– அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். மெய்சிலிர்க்க வைக்கும் சித்திரவதைகள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றன இக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றை மீடியாக்களில் பார்ப்பவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்க முடியாதுள்ளது. எனவே, இத்தகைய குழுக்களது நடவடிக்கைகளைப் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியப்படுகிறது. பின்வரும் குறிப்புக்களை மேற்படி விவகாரம் தொடர்பாக முன்வைக்க முடியும்.
இஸ்லாத்தின் அங்கீகாரமின்மை
மேற்படி குழுக்களால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வன்முறைகளுக்கும் இஸ்லாத்தின் அங்கீகாரம் முற்றாகக் கிடையாது. இஸ்லாத்தை உரிய முறையில் பின்பற்றும் ஒருவர் சமூக மாற்றத்துக்கான வழிமுறையாக பலாத்காரத்தையோ வன்முறைகளையோ கையாள முடியாது (“மார்க்கத்தில் பலாத்காரமில்லை” (2: 256) “மனிதர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா?” (10:99) “நீர் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இல்லை”(88:22) போன்ற வசனங்கள் பலாத்காரத்தைக் கண்டிக்கின்றன.
இஸ்லாம் என்ற மார்க்கத்தோடு வாழ்பவர் அத்துமீறல்களோடும் வன்முறைகளோடும் சம்பந்தப்படமாட்டார். இஸ்லாம் என்றால் ‘சாந்தி, ‘சமாதானம்’ (ஸில்ம்) என்ற பொருளைத் தருகிறது. எனவேதான் அல்லாஹ் “நீங்கள் ‘ஸில்ம்’ க்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்” (2:208) என்கிறான். முஸ்லிம் என்பவன் அன்பு, இரக்கம், சாந்தி, சமாதானம், மென்மை, தர்மம் என்பவற்றை உலக மாந்தர்களுக்கு அக்கறையோடு சுமந்து வரும் ஒரு தூதுவன் தான்.
எனவே, பிறரை அவன் சந்திக்கின்ற பொழுதுகூட “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்” (அஸ்ஸலாமு அலைக்கும்) என்ற வாழ்த்தைக் கூறுவான். இஸ்லாமிய பிரச்சாரம் கூட ‘ஹிக்மா’ (ஞானம்-16:125) ‘பஸீரா’ (அறிவுத்தெளிவு-12:108) ‘ஜிதால் பில் அஹ்ஸன்’ (மிகவுமே அழகிய விதத்திலான கருத்துப் பரிமாறல்-16:125) ‘கவ்லுன் லய்யின்’ (மிருதுவான பேச்சு-20:44) என்பவற்றின் மூலமே இடம்பெற வேண்டுமென்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சொல்கிறான்.
ஆனால்,உலகில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமூக நீதியையும் கட்டிக்காப்பதற்கு, கொலைத் தண்டனையை இஸ்லாம் அமுலாக்கினாலும் அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது. கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவன் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் ஏராளமான வாய்ப்புகளையும் தூண்டுதல்களையும் அது வழங்குகின்றது. அது மட்டுமன்றி, குற்றத்தை நிறுவுவதற்கு பலமான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் உறுதியாக வேண்டுகிறது. “அவர்களை நீர் மன்னித்து, தாராளத் தன்மையோடு நடந்து கொள்வீராக” (5:13) என அல்லாஹ் கூறுகிறான்.பழிக்கு பழி வாங்குவதற்கான உரிமையை பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ அவன் வழங்குகிறான்.ஆனால், அதேவேளை மன்னிகும்படியும் ஊக்குவிகிறான்.பழிக்குப்பழி வாங்கும் போது அத்துமீறப்பட்ட அளவுக்கே அத்துமீறியவரைத் தண்டிக்கலாம் என்றும் அளவு மீறி தண்டிப்பது கடும் தண்டனையை பெற்றுத்தருமென்றும் அவன் கூறுகின்றான். இது பற்றி சூரா பகராவின் 178 ஆம் வசனம் மிகத் தெளிவாக விபரிக்கிறது.
இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போட்டு அதற்கு அச்சுறுத்தலாக அமைவது, முஸ்லிம் சமூகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக முழுமூச்சாக செயல்படுவது, பலவீனர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவது போன்றவற்றில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்த இஸ்லாம் ஆயுதப் போராட்டத்தை ஒரு வழிமுறையாக அங்கீகரிக்கிறது. மட்டுமன்றி ,அதனை கட்டாயப்படுத்துகிறது. ஆனால், இதற்கும் இறுக்கமான கட்டுப்பாடுகளையே போட்டிருக்கிறது.
ஒருவர் மற்றொருவரை எவ்வித நியாயமும் இன்றி கொலை செய்வதானது முழு மனித சமுதாயத்தையும் கொலை செய்வதற்கு சமனாகும் என்றும் அதேவேளை எவராவது ஒருவரை இறப்பிலிருந்து பாதுகாப்பது முழு மனித சமுதாயத்தையும் இறப்பிலிருந்து பாதுகாப்பதற்கு சமன் என்ற கருத்தை குர்ஆனில் (5:32) அல்லாஹ் தெரிவிப்பதிலிருந்து ஒரு மனிதன் – அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும்- அவனது உயிரை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்துகிறான். “(இஸ்லாமிய அரசுடன்) உடன்படிக்கை செய்துள்ள (முஸ்லிம் அல்லாத நாட்ட)வரைக் கொலை செய்பவன் மறுமையில் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான்” (ஆதாரம்-புகாரி)என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள் “இஸ்லாமிய அரசின் பாதுகாப்பிலுள்ள முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு யாராவது அநியாயம் செய்தால் அல்லது அவரது உரிமை ஒன்றை குறைத்து விட்டால் அல்லது அவரது சக்திக்கு மேல் அவரை நிர்பந்தித்தால் அல்லது அவரது விருப்பமின்றி அவரிடமிருந்து ஏதாவது ஒன்றை எடுத்தால் மறுமையில் நான் அவருக்கெதிராக வாதாடுவேன்” (ஆதாரம்-அபூதாவுத்,பைஹகி) என்றும் கூறினார்கள்.
மனித உயிர்களின் மீது அத்துமீறுவது எப்படிப் போனாலும் மிருகங்களது உயிர்கள் மீதும் உடல்கள் மீதும் அத்துமீறுவது கூட ஒரு விசுவாசியை நரகில் நுழைவிக்கும் குற்றமாகும். ஒருப் பெண் பூனையொன்றைக் கட்டி வைத்து உணவு கொடுக்காமைக்காக நரகம் நுழைந்தாள் என்றும், தாகித்திருந்த நாய்க்கு நீர் புகட்டிய நடத்தை கெட்ட ஒரு பெண் மன்னிக்கப்பட்டாள் என்றும் கூறும் நபிமொழிகள் இஸ்லாத்தின் ஜீவகாரூன்ய கோட்பாட்டை உயர்ந்த குரலில் ஒலிக்கச் செய்கின்றன.
இஸ்லாத்தின் மேற்படி மனிதநேய, சமாதான, சௌஜன்ய கோட்பாடுகளோடு ஒப்பிடுகையில் இஸ்லாத்தின் பெயரால் அண்மைக் காலத்தில் சில கும்பல்கள் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் அவர்களுக்கும் இஸ்லாதிற்கும் தொடர்பில்லை என்பதையே காட்டுகின்றன. அவர்கள் இஸ்லாத்தின் பெயருக்குக் களங்கம் கற்பிப்பதோடு இஸ்லாத்தை மிகச் சரியாகப் பின்பற்றும் முஸ்லிம்களது வட்டத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டமையை பிரகடனப்படுத்துகிறது.
இஸ்லாமிய யுத்த தர்மம்
ஏலவே நாம் குறிப்பிட்டது போல் இஸ்லாம் ஆயுதப் போரை பல நியாயமான காரணங்களுக்காக அங்கீகரித்தாலும் யுத்தத்தின் போது முஸ்லிம் போர் வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அழகிய ஒழுங்குகளை அது வகுத்துத் தந்திருக்கிறது. எதிரிகள் போரைத் தூண்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஊர்ஜிதமாக வேண்டும், தனிப்பட்ட குரோதங்கள், இனவாதம், பிரதேசவாதம், மொழிவாதம் என்பன போருக்குப் பின்புலமாக அமையலாகாது, யுத்தத்தின் போது பெண்கள் வயோதிபர்கள், சிறுவர்கள் , மதபோதகர்கள், போராட்ட களத்திற்கு வராத, போரை விரும்பாதவர்கள் போன்றோர் கொல்லப்படக் கூடாது, பழம் தரும் மரங்கள் வெட்டப்படலாகாது என்பன அவற்றிற் சிலவாகும். இஸ்லாமிய வரலாற்றில் கைதிகள் மிகவும் மரியாதையாகவே நடாத்தப்பட்டுள்ளனர். இவ்வழகிய பண்பாட்டை அவதானித்த பலர் தாமாக முன்வந்து இஸ்லாத்தை தழுவிய சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
கைதிகளை சித்திரவதை செய்ய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தெளிவாகவே கூறியிருக்கின்றார்கள் “போராடுங்கள்.அளவு கடந்து நடந்து கொள்ளாதீர்கள்.துரோகம் செய்யாதீர்கள்.சித்தரவதை செய்யாதீர்கள் .சிறுவர்களைக் கொல்லாதீர்கள்.”(ஸஹிஹ் முஸ்லிம் 3261)என்றார்கள். கைபர் யுத்த சந்தர்ர்ப்பத்தில் யூதர்களின் வேதமான தௌராத்தின் பிரதியொன்று கண்டெடுக்கப்பட்ட போது அதனை பத்திரமாகக் கொண்டு போய் யூதர்களிடம் ஒப்படைக்கும் அவர்கள் தமது தோழர்களைப் பணித்தார்கள். இதிலிருந்து பிற சமுதாயத்தவரது உயிர், உடமை, மதம் ஆகியவற்றினை யுத்த சந்தர்ப்பத்தில் கூட நபிகளார் பாதுகாத்தமை புலனாகிறது.தற்கால சூழலில் சில தீவிரவாதக் குழுக்கள் இஸ்லாத்தின் பெயர் தாங்கிய நிலையில் செய்யும் வன்செயல்களை இந்த நிலைக்களனில் நின்று தான் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
மேற்குலக ஊடகங்களின் பக்கசார்பு
அதேவேளை, இஸ்லாமிய உலகில் இடம்பெறும் சின்ன்னச் சின்ன குற்றச்செயல்ளையும் பூதக்கண்ணாடி போட்டு பார்ப்பதையும் இல்லாதவற்றை உள்ளதாக சித்தரிப்பதையும் ஊடகக் கொள்ள்கையாகக் கடைப்பிடிக்கும் மேற்குலக சார்பு ஊடகங்கள் இஸ்லாமிய உலக விவகாரங்களை திரிபுபடுத்துவதிலும் தப்பான கருத்துக்களை உருவாக்குவதிலும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுகின்றன. இஸ்லாமிய உலகில் வன்முறைகள் இடம்பெறுவதில்லை என்பது இதன் அர்த்தமல்ல.
ஆனால்,மேற்குலகில் இடம்பெறும் சமுகவிரோத செயல்கள் மூடிமறைக்கப்படுகின்றன. முதலாம் உலக யுத்தத்தின் போது ஒரு கோடி எழுபது லட்சம் பேரும் இரண்டாம் உலக யுத்த்தத்தின் போது ஆறு கோடிப் பேரும் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமானவர்கள்,ஏற்பட்ட பொருட்சேதங்கள் தனியானவவை. மேற்குலகு புரிந்த இந்த அட்டூழியங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது.குவண்டனாமா, இராக் சிறைகளில் முஸ்லிம் கைதிகள் மீது அமெரிக்க இராணுவம் புரிந்த,புரியும் அடாவடித்தனங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் கூட வன்மையாகக் கண்டிக்கப்பட்டுவருகின்றன. பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடாத்தும் விதத்தை மேற்குலக ஊடகங்கள் மிகக் குறைவாகவே கண்டுகொள்கின்றன,அல்லது அவற்றை நியாயம் காணுகின்றன.எனவே,இஸ்லாமிய பெயர் தாங்கிய தீவிரவாதிகள் புரியும் குற்றசெயல்களை கண்டிக்கும் அதே வேகத்தில் இந்த ஊடகங்கள் மேற்குலக பயங்கரவாதத்தையும் கண்டிக்குமாயின் அதனை வரவேற்க முடியும்.மொத்தத்தில் இஸ்லாமிய உலக பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் அவற்றுக்கில்லை.
அராஜக ஆட்சியாளர்கள்
அதேவேளை, இஸ்லாமிய உலகில் நடுநிலை தவறிய தீவிரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கு பல நியாயமான காரணங்களும் இருப்பதை எம்மால் மறுக்க முடியாது. மேற்கத்தய நாடுகளது அடிவருடிகளாக இருந்த வண்ணம் குடிமக்களது அடிப்படை மனித உரிமைகளைக் கூட வழங்காமல் அராஜக ஆட்சிகளைக் கொண்டு நடாத்தும் அரபுலக ஆட்சியாளர்கள் இத்தகைய தீவிரவாதக் குழுக்களது உருவாக்கத்திற்கு பல வகையிலும் காரணமாக அமைந்திருக்கிறார்கள். எனவே, இந்த அடக்குமுறைகளது எதிர் விளைவாக இத்தகைய குழுக்கள் தோன்றுகின்றன. ஒரு பந்தை சுவரில் வேகமாக வீசி எறியும் போது அது அதே வேகத்தில் எறிபவரது திசையை நோக்கியே திரும்பிவருவது பௌதீக நியதியாகும். அதுபோலவே அரபுலக ‘அரச பயங்கரவாதம்’ பொது மக்களில் பலருக்கு வேப்பங்காயாகக் கசத்து, அது வன்முறைகளின் பால் அவர்களிற் சிலரை இட்டுச்செல்கிறது. நாம் இவ்வாறு கூறும் போது பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக எவரும் கருதி விடக்கூடாது. பொறுமையானது கடுமையாக சோதிக்கப்படும்போது அது தீப்பிழம்பாக வெடித்துச் சிதறிவிடும்.
அரபுலகில் உள்ள ஆட்சியாளர்களிற் பலரை மேற்கத்தய நாடுகள் தமது கைப்பொம்மைகளாக வைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றன. அரபுலகில் உள்ள பெற்றோல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது பூரண ஆதிக்கம் செலுத்த வேண்டுமாயின் எதற்கும் இசைந்து கொடுக்கும் ஆட்சியாளர்களை அதற்காகப் போஷித்து வளர்ப்பதும் அவர்களது ஆட்சிகளை தக்கவைக்க தன்னாலான சகலதையும் செய்வதும் மேற்கின் நலன்களின் தேவையாக மாறியுள்ளது.
அரபு நாட்டு ஆட்சியாளர்களும் தமது இராணுவ மற்றும் பண பலத்தின் உதவியுடன் குடிமக்களது இரத்தங்களை உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணிகளாக இருக்கின்றனர். அதேவேளை, உலகெங்கும் பரவலாக ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சிகளால் தமது ஆட்சிக் கதிரைகள் பறிபோய்விடும் என்ற பயத்தால் தத்தமது நாடுகளில் இஸ்லாமியவாதிகள் தலைதூக்கும் போதெல்லாம் அவர்களுக்கு மரண அடிகொடுத்து சுயபாதுகாப்புக்கு வேலிபோட்டுக் கொள்கிறார்கள்.
மேற்குலக கபடத்தனம்
மேற்குலக நாடுகளுக்கும் இத்தகைய ஆட்சியாளர்களே தேவைப்படுகிறார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு தத்தமது நாடுகளில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு அவகாசம் இல்லாமல் போகின்ற போது, அடிக்கடி சிறைகளில் பலர் தள்ளப்படும் போது, சர்வசாதாரணமாகவே மரண தண்டனைகள் அரங்கேற்றப்படும் போது உள்ளம் வெதும்பும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தினை கையிலெடுத்து போராட –முனைகிறார்கள்.
விசித்திரம் என்னவென்றால் தமக்கு வேண்டிய ஆட்சியாளர்களுக்கு ஆயுதம் விநியோகிக்கும் மேற்குலகு தான் அந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் ஆயுதக் குழுக்களுக்கும் ஆயுத விற்பனை செய்கின்றன. ஒரு காலத்தில் சதாம் ஹுஸைனைப் பலப்படுத்த ஆயுதம் கொடுத்த அமெரிக்கா தான் ஆப்கானில் கம்யூனிஸ சார்பு ஆட்சியை வீழ்த்தி ரஷ்யாவை துரத்த உயிர்களைத் தியாகம் செய்து போராடிய முஜாஹித்களுக்கும் பூரணமான ஒத்துழைப்பைக் கொடுத்தது. ரஷ்யா துரத்தப்பட்ட பின்னர் முஜாஹித்கள் ஆட்சியமைத்த மறுகணமே அவர்கள் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்படவும் ஏற்பாடுகளைச் செய்தது.
அந்தவகையில் அரபுலக ஆட்சியாளர்கள் மட்டுமன்றி அப்பிராந்தியங்களில் போராடும் பல தீவிரவாத குழுக்களும் கூட மேற்கிலிருந்து ஆயுதம் பெறுவது விநோதத்திலும் விநோதமாகும்.
ஒரு காலத்தில் இலங்கையின் அரச படைகளுக்கு இஸ்ரேல் ஆயுதப் பயிற்சி வழங்கிய அதேவேளை வடக்கில் போராடிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் யுத்தப்பயிற்சி வழங்கியது என்றால் இந்த நாடகத்தின் பின் புலத்தை புரிவது கஷ்டமல்ல.
சுருங்கக் கூறின் மேற்குலகுக்குத் தேவைப்பட்டது மூன்று விடயங்கள் மாத்திரமே.
1. உலகில் வேகமாக ஏற்பட்டு வரும் நடுநிலையான இஸ்லாமிய எழுச்சியை முற்று முழுதாகத் தடுத்து நிறுத்துவது.
2. அரபு உலகின் பெற்றோலிய வளத்தை பூரண கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
3. மேற்குலகில் இருக்கும் ஆயுத உற்பத்திச் சாலைகளுக்கு தொடர்ந்தேர்ச்சியான ஆயுதச் சந்தைகளை தக்க வைத்துக் கொள்வது.
மேற்படி மூன்று நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்காக உலகில் எந்தப்பாதகத்தையும் செய்வதற்கு மேற்குலகு தயங்கப்போவதில்லை. இந்த உண்மையை அரபுலக ஆட்சியாளர்களும் தீவிரவாத- பயங்கரவாத ஆயுதக்குழுக்களும் புரியும் காலம் முதலில் பிறக்க வேண்டும். அதுமட்டுமன்றி தம்மைத் தூண்டுவோர் யார்? அவர்களது உள்நோக்கம் என்ன? தாம் சார்ந்திருக்கும் இஸ்லாத்தின் மிகச் சரியான போதனைகள் யாவை? தாம் போராடும் வழிமுறைகள் சரியானவையா? போன்ற தெளிவுகள் அனைவருக்கும் அவசியம் தேவைப்படுகின்றன.
மிதவாதம் தேவை
தற்கால உலகில் நடுநிலையில் நின்று இஸ்லாத்தைப் பேசும், எழுதும், நடைமுறைப்படுத்தும் மிதவாத இஸ்லாமிய அறிஞர்கள் இத்தகைய அரபு நாட்டு ஆட்சியாளர்கள் பற்றியும் அவர்கள் விடும் பிழைகளை எதிர்ப்பதற்கும் அவற்றைக் களைவதற்கும் சிபார்சு செய்யும் விதந்துரைகள் பற்றியும் எமக்கு அதிகமான தெளிவு தேவைப்படுகிறது. ‘கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது போல் தீவிரவாதம் ஒரு போதும் நீடித்து நிலைத்த நற்பலன்களைத் தரப்போவதில்லை. ஆயுதத்தால் ஆட்களை மடக்கி பெறப்படும் வெற்றிகளுக்கு ஆயுள் குறைவு. மனதில் புகுந்து, ஆத்மாவைத் தொட்டு, அறிவுபூர்வமாகச் செய்யப்படும் பிரசார உத்திகள் மாத்திரமே நீடித்து நிலைக்கும். நாய் எம்மைக் கடிக்கிறது என்பதற்காக நாமும் நாயைக் கடிக்க முடியாது. ‘முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்’ என்ற முதுமொழி எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. அடிப்படையில் இஸ்லாம் ஆயுதப் போரில் தங்கியிருக்கவில்லை. ‘இதற்கு மேல் சகிப்பதில் அர்த்தமில்லை’ என்ற கட்டத்தை அடையும் பட்சத்தில் மட்டுமே அது மிகுந்த கட்டுப்பாடுகளோடு ஆயுதத்தை பிரயோகிக்க அனுமதிக்கிறது.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கூட பல கட்டங்களைக் கடந்த பின்னரே அமுலாக்கப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:-
1. மனப்பக்குவம் உருவாக்கப்பட்டிருப்பது
2. குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கான சூழல் இருப்பது
3. தீமைகளுக்கான வாயில்கள் உயர்ந்தபட்சம் மூடப்பட்டிருப்பது
4.இஸ்லாத்தினை கொள்கையாக ஏற்று அமுல் நடாத்தும் இஸ்லாமிய அரச இயந்திரம் இருப்பது
5.முன்மாதிரியான கலீபா இருப்பது
இதுபோன்ற பல நிபந்தனைகள் இருந்தால் தான் குற்றவியல் தண்டனைகளைக் கூட அமுலாக்க முடியும். அப்படியில்லாமல் நினைத்த மாத்திரத்தில் தண்டனைகளை அமுலாக்கப் போனால் மார்க்கத்தில் மனோ இச்சைக்கு இடமளித்த குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.அத்துடன் இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயம் தான் உலக மக்களுக்கு ஏற்படும்.
எனவே, இஸ்லாத்துக்குள் தீவிரவாதத்தை நுழைத்து வன்முறைகளில் ஈடுபடுவோர் இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கு இஸ்லாமிய உலகிலுள்ள மிதவாத அணுகுமுறைகளில் சம்பந்தப்படுவதோடு நடுநிலையான இஸ்லாமிய அறிஞர்களது புத்திமதிகளையும் அறிவுரைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாதபோது அது இஸ்லாத்துக்கு அவப்பெயரை தேடித்தருவதோடு முஸ்லிம் சமூகத்தையும் பேராபத்துக்கு உள்ளாக்கும். இலங்கையிலுள்ள முஸ்லிம் விரோத சக்திகளது போக்குகளிலும் அது எண்ணை ஊற்றுவதாக அமையும். அல்லாஹ் எம் அனைவருக்கும் அவனது மார்க்கத்தை உரியமுறையில் புரிந்து அமுலாக்கும் மனப்பக்குவத்தையும் வாய்ப்பையும் தருவானாக!
Published by





Leave a comment