எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் அவசியம்

petrol station– எம்.ஐ. அப்துல் நஸார்

காத்தான்குடி: உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியன ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளாகக் காணப்படுவதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் மனிதத் தேவைகள் விரிவடைந்து சென்று விட்டதனால் பயணம் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக கணிப்பிடப்பட வேண்டியதாக மாறியுள்ளது. வாழ்க்கை என்பது ஒரு பயணமே என அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் குறிப்பிடுவது பயணம் என்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகின்றது.

சிலர் தமது தொழில் நிமித்தமாக தினமும் பயணங்களை மேற்கொள்பவர்களாக இருப்பர், சிலர் நோய் காரணமாக சிகிச்சை மேற்கொள்வதற்காக பயணங்களை மேற்கொள்பவர்களாக இருப்பர். இது தவிர சுற்றுலாக்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக பயணங்களை மேற்கொள்பவர்களும் எம் மத்தியில் உள்ளனர். பொதுப் போக்குவரத்து சேவைகள் மூலமாக அல்லது வாககைக்கு அமர்த்தப்பட்ட வானங்கள் மூலமாக அல்லது சொந்த வாகனங்கள் மூலமாக இந்தப் பயணத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

பொதுப் போக்குவரத்து சேவைகள் மூலமாக அல்லது வாககைக்கு அமர்த்தப்பட்ட வானங்கள் மூலமாக பயணங்களை மேற்கொள்பவர்கள் இட நெருக்கடி, உரிய நேரத்திற்கு குறித்த பயண முடிவிடங்களை சென்றடைய முடியாமை, பிறிதொருவரின் தாமதத்தினால் சிரமங்களை எதிர் நோக்குதல், சாரதி மற்றும் நடத்துநர்களின் கடுந்தொனியிலான பேச்சு மற்றும் காது கிழியும் வகையிலான இசை மற்றும் புரியாத மொழிப் பாடல்கள்கள், யாசகம் கேட்போரின் சிரமங்கள், வாகனத்தினுள் வியாபாரம் செய்வோரின் தெந்தரவுகள் போன்ற அசெகரியங்களை எதிர்கொள்வதைத் தவிக்க முடியாமல் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சொந்த வாகனங்களில் பயணிப்போர் – அது மோட்டார் சைக்கிளாக, காராக, வேனாக அல்லது பிற வாகனங்களாக இருக்கலாம். இவற்றிற்கான எரிபொருளை நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வோர் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் அணுகுமுறை, செயற்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுடனான அவர்களது தொடர்பாடல்கள் தொடர்பில் பல்வேறு மனத்தாங்கல்களை வெளிப்படுத்துகின்றனர்.

பயணவேளையில் எரிபொருளை நிரப்புவதென்பது அவசரமும் அவசியமும் கலந்த ஒரு தேவையாகும். அதனை நிறைவேற்றிக் கொள்ள செல்வோரை சக ஊழியர்களுடன் எந்தவித முக்கியத்துவமும் இல்லாத கதைகளைப் பேசிகொண்டிருப்பதன் மூலம் வீணாக தாமதப்படுத்துவது, அவசரமாக எரிபொருளை நிரப்புமாறு கோரினால் எரிந்து விழுவது, போதுமான இடைவெளி இருந்த போதிலும் வாகனத்தை முன்னால் நகர்த்துமாறு அல்லது பின்னால் நகர்த்துமாறு ‘ கட்டளை ‘ இடுதல், சில வேளைகளில் முன்னதாக எரிபொருளை நிரப்பிச் சென்ற ஒருவரோடு உள்ள கோபத்தினை தற்போது எரிபொருளை நிரப்புவரின் மீது காட்டுதல், எந்த உயர் அதிகாரியாக இருந்தாலும் எரிபொருள் தாங்கியை திறப்பதற்கோ அல்லது பணம் கொடுக்க தாமதமானாலோ மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தல், குறித்த பணத் தொகைக்குரிய எரிபொருள் முற்றாக நிரப்பப்பட்டு முடியும் வரை பொறுத்திருக்காது அவசரமாக கருவியை அகற்றுதல் இதன் காரணமாக எரிபொருள் வெளிப் பகுதிக்கு சிந்த விடப்படுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

petrol station

இன்னொரு வகையில் பார்த்தால், எல்லோரும் மனிதர்களே என்ற வகையில் நோக்கும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றுவோர் நாளாந்தம் ஏராளமானோரை சந்திப்பதும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்ளும்போது அந்தப் பணியாளர்கள் உணர்ச்சிவசப்படுவதும் தவிர்க்க முடியாது எனவும் குறித்த பணியில் ஈடுபடுவோர் மெத்தப் படித்த மேதாவிளல்லர் எனவும் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பணியாற்றும் சில பணியாளர்கள் செயற்படும் முறையினை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக அனைவர் மீது பழி சுமத்துவது பொருத்தமானதல்ல எனவும் சிலர் இதற்கு விளக்கமளிக்க முன்வருவர்.

எவ்வாறெனினும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வியாபார முறைமை உலகளாவிய ரீதியில் பிரபலம் பெற்று வருகின்றது. வாடிக்கையாளரே எமது எஜமான் என்ற கோஷமே தற்போதைய பொருளாதாரத்தின் தாரக மந்திரமாக காணப்படுகின்றது.

எனவே, வாடிக்கையாளர்களுக்கும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுகும் இந்த விடயத்தில் காணப்படும் பொறுப்பினை புறந்தள்ளி விட முடியாது. தமக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்படும் பட்சத்தில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் இது பற்றி முறையிட வேண்டும். நாம் பயணம் போகின்ற அவசரமான நேரத்தில் இவ்வாறு முறைப்பாடுகளைச் செய்து கொண்டிருக்க முடியுமா? என சிலர் வினவக் கூடும். தொழில்நுட்ப ரீதியாக நாம் மிக உயர்ந்த மட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு முகவரியிட்டு கடிதமெழுதி, அங்குள்ள முறைப்பாட்டுப் பெட்டியில் போட்டுவிட்டு வந்து, அதற்கு பதில் கிடைப்பதற்கு வாரக் கணக்கில் காத்திருத்தல் என்ற பாரம்பரிய நடைமுறைகளை தற்போது பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு குறுஞ்செய்தி அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு போதுமானது, மறு முறை நீங்கள் அந்த நிலையத்திற்கு செல்லும் போது குறித்த நபர் கடமையில் இருக்கமாட்டார்.

வாடிக்கையாளர்கள் இலகுவில் தமது முறைப்பாடுகளை செய்வதற்கு சௌகரியமான வழிமுறைகளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். பொருளீட்டல் என்பது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும்.

தமது நிறுவனத்துக்கு ஆட்சேர்ப்பினை மேற்கொள்ளும்போது தகுதியான மற்றும் பொருத்தமான நபர்களை ஆட்சேர்ப்புச் செய்வது மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை தொடர்பிலும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். ஒரு வர்த்த நிறுவனத்தின் விலை மதிக்க முடியாத சொத்து வாடிக்கையாளர்களே என்பதை மறந்துவிடக் கூடாது.

Published by

Leave a comment