ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுத்த நவ முஸ்லிம் மீது சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்குதல்

மட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறை பதிவு!

Election violence புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் 

காத்தான்குடி: முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் சுவரொட்டியை ஒட்ட வேண்டாம் எனத் தடுத்த காத்தான்குடி, பாலமுனைக் கிராமத்தைச் சேர்ந்த அ. முகமட் உமர் என்பவரைத் தாக்கியதுடன், அவரது வீட்டினுள் புகுந்து பாவனைப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்திய சமுர்த்தி அபிவிருத்தி

உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிரான தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் இன்று 21.07.2015 செவ்வாய்க்கிழமை இரவு 09:20க்கு பதிவாகியுள்ளது.

இந்தத் தேர்தல் வன்முறைச் சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட நவ முஸ்லிம் சகோதரரான அன்டனி முகமட் உமர் என்பவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

நேற்று 20ம் திகதி திங்கட்கிழமை மாலை 07:45 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் முகமட் நவாஸ் என அழைக்கப்படும் பரீட் என்பவரும், றிஸ்வான் என்பவரும் நான் கடமையாற்றும் கடைக்கு ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டுவதற்கு வந்தார்கள்.

Election violence

அவற்றை ஒட்ட வேண்டாம் என நான் கூறினேன். அதற்காக அவர்கள் எனக்கு அடித்தார்கள். நான் அவசர பொலிசாரின் 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு விடயத்தைக் கூறினேன். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவதாகச் சொன்னார்கள். ஆனால் வரவில்லை.
இதனால் நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றேன். உமது முறைப்பாட்டைப் பாரம் எடுக்க முடியாது என்று அங்கிருந்த பொலீசார் கூறினார்கள். அங்கே என்னைத் தாக்கிய சமுர்த்தி உத்தியோகத்தரும் பொலீசாருடன் இருந்தார்.

பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்று 09ம் இலக்க வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். இவ்வாறு நான் வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது, எனது வீட்டுக்குச் சென்ற இந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், அவரது நண்பரும் அங்கிருந்த தொலைக்காட்சி மற்றும் கண்ணாடி கபேட் உள்ளிட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்துள்ளார்கள். எனது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த அடாவடித்தனத்தினால் அவர் பலத்த அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளார்.

நான் வைத்தியசாலையில் இருந்தபோது அங்கிருந்த பொலீசார் என்னிடம் வாக்கு மூலம் பெற்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய நான் மட்டக்களப்பிலுள்ள தேர்தல் திணைக்களத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டேன். அவர்கள் எனது முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். காத்தான்குடிப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு எனது முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறும் கூறினார்கள்.

இதற்கமைய எனது முறைப்பாடு  CIB2/365/223/ என்ற இலக்கத்தில் காத்தான்குடி பொலிசால் பதிவு செய்யப்பட்டது.

என்றாலும் சம்பந்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரையும், அவருடன் வந்தவரையும் இதுவரை பொலீசார் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வந்து 17 வருடங்களாகின்றன.

இவ்வாறான கீழ்த்தரமான, காடைத்தனமான அரசியல் அடாவடித்தனங்களை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆதரவாளர்கள் கைவிட வேண்டும். ஊடகங்கள் எனக்கு நடந்த இந்த அநியாயத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

Published by

Leave a comment