கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் – 15 என்ற நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்து, அந்தத் தீ நெடுஞ்சாலையிலும் பரவியில் பல வாகனங்கள் தீயில் கருகின. இந்தத் தீயின் காரணமாக, கயோன் கணவாயில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
வார இறுதியில், பெரும் போக்குவரத்து இருக்கும் நேரத்தில் இந்தத் தீ விபத்து நடந்தது.
“தீயினால், கார்களின் டயர்கள் வெடிக்கும் ஒசைகளை, தொடர்ந்து கேட்க முடிந்தது” என்கிறார் அந்தப் பகுதியில் வாகனத்தை ஓட்டிச்சென்ற லான்ஸ் அண்ட்ரேட்.
பல வாகனங்களின் உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். இவற்றில் பல முழுமையாகத் தீயில் நாசமாயின.
தங்கள் வாகனங்களை விட்டு வெளியேறுபவர்கள், கார்களிலேயே சாவிகளை வைத்துவிட்டுச் செல்லும்படி தீயணைப்பு வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
தீயினால் ஏற்படுத்தும் புகையைக் கட்டுப்படுத்த விமானம் மூலம் ரசாயனம் தூவப்பட்டுவருகிறது.
இந்த இன்டர்ஸ்டேட் – 15 என்ற நெடுஞ்சாலை, லாஸ் ஏஞ்சலீஸையும் நெவடாவையும் இணைக்கிறது. கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் வசிப்பவர்கள் லாஸ் வேகாஸிற்கு இந்தச் சாலை வழியாகத்தான் செல்வார்கள் என்பதால், வார இறுதிகளில் இந்தச் சாலை மிகவும் நெரிசல் மிக்கதாக இருக்கும்.
கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ என்பது அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, இதன் தீவிரம் அதிகரித்திருக்கிறது.
Published by


Leave a comment