய இடமும் அளிக்கப்படவில்லை.
எமதூரின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக இந்த ஊரின் நன்மை கருதி எதிர்வரும் பொதுத் தேர்தலிலே ஹிஸ்புல்லாஹ்வின் கரத்தை பலப்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் எமக்கு கசப்பான பல அனுபவங்கள் உள்ளன. நாம் அந்தக் கட்சிக்காக மிகவும் கஷடப்பட்டு உழைத்துள்ளளோம். ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு வீதியையேனும் எம்மால் போட முடியவில்லை. வேலைவாய்ப்புக்களை வழங்க முடியவில்லை அத்துடன் பெண்களுக்கான எந்தவித தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை.
அபிவிருத்திக்கு அரசாங்கத்தின் பணத்தினை மாத்திரம் நம்பி இருக்காது, அரபு நாடுகளிலிருந்து நிதிகளை கொண்டுவந்து இன, மத, பிரதேச வேறுபாடுகளைப் பார்க்காது பணியாற்றுகின்ற இவ்வாறான சகோதரருடன் இணைந்து அவரை வெற்றிபெறச் செய்வதில் உறுதியாக இருக்கின்றோம். இன்னும் பல முக்கியஸ்தர்கள் எம்முடன் வந்து இணைய இருக்கின்றார்கள்.
இது ஒரு முக்கியமான தேர்தலாகும். தேசிய ரீதியில் எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் பெண்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற இப் பிரதேசத்தில் அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக பெண்கள் மாற வேண்டும். எம்மிடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை மறந்து நாம் செயற்பட வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாஹ் உரை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹிஸ்புல்லாஹ் இங்கு உரையாற்றுகையில், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா அவர்கள் எம்மோடு இணைந்து இந்தத் தேர்தலில் எமக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களது இந்தத் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பான நாம் மிக மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்கின்றோம்.
பல்வேறுபட்ட சமூகப் பணிகளிலும் குறிப்பாக பெண்களது அபிவிருத்தியில், அரசியல் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருக்கும் சல்மா அமீர் ஹம்ஸா அவர்கள் எம்மோடு இணைந்திருப்பது எமது வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றும் என நம்புகிறோம்.
இந்த மாவட்டத்தில் எமது வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு அரசியல் பிரமுகர்கள் வர்த்தகர்கள், உளளூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் போன்றோர் எம்மோடு இணைந்து நாளுக்கு நாள் அணிதிரண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆந் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு இந்த நாட்டு மக்கள் அளித்த ஆணையின் படி அந்த நல்லாட்சியை எதிர்வரும் 18ஆந் திகதி இந்த நாட்டிலே நிறுவி எதிர்வருகின்ற ஆறு ஆண்டுகளுக்கு இந்த நாட்டிலே ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடன் அவர் எடுத்து வருகின்ற அயராத முயற்சிக்கு கைகொடுத்து அவருடைய அணி வெற்றி பெறுவதன் மூலம் இந்த நாட்டிலே நீதியானதொரு ஆட்சியை உருவாக்குவதற்காக நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலே வெற்றிலைச் சின்னத்திலே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடைய அணியிலே போட்டியிடுகின்றோம்.
எனவே எமது வெற்றி என்பது இந்த நாட்டிலே நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கான வெற்றி. நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுடைய அணியிலே போட்டியிடுகின்றவர்களை வெற்றிபெறச் செய்வதென்பது இந்த நாட்டிலே சிறந்ததொரு ஜனநாயக நல்லாட்சியை உருவாக்குவதற்கு நீங்கள் இடுகின்ற அடித்தளமாகும்.
அமீர் ஹம்ஸா அவர்கள் இந்தப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கிழந்து நலிவுற்றிருந்த நிலையில் அந்தக் கட்சிக்குச் சென்று அதற்காக உழைத்தார். கடந்த நகர சபைத் தேர்தலில் ஒரேயொரு ஆசனத்தை அந்தக் கட்சி பெற்றது. அதில் தெரிவு செய்யப்பட்ட அமீர் ஹம்ஸா அவர்கள் கட்சிக்கு வலுவூட்டினார். அவர் சுமார் 600 ஆதரவாளர்களுடன் எம்மோடு இணந்துள்ளார் என தெரிவித்தார்.


Leave a reply to mohdrislan Cancel reply