மட்டக்களப்பு: நேற்று முன்தினம் 21.07.2015 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் பஸ் நிலைய சதுக்கத்தில் ஐ.தே.கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அமர்க்களமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் சார்பில் இம்மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,
கூப்பிடு தூரத்திலுள்ள தனக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் அவர்களின் வீடுகளுக்குத் தான் தேடி வந்து கதவுகளைத் தட்டி தேவைகளைத் தீர்த்து வைப்பதாக ‘மட்டக்களப்புப் பிரகடனம்’ ஒன்றினைச் செய்தார்.
இதேவேளை, ‘தேனீ’ இணையதளத்தில் ‘சூரிய உதயத்துக்காக காத்திருக்கும் நாவலடி மக்கள்’ எனும் தலைப்பில் பிரபல பத்தி எழுத்தாளர் லஹிரு கிதலகமவின் ஆக்கம் ஒன்று நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. அதனைப் படித்தபோது, முன்தினம் முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் செய்த ‘மட்டக்களப்புப் பிரகடனம்’ எத்தனை போலித்தனமானது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
நாவலடி கிராமம் என்பது, மட்டக்களப்பு – வெலிகந்த பிரதான பாதையில் ஓட்டமாவடியிலிருந்து சில மைல் கல் தொலைவில் அமைந்துள்ளது. அதாவது, அமீர்அலி அவர்களின் பாணியில் சொல்வதானால் அவருக்கு ‘கூப்பிடு தூரத்தில்’ அமைந்துள்ள கிராமமாகும். கல்குடாத் தொகுதியிலுள்ள முஸ்லிம் மக்களே செறிவாகக் குடியேறி வாழும் இக்கிராமம் பற்றிய லஹிரு கிதலகமவின் எழுத்துக்களைப் படிக்கும்போது, ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக, அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சராக, மாகாண சபை உறுப்பினராக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராகவெல்லாம் அரசியல் அதிகாரத்துடன் விளங்கிய அமீர்அலி அவர்கள் இந்தக் கிராமத்து மக்களுக்கு அதுவும் தனது சொந்தத் தொகுதி மக்களுக்கு என்ன செய்து கிழித்திருக்கின்றார்? என்ற கேள்வி எனக்கு மாத்திரமல்ல் நிச்சயமாக உங்களுக்கும் எழும் என்பதில் சந்தேகமில்லை.
தனது உள்வீட்டு நிலைமை இப்படி உலகளாவக் கேட்குமளவுக்கு ஒப்பாரி வைக்கும் நிலையிலிருக்க, ‘மட்டக்களப்புப் பிரகடனம்’ வேறு செய்து தமிழ் மக்களின் ஆணைகளையும் இவர் கோரி நிற்பதானது நகைப்பைத் தருவதாக இல்லையா? படியுங்கள்..
‘சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும் நாவலடி மக்களின்’ நிலையை.
கிழக்கே உதிக்கும் சூரியன், களப்பு நீரைக் காதல் கொண்டு உறிஞ்சுவதுண்டு. பதிலுக்கு நாவலடி மக்களுக்கு மட்டும் இந்த வானம் சுட்டெரிக்கும் ஒளியை மட்டுமே தருகிறது.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைப் பிரதான வீதியில் செல்லும் பிரயாணிகள் அனைவரும் அதிவேகமாக இப்பிரதேசத்தைக் கடந்து செல்கின்றனர். இதனால், இப்பிரதேசம் யாருடைய கண்களுக்கும் தென்படுவதில்லை என்பதே நாவலடி மக்களின் கருத்து. சுட்டெரிக்கும் சூரிய ஒளியையும் தாண்டி நாவலடி மக்களோடு ஒரு தருணம்.
பர்தாவால் தலையை போர்த்திக் கொண்ட நாவலடிப் பெண்கள் ஓர் எடுத்துக்காட்டு, உயர்ந்த உபசாரம் மற்றும் பணிவு எம்மை மெய் சிலிர்க்க வைத்தது. தங்களது சிற்றுணவிற்காக செய்யப்பட்ட ‘பஜ்ஜீ’யினை எமக்களித்து தாகத்திற்கு தண்ணீர் தந்த அன்பை ஒரு போதும் மறக்க இயலாது. எம்மில் பலர் பெரும்பான்மை இனத்தவர். இருந்தும் பேதமின்றி உபசரிப்புச் செய்யும் பண்பு எம் நாட்டின் பொதுப் பண்பை எடுத்துக்காட்டியது.
சின்ன வீட்டில் எங்கள் அனைவருக்கும் போதிய இடம் வசதி இன்மையால் முற்றத்தில் இருந்து பேசுவோம் என்று எம்மில் சிலர் பணித்ததால் கிராமத்தவர்களும் உடன்பட்டனர். தரை விரிப்புகளில் நாங்களும் கிராமத்து மக்களும் அமர்ந்தோம்.
பார்வையில் இரக்கமும் உருவத்தில் அனைவரையும் ஈர்க்கும் தோற்றமுடைய ஆட்டுக்குட்டிகளை முற்றத்தில் இருந்த தேக்க மரத்தடி ஆட்டுப்பட்டிக்குள் கண்டேன். சுதந்திரத்திற்காகக் காத்திருக்கும் அந்த ஆட்டுக்குட்டிகளின் பார்வையில் காணப்படும் எதிர்பார்ப்பு போலவே எங்களது எதிர்பார்ப்பும் என்று ஆரம்பித்தனர் நாவலடியினர். செவிமடுக்க முடியாத அளவு கோபத்தை வெளிப்படுத்தியவாறு ஒவ்வொருவரும் தத்தமது குறைகளைக் கொட்டித்தள்ளினர். ஒவ்வொருவராகப் பேசுமாறு நாவலடியில் எமது ஊடகச் சகோதரி காமிலா பேகம் கேட்டுக் கொண்டார்.
‘இங்க இருக்கிற மிகப் பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. மழைக் காலத்தில் கொஞ்சம் தண்ணி இருக்கும். வெயில் காலத்தில எப்படியும் தண்ணி இருக்கிறது இல்ல. இங்கே பக்கத்துலதான் வாகனேரிக் குளம் இருக்கு. எங்களுக்குத் தண்ணி தராம, 12 கி.மீ. தூரம் உள்ள பாசிக்குடாவுல இருக்கிற ஹோட்டல்களுக்கு தண்ணி கொண்டு போறாங்க.
கிட்டத்துல அரசாங்கத்தால ஓட்டமாவடி, வாழைச்சேனைக்கு குழாய் தண்ணி கொடுத்து இருக்காங்க. ஆனால், அங்கு நிறைய கிணறு இருக்கு” என்கிறார் ஒரு தாய். அவரது பெயர் நூர் மொஹமட்.
வெளிப்படையாகத் தென்படாவிட்டாலும், நாட்டில் குடிநீர் பிரச்சினையானது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிக வெப்பமுடைய இப்பிரதேசங்களில் இது மிக முக்கியமானதோர் பிரச்சினையாக எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்கான எளிதான தீர்வுகள் இருந்த போதும் பொறுப்புடைய அதிகாரிகளின் கவனமின்மையே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் நாவலடி மக்கள். முறையற்ற திட்டமிடல், அரசியல் பக்கச்சார்பு போன்ற விடயங்களையும் மாற்ற முடியாதுள்ளது. தொடர்ந்து போதிய வளங்கள் இருக்கும் பகுதிகளுக்கே வளப்பகிர்வுகள் இடம்பெறுகின்றன.
நாவலடி என்பது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய முஸ்லிம் கிராமமாகும். கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலகத்தில் சியாவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் இககிராமம் அமைந்துள்ளது. அதிகமானோர் விவசாயிகள் என்றாலும் இன்னும் ஒரு சிலர் கூலி வேலை செய்தே வாழ்க்கை நடாத்தி வருகின்றனர். மேலும், சிலர் கோழி வளர்ப்பு, கால்நடைகளை வளர்த்து மேலதிக ஊதியங்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
பார்வையில் சிறியதோர் கிராமமாக இருந்தாலும் கூட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்றால் எல்லை கடந்தது. எனவே, பொறுப்புடைய அதிகாரிகளின் பார்வை இவ்வாறான கிராமத்தவர்கள் மீது இருந்தால் மேன்மையானது.
கல்வி மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை
கேணி நகர் அல் மதீனா வித்தியாலயம் தரம் 5 வரையிலான வசதியையே கொண்டுள்ளது. இருந்த போதும் இப்பாடசாலையில் 700இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
தமது பிள்ளைகளுக்கும் முறையே கல்வியை பெறுவதற்கு க.பொ.த. கொண்ட பாடசாலை ஒன்றைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தும் பயனளிக்கவில்லை.
இந்த பாடசாலையில் எமது கிராமம் உட்பட மேலும் 7 கிராமத்து பிள்ளைங்க படிக்கிறாங்க.
ஆனா, இங்க எந்த வசதியும் இல்லை. இதனால, அதிகமான பிள்ளைங்க 5ஆம் வகுப்புக்கு பிறகு படிப்பு தொடர்றாங்க இல்ல. காசு உள்ளவங்க டவுன்ல பிள்ளைங்கள தங்க வைச்சு படிக்க வைக்கிறாங்க.
இருந்தும் தொடர்ச்சியா இதச் செய்ய முடியிறதில்லை. இடையில நிறுத்திடுவாங்க, பணம் இல்லாததுதான் காரணம். இதனால நெறய பெண் பிள்ளைங்கள சின்ன வயசுலேயே திருமணம் செய்றாங்க. தாய், தகப்பன் வேலைக்கு போன பிறகு பெண் பிள்ளைங்கள்ட பாதுகாப்பை உறுதி செய்றது கஷ்டமா இருக்கு. இதனாலதான் இப்படி நடக்குது என்று மூச்சிவிடாது சொல்லிக் கொண்டே போவதற்கு காரணம் அந்த அளவுக்கு இப் பிரச்சினை பாரதூரமானது என்பதாகும்.
13, 14, 15 வயதிலேயே நாவலடியில் பெண் பிள்ளைகள் திருமணம் முடிக்கின்றனர். இதற்கு பொருளாதாரமும், 5ஆம் தரத்துக்குப் பிறகு தொடர்ந்து கல்வியைத் தொடர முடியாத நிலையுமே காரணமாகும். இந்த சின்ன வயது பாலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திருட்டுப் பதிவாளர்களும் இருப்பது துரதிர்ஷ்டவசமே. இவர்கள் பணத்திற்காகவே இதுவரை சட்ட விரோதமான முறையில் திருமணங்களை நடத்தி வருகின்றனர் என நாவலடி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இதேவேளை, ஒரு சில பெற்றோர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர். அது தனது உறவினர்களாலும் அயலவர்களினாலும் இடம் பெறுவதுண்டு. எது எவ்வாறாக இருந்தாலும் இச்சமூகச் சீரழிவுக்கு உள்ளாவது குழந்தைகளே. இக்குழந்தைகளின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. மதினா வித்தியாலயம் க.பொ.த. சாதாரண தரம் வரையிலாவது தரம் உயர்த்தப்பட்டால் இப்பிரச்சினைக்கான விடிவினைக் காண முடியும் என்பதே நாவலடி மக்கள் கருத்து.
நாளுக்கு நாள் – ஒரு வேலி
இக்கிராம மக்கள் முகம் கொடுக்கும் மற்றைய பிரச்சினையானது காணியாகும். எமது காணிகளுக்கு உறுதி, அனுமதிப் பத்திரம் போன்ற எதுவும் இன்மையால் இராணுவம் மற்றும் அரசியல் அதிகாரமுடையவர்களின் ஆக்கிரமிப்பு மக்களை மேலும் துன்புறுத்தும் மற்றுமோர் சிக்கலாகும்.
பிரதேச செயலாளர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அனுமதிப் பத்திரம் வழங்குறார். ஏழைகளான எங்களுக்கு கொடுக்கிறாரு இல்ல. இந்த கிராமத்துக்கு குடியேறி வந்து ஒரு மாசம் கூட இல்லை, ஆனால் அவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம், உறுதி ரெண்டும் இருக்கு. நாங்க பல வருஷம் இங்க இருந்தும் எங்களுக்கு ஒன்றும் இல்லை. நாங்க எல்லா
பக்கமும் அடிபடுறோம். ஆமி எங்கட காணிகள எடுத்தாங்க.மொதல்ல 4 ஏக்கர், பிறகு அது கூடிக்கிட்டே போகும். இத நாங்கள் கேட்டால், காணிக்கு இருக்கிற உறுதிய கேக்குறாங்க. அந்த நேரம் எங்ககிட்ட எந்த பதிலும் இல்ல. தாவுற வேலியும் இங்க இருக்கு. வடக்கில் சிலருக்கு காணி கொடுக்கிறபோது எங்களுக்கும் கொடுக்க மாட்டாங்களானு பார்த்துக்கிட்டு இருப்போம் – காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தம் வேதனையை கூறுகிறார் ஒரு தாய்.
மேலும், யுத்த காலப்பகுதியில் பல்வேறு கட்டங்களில் குடியமர்த்தப்பட்டவர்கள் இங்கு வாழ்கின்றனர். ஒரு சிலருக்கு காணி இல்லாது இருப்பதால் பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளனர். பதிலுக்கு அவர் காணி உள்ள இடங்களில் குடியேறுமாறு கூறினார். ஆனால், காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை.இங்க நாங்க ரெண்டு பரம்பரையா வாழ்றோம். இதுவரை எங்கட பிரச்சினகளுக்கு ஒழுங்கான தீர்வு கிடைக்கல்ல. டி.எஸ். சொன்னதால சனம் ஆங்காங்கே குடியேறினாங்க. கிட்டத்தில ஒரு பெண்ணுக்கு பிரச்சினை ஒன்னு. அவட காணியில வேறு ஆட்கள் வந்து மண் வெட்டிக் கொண்டு இருந்ததால டி.எஸ் கிட்ட சொன்னதும் அவர் சொல்லுறார், காணி கொடுத்தாச்சி மீண்டும் மீண்டும் கரைச்சல் தராமல் போங்கனு. பொலிஸுக்கு போய் பார்த்துக் கொள்ளுங்கன்னு சொல்றார். பொலிஸ்கிட்ட போனோம். காணிகள்ட உறுதி எங்கன்னு பொலிஸால கேக்குறாங்க.
தேடிப்பார்த்தா டி.எஸ்தான் மண்வெட்டிக்கச் சொல்லி அனுமதி கொடுத்திருக்காரு – தனது பக்கத்து வீட்டு சகோதரியின் கதை இது என ஓர் தாய் கூறினார்.
கடன் பிரச்சினை
குடிநீர், கல்வி, காணி என்ற பிரச்சினைகள் போலவே நாவலடி மக்களின் கடன் பிரச்சினையும். கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வட்டி இன்றி கடன் வாங்க முடிந்தும் அவ்வாறு வாங்குவதில்லை. அதன் உத்தியோகத்தர்கள் தனக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே கடன் வழங்குவார். இதனால் கிராம மக்கள் எல்லா இடங்களிலும் கடனாளியாகின்றனர். இந்த நாள் பிரச்சினையை தீர்க்க ஓரிடத்தில் கடன் பெறுதல், அதனை தீர்க்க இன்னும் ஓரிடத்தில் கடன் பெறுதல், இந்த சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தும் தனியார் வங்கிகளும் சிறு கடன் வழங்கும் நிறுவனங்களும் மக்களை மேலும் மேலும் சிக்கலுக்கு உட்படுத்துகின்றனர் – எ.எஸ்.ஜி.எம். ஜபார் பள்ளிவாசலின் செயலாளர் இவ்வாறு தெரிவிக்கிறார்.
கூலி வேலை செய்தாவது தமது பிள்ளைகளை நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. நாவலடி மக்கள் வழக்கம் போலவே தமது குறைகளை எம்மிடம் இறக்கிவைத்து திருப்தியுடன் திரும்பினர். எம்மூலமாவது இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன் வீடு திரும்பிய காட்சி இன்றும் ஓயாத அலைகளாய் இதயத்தைத் தொட்டுச் செல்கின்றது.
லஹிரு கிதலகம தமிழில்: சுரேஸ் – (நன்றி: மாற்றம் மற்றும் தேனீ)
இப்படி இருக்கிறது, இரண்டு தலைமுறைகளாக ஓட்டமாவடியிலிருந்து ‘கூப்பிடு தூரத்திலுள்ள’ நாவலடிக் கிராமத்து முஸ்லிம் மக்களுடைய நிலைமை. இந்த இலட்சணத்தில் ‘மட்டக்களப்பு பிரகடனம்’ தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு நிதர்சனமாகும்?
இது இவ்வாறிருக்க, இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அவர்கள், மேடையில் அவருக்காகப் போடப்பட்டிருந்த கதிரையில் கணமேனும் அமர்ந்திருந்து, மணித்தியாலக் கணக்காக காவல்துறையினரினதும், பாதுகாப்புப் பிரிவினரினதும் கெடுபிடிக்குள் அகப்பட்டு கொடு வெயிலில் சுடுபட்டிருந்த தமிழ் மக்களின் முகங்களைத் தானும் பார்க்கவில்லை.
மேடைக்கு வந்தார். கூட்டாகக் கையசைத்தார். வந்த வேகத்தில் நின்ற நிலையில் பேசினார். பேச்சுக்கு நடுவில் மொழிபெயர்க்கும் இடைவெளிக்குள் மிடர் மிடராகத் தேநீரை விழுங்கினார். மீண்டும் காட்டிவிட்டுச் சென்று விட்டார்.
நாட்டில் நல்லாட்சியை நிறுவியுள்ள, எதிர்காலத்தில் ஆட்சியமைத்து நல்லாட்சியை மெலும் உறுதிப்படுத்தவுள்ள அவரது வருகைக்காக பஸ் நிலையத்திற்கான பிரதான பாதை தடுப்பு வேலிகளால் மூடப்பட்டு, வாகனங்கள் மாற்று வழியால் திசை திருப்பப்பட்டன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உயிர்களைக் காவி வந்த ‘அம்பியூலன்ஸ்’ வாகனங்கள்கூட நல்லாட்சிப் பிரதமரின் வருகையால் வழமையான வழித்தடம் மாறி ஓடிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
பிரதமரின் உரையில் அபிவிருத்தியும், உதிரி விடயங்களுமே இடம்பிடித்திருந்தன. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான காணாமல் போன தம் உறவுகள் குறித்தோ, புனர்வாழ்வுத் திட்டங்கள் குறித்தோ, இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது குடியிருப்பு – விவசாயக் காணிகள் குறித்தோ, தமது அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பது பற்றியோ அவர் வாயே திறக்காமல் மேடையை விட்டகன்றார்.
என்னருமை மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் பேசும் மக்களே..!
முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்களின் ‘மட்டக்களப்புப் பிரகடனத்தை’ அப்படியே ஏற்றுக் கொண்டு நாம் இன்னுமொருமுறை யானைக்கும், அழைத்து வந்த பா(த)கர்களுக்கும் வாக்களிப்போமா?
– புவி. எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ்
Published by



Leave a comment