மட்டக்களப்புப்: பிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது,
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
திரு. வசந்தராஜா அவர்கள் தமது சிறுவயதிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சத்தியாக்கிரக, உண்ணாவிரதப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த வரலாற்றைக் கொண்டவர்.
1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும், சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரையும் தமிழர் கட்சியில் இரு வேறு சின்னங்களில் போட்டியிட்டபோது, கவிஞர் காசி ஆனந்தனுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊர் ஊராகச் சென்று துடிப்புடன் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டதோடு, பிரச்சார மேடைகளிலும் ஏறி உணர்ச்சி பொங்க உரையாற்றியவர்.
இதன் காரணமாக அக்காலத்தில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவரை, மட்டக்களப்பிலிருந்து மன்னார் மாவட்டத்திலுள்ள கஷ்டப் பிரதேசமொன்றிற்கு இடமாற்றம் செய்து அரசியல் பழிவாங்கலும் மேற்கொண்டனர்.

1985ம் ஆண்டில் கிழக்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு அவர்களது அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரும்பாடுபட்டவர். மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவில் வணக்கத்துக்குரிய பிதா சந்திரா பெர்ணாண்டோ மற்றும் அதிபர் வணசிங்க ஆகியோருடன் இணைந்து கைது செய்யப்பட்டோருக்காகவும், காணாமல் போனோருக்காகவும், இடம் பெயர்ந்தோருக்காகவும் ஆபத்தான காலகட்டங்களில் குரல் கொடுத்துப் பணிபுரிந்து வந்தவர்.
இனக்கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த போதெல்லாம் மட்டக்களப்பு எகெட் நிறுவனத்தின் நிவாரணப் பணிகளில் இணைந்து தொண்டுகள் ஏராளம் செய்தவர். இதனால் பல தடவைகளில் அரச படையினரால் விசாரணக்கும் உட்படுத்தப்பட்டவர்.
1990ம் ஆண்டில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் ஒரு சாதாரணத் தொண்டராக இணைந்து போர்க்கால நிவாரணப் பணிகளில் முக்கிய பங்காற்றி வந்தவர். 1995ம் ஆண்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவராக அதன் அங்கத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரையிலும் அத்தலைமைப் பொறுப்பில் நேர்மையுடன் செயற்பட்டு வருகின்றவர்.
கிழக்கில் முதலாவது தற்கொலைத் தாக்குதல் சம்பவம் புதுக்குடியிருப்பில் 1995 டிசம்பர் 05ம் திகதி இடம்பெற்ற வேளையில் பஸ் ஒன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்த 40 பொது மக்களின் கதி என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட கதியை அறிவதற்கு உறவினர்கள் துடியாய்த் துடித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் செல்வதற்கு அன்றைய காவல் துறையினரும், சர்வதேச நிறுவனங்களும் மறுத்து விட்டனர். கச்சேரியில் இருந்த நிர்வாக உயரதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனையவர்களும் எங்கு சென்றனர் என்றே தெரியவில்லை.
மிகவும் பாதுகாப்புக் கெடுபிடிகளின் மத்தியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவராகச் செயற்பட்ட இவர், தமது சங்கத்தின் 15 தொண்டர்களுடன் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் அங்கு இறந்த நிலையில் காணப்பட்ட அத்தனை பொது மக்களின் உடல்களையும் மீட்டு வந்தார்;. இப்பணிக்கு மட்டக்களப்பு மாநகர சபையும் தனது நகர சுத்தித் தொழிலாளர்களையும், இழுவை இயந்திரங்களையும் கொடுத்து உதவியிருந்தது. அன்றைய சமூகசேவைப் பணிப்பாளர் திரு. நவரெத்தினமும் இம்மீட்புப்பணியில் பங்களிப்புச் செய்திருந்தார்.
போர்க்காலத்தில் காயப்பட்ட பொதுமக்களை வைத்தியசாலைக்கு எடுத்து வருவதற்கும், இறந்து போகின்றவர்களை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்குமான திட்டங்களை வகுத்து பெரும் பணியாற்றியவர்.
இடம் பெயர்ந்தோருக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டில்களையும், கிணறுகளையும், மலசலகூடங்களையும் அமைத்துக் கொடுப்பதற்கும் வழிவகுத்தவர். பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மலசலகூடங்களையும், கிணறுகளையும் அமைத்து மக்களின் துயர்போக்கிச் செயற்பட்டவர்.
போர்காலத்தில் கிராமங்களில் காயமுறும் மக்களின் இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்களை முதலுதவியாளர்களாகவும், ஆபத்துக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் மாவட்டம் முழுவதிலும் நியமித்துச் செயற்பட்டதுடன், நூற்றுக்கணக்கான ஆபத்துக் குறைப்புத் தொண்டர்களுக்கும் தானே முன்னின்று உரிய பயிற்சிகளையும் முறையாக வழங்கியிருந்தார்.
சுனாமியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றாக அழிந்து போன 6617 வீடுகளை மீளக்கட்டியெழுப்புவதிலும், எட்டு வைத்தியசாலைகளைப் புனரமைப்பு அல்லது மீள்நிர்மானம் செய்வதிலும்; வெளிநாட்டு செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து உதவிகளைப் பெற்று முழு ஒத்துழைப்பையும் வழங்கி நிர்மானித்த செயல்வீரனாக மிளிர்ந்து கொண்டிருப்பவர்
இத்தனைக்கும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து ஒரு சதத்தையேனும் சம்பளமாகப் பெறாமலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் சொத்துக்களை தனது குடும்பத் தேவைகளுக்காகப் பாவிக்காமலும் பொதுத் தொண்டையே தனது உயிர் மூச்சாகக் கருதி செயற்பட்டு வருபவர்.
இவர் ஏழை, எளியவர்களில் மிகவும் அக்கறை கொண்டவர். இவர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவக் கிராமங்களையும், மக்களையும், அம்மக்களினது தேவைகளையும் நன்கறிந்தவர்.
இத்தகைய மனிதாபிமானத் தொண்டுகளைப் புரிந்து வரும் வரலாற்றினைக் கொண்டுள்ள திரு. த.வசந்தராஜா அவர்கள், தான் சார்ந்திருக்கும் அமைப்பினூடாக ஓர் எல்லைக்குமேல் மக்களின் தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்தே நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தினூடாக அவ்வாறான தேவைகளையும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு தனக்குள்ள நீண்டகால அனுபவத்தினையும், ஆற்றலையும் உபயோகிக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கத்துடன்தான் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புரிமை கேட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முறையாக விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் இறுதி வரைக்கும் அவரது பெயர் தங்களது பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டு வந்திருந்த நிலையில், திடீரென வேறு நபர்களுக்கு இடமளித்து அவரது பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளால் நீங்கப்பட்டதானது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் தங்துள்ளது.
மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களையும், மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுகின்றவர்களையும் தவிர்த்து விட்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதன் உள்நோக்கத்தை இம்மாவட்ட தமிழ் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அறிந்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்.
‘வசந்தராஜா’ எனும் அழகு தமிழ் நாமத்துடன் இன, மத, பிரதேச வேற்றுமைகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் ஆதம்லெப்பைக்கும், அருளானந்தத்திற்கும், அண்ணாமலைக்கும் சமச்சீராகச் சமூகப்பணி செய்து மக்கள் மனங்களை வென்றுள்ள இன்னாருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் பேசும் மக்களினது சமூக நல விவகாரங்களில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள ஓர் அரசியல் நிறுவனமாக இருந்திருந்தால் வேட்பாளர் நியமனம் வழங்கி இருக்க வேண்டும்.
அவ்வாறு வழங்கியிருக்குமானால், நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 70 முதல் 80 ஆயிரம் வரையான வாக்குகளை இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுக் கொடுத்து தனது எதிர்கால சமூக சேவையாற்றும் வாய்ப்பையும் பெற்றிருப்பார் என்பது திண்ணமாகும்.
போர்க் காலங்களிலும், அனர்த்த காலங்களிலும் பொது மக்களின் நலன் கருதி சமூகக் களத்தில் நின்ற திரு. வசந்தராஜாவும் அவரது தலைமையின் கீழ் செயற்படும் இம்மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவத் தொண்டர்களும்தான், தேர்தல் காலங்களிலும் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்படுவதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக களமிறக்கப்பட வேண்டியவர்கள் என்பதை இனியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் , காத்தான்குடி
Leave a comment