கடந்த வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெற்ற SLMC-NFGG அரசயற் கூட்டணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMCவின் மரச்சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளருமாகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், தனதுரையின் மத்தியில் தனக்கு 6ம் வகுப்பில் இஸ்லாம் பாடம் கற்பித்த ஆசிரியர் ஒருவரைச் சந்தித்து
தான் தேர்தலில் போட்டியிடும் விடயத்தை தெரிவித்தபோது அவர் அதிருப்தியடைந்து, அரசியலானது நல்லவர்களையும் கெடுத்து விடும் எனக்கூறி கவலைப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது ஆசிரியருக்கு தற்போதைய அரசியற்களத்திலுள்ள அனுரகுமார திசாநாயக்க, சுமந்திரன் போன்ற அரசியலால் கெட்டுப்போகாத சில நல்லவர்களைப் பற்றி எடுத்துக்கூறி அவரைத் திருப்திப்படுத்திய விடயத்தையும் அப்துர் றஹ்மான் குறிப்பிட்டார்.
இந்த விபரங்களைச் செவியேற்ற எனக்கு, ‘கோமல் அன்பரசன்’ அவர்கள் எழுதிய ‘அரசியல் சாக்கடையா?’ எனும் தலைப்பிலான கட்டுரையைப் படித்தபோது மேலும் பல விளக்கங்களைத் தருவதாக அமைந்தது. அதனை நமது இணையதள வாசகர்களின் வாசிப்புக்காக இங்கே மீள் பதிவு செய்கின்றேன்.
அரசியல்: சாக்கடையா? – கோமல் அன்பரசன்
அரசியலா… அது ஒரு சாக்கடையில்ல…?
நம்மிடம் மிகச் சரளமாக புழக்கத்தில் இருக்கும் சொல்லாடல் இது. அதிலும் நடுத்தர வர்க்கத்தவரிடம் இந்த எண்ணம் ஆழ வேரூன்றிக் கிடக்கிறது. ஆனால், அரசியல் இல்லாமல் இங்கே என்னதான் நடக்கிறது? அல்லது நடந்து விட முடியும்?
காலையில் எழுந்திருப்பதில் இருந்து இரவு தூங்கப்போகும் வரையிலும் நாம் எதிர்கொள்கின்ற எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் அரசியல் இருந்து கொண்டுதானே இருக்கிறது? பொழுதுபோக்குக்காக பார்க்கின்ற திரைப்படம், தொலைக்காட்சி, படிக்கிற பத்திரிகைகள், சஞ்சிகைகள் எல்லாவற்றின் பின்னணியிலும் அரசியல்தானே ஒளிந்து கொண்டிருக்கின்றது?இப்படி நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றிலும் அரசியல் செறிந்து கிடக்கிறது. சில இடங்களில் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. மொத்தத்தில் நம் உணவை, உடையை, செயல்பாடுகளை முடிவு செய்வது எல்லாம் அரசியலே. நிறுத்தி, நிதானமாக யோசித்தால் இதிலுள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.
நம்முடைய வாழ்வை, நாம் விட்டுச் செல்லவிருக்கும் அடுத்த தலைமுறையின் வாழ்வியலை, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற அரசியலை, அது ஒரு சாக்கடை என வெகு எளிதாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கிறோம். இது எப்படிச் சரியாக இருக்க முடியும்?அட, அதற்காக என்ன செய்ய? எல்லோரும் தத்தம் வேலைகளை விட்டுவிட்டு, அரசியற்கட்சிகளில் ஐக்கியமாகி, கலர்கரை வேட்டிகளைக் கட்டிக்கொண்டு அரசியல் செய்யக் கிளம்பிடவா முடியும்? கொடி ஏற்றி முழங்கிடவா முடியும்? என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. அங்கேதான் பிரச்னை இருக்கிறது.
அரசியலைப் பற்றிய நம் சிந்தனை அப்படித்தான் மட்டமாக இருக்கிறது. ஒன்று நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும். இல்லையென்றால் அதில் மூழ்கி முத்து எடுக்க வேண்டும். நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசியலைப் பற்றிப் பேசவே பயப்படும் மனநிலைக்கு நாம் வந்த இந்த இடம்தான், நமது அரசியல் அவலமானதன் ஆரம்பம் எனலாம். நமக்கேன் அரசியல் என்று நாம் ஒதுங்கியதுதான், நிலைமை இத்தனை மோசமானதன் தொடக்கம்.
அதைப் பற்றி பேசவும், அதில் ஈடுபடவும் யாரோ சிலர் இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான், நம்மை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. முதலில் நாம் ஒதுங்கிக் கொண்டதால், அரசியல்வாதிகள் சகல அதிகாரமும் கொண்ட தனிச் சமூகமானார்கள். பிறகு அவர்களைப் பார்ப்பதற்கே பயப்படும் அளவுக்கு சூழல் மாறியது. கடைசியாக அந்த அரசியல்வாதி நம்மில் ஒருவர், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று சிந்திப்பதற்கே அஞ்சி, அவர்களைக் கண்டாலே நாம் தாழ்ந்து, பணிந்து தொழும் நிலைக்கு வந்து நிற்கிறோம்.
மேலை நாடுகள் பலவற்றில் வேலை அல்லது தொழில் செய்து கொண்டே அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். அங்கே யாருக்கும் இது முழு நேரத் தொழிலாக இருப்பதில்லை. அதனால், பணத்தைக் குவிப்பதற்கான வழிமுறையாகவும் அவர்கள் அரசியலைப் பார்ப்பதில்லை.
உலகத்தின் உச்சத்தில் இருக்கின்ற அமெரிக்காவில் இரண்டாவது முறையும் அதிபரான ஒபாமா, அடுத்த ஆண்டு தனது பதவிக் காலம் முடிந்த பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான பொருத்தமானதொரு வேலையை இப்போதே தேடிக் கொண்டிருக்கிறார். சுரியான வேலையொன்று கிடைக்காவிட்டால், தான் அதிபராவதற்கு முன்னர் செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவன ஆலோசகர் பணியை மீண்டும் தொடரலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது அங்கே புதிதல்ல. ஏனெனில், அமெரிக்க நாட்டின் சட்டப்படி இரு முறைக்கு மேல் ஒரே நபர் அதிபராகப் பதவி வகிக்க முடியாது.
ஏற்கனவே அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், தம்முடைய பூர்வீகத் தொழிலான வேர்க்கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன், அதில் கிடைக்கும் வருவாய் மூலம் மக்களுக்கும் சேவை செய்கிறார். சில நிறுவனங்களுக்கு ஆலோசகராக வேலை பார்க்கும் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன், தனது சொந்த வருவாயில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி நடத்தி வருகின்கிறார்.
நமது நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றி நம்மால் இப்படியெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா? தலைவர்களை விடுங்கள். முன்னாள் உள்ளுராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் குறித்தாவது இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலுமா?
எனவே, சுயமான தொழில்துறை ஏதுமின்றி, செல்வ வளம் கொழிக்கும் நிரந்தரத் தொழில் என்ற நிலையிலிருந்து நமது ஊர் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் அரசியலை நாம் மீட்டெடுக்க வேண்டிய அவசிய, அவசரம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
உடுத்த உடைக்கு மாற்றுடை இன்றி, பயணிப்பதற்கு ஒரு துவிச்சக்கர வண்டியின்றி, கக்கூசுக்கு ஒரு கதவு போட்டுக் கொள்ள வழியின்றி, அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடந்து அல்லற்பட்ட நிலையில் அரசியலுக்கு வந்த நமது ஆசாமிகள், ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே பலவேறு பதவிகளையும் பெற்றுக் கொண்டதுடன், அதன் தொடராக கார், காணி, பங்களா, சொத்து, சுகம், ஊரே மிரளும் தர்பார் அதிகாரம் என்று சுகபோக வாழ்வின் உச்சத்திற்குச் சென்று விடுவதை நாம் நிதர்சனமாகவே காணுகின்றோம். இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுதான் நமது இளைஞர்களும், இன்ன பிறரும் இந்த அரசியலுக்கு வருகிறார்கள்.
இதனால், அரசியலுக்கு வருவதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளும் அடியோடு இப்போது மாறிவிட்டன. சித்தாந்த அரசியல் செத்துப்போய், தனி நபர் துதி பாடலும், தறுதலைச் செயல்களும் தூக்கலானதுதான் அரசியலைப் பற்றிய அருவருப்புக்கு முக்கிய காரணிகளாகிவிட்டன. குற்றவாளிகளின் புகலிடம் அரசியல் என்பதோடன்றி, நல்லவர்கள் அதற்குள் நுழைந்தாலும் விரைவில் கெட்டுப் போகாமல் அரசியலில் குப்பைதானும் கொட்ட முடியாது என்ற எண்ணமும் அழுத்தத்திருத்தமாகவே நம்மவர்களின் மனங்களில் பதிந்திருக்கிறது.
நமது அடுத்த வீடான தமிழகத்தில் காமராஜர், கக்கன், சத்தியமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பலரும் இளைஞர்களாக இந்த அரசியலுக்கு வந்தவர்கள்தான். அவர்களின் சிந்தனைகள் நாட்டின் நலன் மீதும், மக்களின் வாழ்க்கை அபிவிருத்தி மீதும் அக்கறை கொண்டதாக இருந்தது. கர்ம வீரர் எனப் பொற்றப்பட்ட காமராஜர் ஆட்சியிலும் குற்றச்சாட்டுக்கள் இருந்தனதான். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி குறைந்தபட்ச தவறு, அதிகபட்ச அக்கறை, தார்மீக உணர்வு என்பன நிறைந்திருந்தது. மக்கள், தலைவர்களான தங்களை தவறாக நினைப்பார்களே என்கிற பயம் அவர்களிடம் இருந்தது. அரசியலில் ஈடுபட்டு பணம் குவித்து, பகட்டாக இருப்பவர்களை அன்றைய மக்கள் வெறுத்தார்கள். பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது மனச்சாட்சிக்குப் பயந்து நடந்தார்கள்.
அடுத்தவனைக் கெடுத்தால், அநியாயம் செய்தால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டால் அன்றே இல்லாவிட்டாலும் அடுத்த நாள் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என்று அதிகம் பேர் அஞ்சினார்கள். தலைவர்கள், தங்களைவிட மேலானவர்களாக, உதாரண புருஷர்களாக, நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினார்கள். அதனால், தலைவர்களும் மக்களைக் கண்டு பயந்தார்கள்.
அன்றைய கனவு வாகனமான அம்பாசிடர் கார் வாங்குவதற்கும், சொந்த வீடு கட்டுவதற்கும் பயந்த அரசியல்வாதிகள் ஊருக்கு ஊர் காணப்பட்டார்கள். ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் கடைசி வரை இரு சக்கர வாகனத்தில்தான் தமது தொகுதியைச் சுற்றி வந்தார்கள்.
சிறு வயதில் பார்த்த காட்சிகள் இன்னும் அப்படியே மனக்கண்ணில் நிற்கின்றன. மதுக் கடைக்குச் செல்பவர்கள்கூட மிகவும் பயந்து, அக்கம ;பக்கம் பல முறை பார்த்து, யாராவது தம்மைப் பார்த்து விடுவார்களோ என்று அஞ்சியஞ்சியே செல்வார்கள். சிலர் இன்னும் ஒருபடி மேலாக, தலையில் முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொண்டு சாராயக் கடைக்குப் போனவர்களையும் எங்கள் கிராமத்தில் பார்த்திருக்கிறேன்.
உறவினர்களையோ, நண்பர்களையோ மதுக் கடையில் பார்ப்பதைக் கேவலமாகப் பார்த்த சமூகம், குடும்பம், மனிதர்கள் அன்றைக்கு அதிகமாக இருந்தார்கள்.
இன்றைய நிலைமை என்ன என்பதை மனதில் ஓட்டிப் பாருங்கள். மதுக்கடைகளால் மாவட்டமே போதையில் மூழ்கிக்கிடக்கிறது. குடிப்பதற்கு இறைக்கப்படும் பணம் குடும்பப் பராமரிப்புக்கு வழங்கப்படாததால் வறுமையில் முன்னிற்கும் மாவட்டமாக நமது மாவட்டம் மிதக்கிறது.மதுவும் மனிதனும் என்பது ஒரு குறியீடுதான். ஏறத்தாழ எல்லா மதிப்பீடுகளும் இதே கதிக்குதான் ஆளாகியிருக்கின்றன. தவறுகள் எல்லாமே தவறுகள் இல்லை என்கிற புதிய வாழ்வியல் சூத்திரத்தை நமக்கு வசதியாக நாமே உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனால் நம்முடைய அரசியல் தலைவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். மக்கள் எப்படியோ, அப்படித்தான் தலைவர்களும் உருவாகி வருவார்கள் என்று சும்மாவா நம்முன்னோர் சொல்லி வைத்திருக்கிறார்கள்?
காலத்திற்குக் காலம் தேர்தல் நடக்கிறது. ஏதோவொரு அளவீட்டில், மதிப்பீட்டில் நாம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது அவர்களாக குண்டர்களையும், தொண்டர்களையும் கொண்டு கள்ளவாக்குகளால் தேர்வாகி விடுவார்கள். தெரிவாகும் பிரதிநிதியால் நன்மைகள் நடக்க வேண்டும் என்று நினைப்பதுதானே நம் யாவரினதும் இயற்கையான எண்ணம்? அத்தகைய எதிர்பார்ப்புத்தானே சரியாகவும் இருக்க முடியும்?
ஆனால், ‘தேன் எடுக்கிறவன் கொஞ்சம் நக்கத்தான் செய்வான்’ என்று நம் தலைவர்கள் தமது கொள்ளைகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்ததை நாங்கள் திரும்ப எடுக்க வேண்டாமா? என்கிறார்கள். அடுத்த முறை தேர்தலின்போது கொடுப்பதற்காகவே இப்போது சேர்த்து வைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள். நாமும் அதனைச் சரியென்று வழிமொழிபவர்களாகத்தானே இருக்கிறோம். அதனால்தானே இடியப்பச் சட்டிகளுக்கும், பிட்டுக் குழல்களுக்கும், தையல் மெஷின்களுக்கும், சைக்கிள்களுக்கும், சாரயப் போத்தல்களுக்கும், சோற்றுப் பொதிகளுக்குமாக நமது வாக்குகளை வாரி வழங்குகிறோம்.
மொத்தக் குறையும் மக்கள் மீதுதானா? நம்மைக் கெடுத்ததில் அரசியல் தலைவர்களுக்குப் பங்கில்லையா? என்றால், இருக்கலாம். ஆனால், அவர்கள் துணிந்து நம்மைக் கெடுப்பதற்கும், தொடர்ந்து கெடுப்பதற்கும் இடம் கொடுத்தது நாம்தானே? அது நமது தவறுதானே?
எல்லாம் சரி. இதற்கு என்னதான் தீர்வு? யாராவது வானத்திலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தக் குதித்து வருவார்கள். அவர்கள் ஏதாவது ஆச்சரியங்களை நிகழ்த்துவார்கள். அதை வாய் பிளந்து பார்த்து, கை தட்டி மகிழ்வோம் என்ற எண்ணத்திலிருந்து முதலில் நாம் ஒவ்வொருவரும் விடுபட்டு வெளியே வர வேண்டும்.
அணு, அணுவாக நம்மை அன்றாடம் இயக்குவது இந்த அரசியலே என்பதிலும், அதனைத் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் நாமே என்பதிலும் நமக்குத் தெளிவு பிறக்க வேண்டும்.
ஆரோக்கியமான அரசியலைப் பற்றிச் சிந்திக்காத, அதில் ஆர்வம் காட்டாத மக்களோ, தேசமோ என்றுமே உருப்பட்டதில்லை என்று வரலாறு நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை மனதில் இருத்த வேண்டும்.
நல்ல சிந்தனை, நல்ல எண்ணங்களுக்கு எப்போதும் வலிமை உண்டு. யாரோ ஒரு தனி மனிதனின் நல்ல எண்ணம் செயல் வடிவம் பெறுகின்றபோது, அதைப்பற்றி நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம் பேர் என ஒரு சமூகமே நல்லாட்சியைச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதற்கு எவ்வளவு ஆற்றல் இருக்கும்?
நல்ல அரசியல் அல்லது அரசியலில் நல்லவர்கள் என்ற அந்த எண்ணம் கண்முன் செயலாக, நடைமுறையாக மாறிவிடுமல்லவா?
ஊருக்கு சாக்கடை ஒன்று இருக்க வேண்டியது அவசியம்தான். அதற்காக ஒட்டுமொத்த ஊரும் சாக்கடையாகிப் போவதற்கு அனுமதிக்கப் போகிறோமா? என்பது வருகின்ற ஆகஸ்ட் 17ம் திகதி காலையில் நமக்குப் பிறக்கின்ற நல்ல சிந்தனையில், செயலில்தான் இருக்கிறது.
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
Published by
![what_politics_say__48305[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/what_politics_say__483051.jpg?w=110&h=150)
Leave a comment