SLMC+NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 03

shibly rahuman ali zahir– புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் களத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக SLMC இப்போது தனது (2015 2015 Election Gold House) தேர்தல் காலத் தங்கக் கடையைத் திறந்துள்ளது.

இங்கே பலதரப்பட்ட டிஸைன்களிலான நகைகள் இம்மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கவர்ந்து ஈர்ப்பதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எந்த நகை, எத்தனை கரட் உடையது என்பதை அக்கடையிலுள்ள ‘உரைகல்’லைக் கொண்டுதான் உரசிப்பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் இந்த மூன்றாவது தொடரை நாம் நோக்கலாம்.

மட்டு. மாவட்ட மு.கா.வின் வேட்பாளர்கள் அணியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களாக அலிசாகிர் மௌலானா, பொறியியலாளர்களான அப்துர் றஹ்மான், ஷிப்லி பாறூக் ஆகிய மூவரில் ஒருவரே எம்.பியாகத் தெரிவு செய்யப்படக்கூடிய நம்பிக்கை எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே இம்மூவரில் எவர் குர்ஆன் ஹதீஸை யாப்பாகக் கொண்டுள்ள இக்கட்சியின் சார்பில் எம்.பியாகத் தெரிவு செய்யப்படத் தகுதியானவர் என்பதை அலசிப் பார்க்கலாம்.

அலிசாஹிர் மௌலானாவைப் பொறுத்தவரை அவர் ஏற்கனவே நாடாளுமன்றத்திலும், மாகாண சபையிலும், ஏறாவூர் நகர சபையிலுமாக ஆளுந்தரப்பில் இருந்து அனுபவங்களைப் பெற்றவர். பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நாடாளுமன்றப் படிக்கட்டுக்களை மிதிக்காதவராயினும், அதிர்ஷ்டவசமாக அவர் அரசியலில் பிரவேசித்து எதிர்கொண்ட முதலாவது தேர்தலிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர். பொறியியலாளர் அப்துர் றஹ்மான் இதுவரை காத்தான்குடி நகர சபைக்கு அப்பால் செல்லவில்லை.

இந்நிலையில் கூடுதல் அனுபவசாலியாகத் திகழும் அலிசாஹிர் மௌலானாவையே மீண்டும் இம்மாவட்ட முஸ்லிம்கள் அல்லது மு.கா. போராளிகள் (?) எம்.பி.யாகத் தெரிவு செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதற்கவர் எந்தளவு பொருத்தமானவர் என்பதும் எழுந்திருக்கின்ற கேள்வியாகும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்களுக்காகப் பேசும் சுயதைரியம் இயல்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் மக்களுக்காக இல்லாவிட்டாலும் தனக்காக, தனது சுயகௌரவத்தைப் பேணுவதற்காக, தனது உரிமையைப் பாதுகாத்துக் கொள்வென்றாலும் குரல் எழுப்புவதற்குத் திராணியற்றவர்தான் இந்த அலிசாஹிர் மௌலானா என்பது எனது கருத்தாகும்.

2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ‘லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்ட மௌலானா அவர்கள், வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஒரு உறுப்பினராகத் தெரிவு செய்யப்படக்கூடியவாறு முன்னிலையில் இருந்தார்.

ஆனால் மறுநாள் அதிகாலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4000 வாக்குகள் ஐ.ம.சு. கூட்டமைப்புத் தரப்பினரால் காவு கொள்ளப்பட்டு, பின்வரிசைக்குத் தள்ளப்பட்டிருந்த பிள்ளையான் எனும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டபோது, அலிசாஹிர் மௌலானா கிழக்கு மாகாண சபையில் ஒரு உறுப்பினராகும் வாய்ப்பை இழந்தார் என்பது வரலாறாகும்.

இந்த அப்பட்டமான வாக்குக் கொள்ளை மற்றும் தனது வெற்றிக்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்து அவரால் வாய்திறந்து கேள்விகள் கேட்க முடியாதவாறு வாக்கெண்ணும் நாளின் பின்னிரவில் அவர் அவரது கட்சியின் மேலிடத்தால் மௌனிக்கச் செய்யப்பட்டார். இப்படி தனக்கே நியாயம் கேட்கத் திராணியற்றுப் போய் இன்று வரை அதுபற்றி வாய் திறக்க முடியாத நிலையிலுள்ள அவரால் எவ்வாறு இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்காக எதிர்காலத்தில் குரல் எழுப்ப முடியும்? எனவே அவரை மு.கா.வின் ‘2015 – 2015 Election Gold House’ இல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நகையணியில் 22 கரட் கொண்ட அசல் தங்க நகையாக என்னால் பார்க்க முடியவில்லை.

தமது சுய அரசியல் இருப்புக்காக எந்தவொரு நியாயத்தையும் அநியாயக்காரர்களுடன் ஒன்று சேர்ந்து கூடவே சென்று குழிதோண்டிப் புதைத்து விட்டு, ஒன்றுமே தெரியாதவர் போல் இருக்கின்ற, அல்லது அந்த அநியாயக்காரர்களுடன் ஒன்றுபட்டுச் செயற்பட்டதற்காக கிடைக்கப் பெறுகின்ற அரச சௌபாக்கியங்களைத் தக்க வைத்துக் கொண்டு காலங்கடத்துகின்ற இவர் போன்றவர்களால் எவ்வாறு இந்த மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும், தேவைகளையும், உரிமைகளையும் குறித்து நாடாளுமன்றத்தில் சுயமாகவும், துணிவாகவும் குரல் எழுப்ப முடியும்?

முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மௌலவி, மௌலானா, ஷெய்ஹு, ஸெய்யிது, இமாம் என்பன போன்ற சொற்பதங்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் வழங்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நமது வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அவர்களும் நபி (ஸல்) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒருவர் என்றும், அதன் காரணமாகவே அவரை ‘மௌலானா’ எனும் அடைமொழி கொண்டு அழைப்பதாகவும் கூறப்படுகின்றது.

சத்திய இஸ்லாத்தை இவ்வுலகுக்குக் கொண்டு வந்து, அசத்தியவாதிகளுடன் 23 ஆண்டுகளாக மக்காவிலும், மதீனாவிலுமாக மல்லாடி, இறைமார்க்கத்தையும், நல்லாட்சி நிர்வாகத்தையும் நிலைநிறுத்திய எமது நபிகளார் (ஸல்) அவர்களின் வழியில் வந்தவரான எமது அலிசாஹிர் மொளானா அவர்கள், இன்றைய கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் குறித்து ஆக்ரோஷமாகக் குரல் கொடுத்து நீதி, நியாயத்திற்காகவும், நேர்மையான நல்லாட்சிக்காகவும் கடந்த காலங்களில் போராடிய வரலாற்றினைக் கொண்டவராக இருந்திருந்தால் எனது பார்வையில் அவரையே 22 கரட் தங்கமாக நான் மதிப்பிட்டிருப்பேன். ஆனால், துரதிர்ஷ்டம்.. உண்மைக்கும், நேர்மைக்கும், சத்தியத்திற்கும், நல்லாட்சிக்கும் அவரிடத்தில் அடையாளங்கள் ஏதுமில்லை.

இனி, அவருக்கு அடுத்த நிலையிலுள்ள பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களை எடுத்துக் கொண்டால், அவரும் அதே வருடம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் அ.இ.ம.கா சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் போட்டியிட்டவர். இவருடன் இப்போது ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் அசல் அ.இ.ம.கா. சார்பில் போட்டியிடுகின்ற முன்னாள் அமைச்சர் அமீரலியும், அண்மையில் அ.இ.ம.கா.வில் இருந்து ஐ.ம.சு.கூட்டமைப்புக்குத் தாவி ஹிஸ்புல்லா தரப்பில் போட்டியிடுகின்ற முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் அவர்களும் 1,2,3 என்ற தொடர் விருப்பு இலக்கங்களில் ஒன்றாகப் போட்டியிட்டவர்கள்.

இவ்வாறு 1,2,3 எனும் தொடர் முன்னுரிமை விருப்பு இலக்கத்தைப் பெறுவதற்காக பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது தகப்பனின் சொந்தப் பெயரையே மாற்றிக் கொண்டு மோசடியாகப் போட்டியிட்ட வரலாறு கொண்டவர். இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக கடந்த 13ம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில்தான் அவரது தகப்பனாரின் உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இவரது அரசியல் பிரவேசமே பெற்று வளர்த்த தனது தகப்பனின் பெயரையே மாற்றிக் கொண்ட மாபெரும் மோசடியில் ஆரம்பமாகியது என்பதும், இப்போதும் அதே மோசடியான பெயரில்தான் இவர் கிழக்கு மாகாண சபையில் ஒரு உறுப்பினராகக் கையெழுத்திட்டுக் கொண்டு தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் வருகின்றார். அதனால் இவரை 18 கரட் தங்கமாகக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் போட்டியிடவுள்ளார் என்பதை அறிந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மிக அவசரமாக அவருக்குப் போட்டியாகக் களமிறக்கவென தேடிக் கண்டுபிடித்து இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தியவர்தான் எமது இன்றைய வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களாகும்.

அக்கால கட்டத்தில் அவரைப்பற்றி அறிமுகம் செய்யும்போது மேடைக்கு மேடை இறையச்சம் கொண்டவர் என்றும், அநீதி அக்கிரமம் ஊழல் மோசடிகளுக்கு உடன்படாதவர் என்றும் மேடைக்கு மேடை புகழ்ந்து விளாசித்தள்ளிய ஹிஸ்புல்லாஹ், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரை விட்டும் இவர் விலகிக் கொண்ட பின்னர், இதே காத்தான்குடி மண்ணில் பகிரங்கமாகவே ‘தாடியை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றுகின்றாய்’ என மிகவும் கேவலமாக அவரைச் சாடி வருவதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மாத்திரமல்ல, காத்தான்குடி நகர சபை உறுப்பினராக இருந்த பாக்கீர் மாஸ்டரிடம் கல்வி கற்பதற்காகச் சென்ற ஓட்டமாவடிப் பிரதேச மாணவியை அவர் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்குட்படுத்திய பரபரப்பு விவகாரத்தின் உண்மைத்தன்மையை விசாரிப்பதற்காக முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பொறியியலாளரும், ‘தஃவாதாரி’யுமான ஷிப்லி பாறூக் அவர்களையே நியமித்திருந்தார். அவரும் இவ்விடயம் தொடர்பில் விசாரணை செய்து விட்டு காத்தான்குடிச் சமூகத்திற்கு தனது அரசியல் குருநாதர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடாக விடுத்த தீர்ப்பறிக்கையில், இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்கள், இச்சம்பவம் உண்மையில் நடைபெற்றது என்பதை தனது இரண்டு வருட காலத் தீவிர விசாரணைகளின் மூலம் கண்டறிந்து குறித்த பாக்கீர் மஸ்டரைக் குற்றவாளியாகக் கண்டு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும், அபராதமாக 1500 ரூபா செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.

இதன் மூலமும் அரசியலுக்காக, தனது அரசியல் அந்தஸ்தத்தை ஹிஸ்புல்லாவிடம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக இவர் சோரம் போன சரித்திரம் இந்த மண்ணில் நிலைநாட்டப்பட்டுள்ளது. முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவதற்காக தனது அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராகச் செயற்படத் துணிந்த இவரால், தனது முஸ்லிம் சமூக மாணவியொருவர் காமுகனான தனது கட்சியைச் சேர்ந்த நகர சபை உறுப்பினர் ஒருவனால் சீரழிக்கப்பட்டதற்கு எதிராகக் குரல் கொடுக்க, உண்மையை அறிக்கையிடத் திராணியற்றுப் போனது, இவரது சமூகத்திற்காகக் குரல் கொடுக்கும் தைரியத்தை என்றோ மழுங்கடிக்கச் செய்து விட்டது. எனவேதான் இவரை 18 கரட் மலிந்த தங்கமாக என்னால் மலினமாகப் பார்க்க முடிகின்றது.

மூன்றாவதாக உள்ள பொறியியலாளர் அப்துல் றஹ்மானைப் பற்றி இன்ஷா அழ்ழாஹ் அடுத்த தொடரில் நான் விரிவாக அலசவுள்ளேன். (தொடரும்)

Published by

Leave a comment