கொழும்பு: அப்பாவி சமுர்த்தி பயனாளிகளை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த 58 இலட்சம் வாக்குகளுக்கு என்ன நடக்கும் என்பதை ஓகஸ்ட் 17ஆம் திகதி அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நல்லாட்சியை நோக்கிய ஐக்கிய முன்னணியின் சார்பில் பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஒருதடவை தோல்வியடையச் செய்தபோதும், நிரந்தரமாக அவரைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் மோசடியான வர்த்தகக் குழுவே உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட அதே குழுவே மீண்டும் தேர்தலில் களமிறங் கியதால் ஐ.ம.சு.முவிலிருந்து வெளியேறி நல்லாட்சியை நோக்கிய ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டதாகச் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, மஹந்த ராஜபக்ஷ கொண்டுவந்த மோசமான அரசியல் கலாசாரத்தை மாற்றி ஒழுக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அர்ப்ப ணிப்புடன் செயற்படவிருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஒழுக்கமில்லாத, பலவந்தமான அரசியல் பலத்தை வைத்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினராக வருவதுடன் மாத்திரம் திருப்திப்படப் போவதில்லை. தனது குடும்ப உறுப்பினர்களையும் தன்னுடன் இருக்கும் வியாபாரக் குழுவினரையும் மீண்டும் கொண்டு வருவார். இந்த முயற்சிகளை மக்கள் ஒன்றிணைந்து, குறிப்பாக அரசியல் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து இதனை முறியடிக்க வேண்டும்.
ஜனவரி 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய உறுதிமொழிகளை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உருவாக்கும் அரசாங்கத்தின் ஊடாக நிறைவேற்றுவோம். தேர்தல் மறுசீரமைப்பு, தகவல் அறியும் சட்டம், கணக்காய்வாளர் சட்டம் உள்ளி ட்ட ஜனாதிபதித் தேர்தல் உறுதி மொழிகளை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமையும்.
‘மைத்திரி ஆட்சி’யின் இரண்டாவது பகுதியாகவே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை அக்கட்சியினர் தவறவிட் டுள்ளனர்.
கட்சிக்குக் கிடைத்த நல்ல தலைவரை வைத்துக்கொண்டு கட்சியை புனரமைக்காமல் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியுள்ளனர்.
கடந்த காலங்களில் தாம் சென்ற எந்த இடமும் தோல்வியடையவில்லை எனச் சுட்டிக்காட்டிய சம்பிக்க ரணவக்க, தெளிவான கொள்கையுடன் செயற்படும் தாம் வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்றும் கூறினார்.
Published by
![sampika_ranawaka-300x199[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/06/sampika_ranawaka-300x1991.jpg?w=150&h=100)
Leave a comment