காத்தான்குடி: 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின்னர் இக்கட்சி சந்திக்கும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல். இப்போதுள்ளது போல்தான் அன்றும் தேர்தல் ‘முசுப்பாத்திகள்’ களைகட்டியிருந்த காலம்.
காத்தான்குடியைப் பொருத்தமட்டில் 60 வீதமான மக்கள் சிறலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு ஆதரவாக செயற்பட்டனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பபு மாவட்ட வேட்பாளர்களுள் ஒருவராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்திய அமைதிப்படை உதவியுடன் டெலோ சார்பாக எம். ஏ. எம். முபீன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராகவும், ஐ.தே.க. சார்பாக மர்ஹூம் றிஸ்வி சின்ன லெவ்வையும் வேட்பாளராகப் போட்டியிட்டதால் காத்தான்குடி தேர்தல் களம் எப்போதும் போல் சூடுபிடித்திருந்தது.
காத்தான்குடி 5, 6, 4ம் குறிச்சிகளில் டெலோ மற்றும் ஐ.தே.க. ஆதரவாளர்களின் கோட்டையாக செயற்பட்டது.
றிஸ்வி சின்ன லெவ்வைக்கு அப்துர் ரஊப் மௌலவி தனது ஆதரவை வழங்கியதால், இப்பகுதிகளில் பெரும்பாலும் ஐ.தே.கயின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது.
இதே போல் ஆரையம்பதி டெலோ அலுவலகம் அருகாமையிலும் மற்றும் காத்தான்குடி டெலோ உறுப்பினர்களின் வசிப்பிடமாகவும் இருந்ததால் இப்பகுதிகளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் குறைவாகவே காணப்பட்டு வந்தது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ்வின் பிரமாண்டமான பொலித்தீன் பெனர்களையும், சுவரொட்டிகளையும், அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்களும், டெலோ உறுப்பினர்களும் இணைந்து சேதப்படுத்தி வந்தனர்.
யானையை வரைந்து சென்றால் மரத்தில் கட்டி வைப்பது போலவும், மரத்தை வரைந்து வைத்தால் யானை தும்பிக்கையால் உடைத்து எறிவது போலவும், சித்திரங்கள் பலரின் வீட்டு மதில்களையும், பொதுக் கட்டட மதில்களையும் அலங்கரித்து சென்றுகொண்டிருந்தது.
காத்தான்குடி 5, மார்க்கட் சதுக்கத்தில் அன்றிருந்த ஐ.தே.க. அலுவலகம் 24 மணி நேரமாக இயங்கியது.
இவ்வாறு பல சவால்களைச் சந்தித்து ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், தினமும் மக்களை அனுகி முஸ்லிம் காங்கிரஸூக்கு ஆதவு வழங்கும்படி மக்களை கேட்டு வந்தனர்.
புதிய காத்தான்குடி ஜன்னத் பள்ளிவாயல் மஹல்லாவில் அதிகமானவர்கள் அப்துர் ரஊப் மௌலவியின் ஆதரவாளர்கள் என்பதால், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைக்கு அருகில் இருந்தும், இப்பகுதி மக்கள் ஹிஸ்புல்லாஹ்வை ஆதரிப்பதற்கு முன்வராமல், றிஸ்வி வெல்வையை ஆதரித்து வந்தனர்.
ஜன்னத் மாவத்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் அமைக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மக்கள் தலைசாய்த்ததாகத் தெரியவில்லை!
இம்மக்களின் இத்தகைய முடிவு அன்றைய ஹிஸ்புல்லாஹ் ஆதரவு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதனால் அன்றிரவு அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளாலேயே குறித்த முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீ இட்டு எரிக்கப்படுகிறது.
காலையில் இப்பகுதியில் அனுதாப அலைகள் எழ ஆரம்பித்தன. பொலித்தீனிலும், மரப்பலகையிலும் எறிந்து அரைவாசியில் காட்சி தந்த அஸ்ரப் மற்றும் ஹிஸ்புல்லாஹ்வின் படங்களைப் பார்த்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அரசியல் தந்திரம் கைகூடியது. இப்பகுதியில் உள்ள அதிகமான மக்கள் இச்சம்பவத்தின் பின்னர் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்து அன்று ஹிஸ்புல்லாஹ்வுக்கு வாக்களித்தனர். எரிக்கப்பட்ட அலுவலகம் மீண்டும் இயங்கியது.
அரசியல் தந்திரம் சிரித்துக்கொண்டதுMJ!!
Published by


Leave a comment