மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் பல ஊடக அமைப்புக்கள் அடிக்கடி தோற்றுவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவையெல்லாம் பொதுத்தளமொன்றில் தமக்கான களமொன்றை அமைத்துக்கொண்டு வெளிப்படையாகச் செயற்படுவதற்கு முன்வராமல் பிரதான நிர்வாகிகளின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்,
நாம் இச்சங்கத்தை ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குள்ளாகவே மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் எமது செயற்பாட்டுத் தளத்தை அனைத்து வசதிகளுடனும் மிகவும் வெளிப்படையாகவே நிறுவியுள்ளோம்.
இந்த வெளிப்படையான ஊடகக் கட்டமைப்பையும், ஒன்றிணைந்த ஊடகர்களின் செயற்பாட்டையும் இம்மாவட்டத்திலுள்ள சகல ஊடகவியலாளர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.
கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் இன்று (12.07.2015) காலை 10:00 மணிக்கு, மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா வீதியில் அமைந்துள்ள அதன் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேற்கண்டவாறு கருத்துரைத்த அவர் மேலும் கூறியதாவது:
மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியாளர்களை தமிழ் – முஸ்லிம் மற்றும் பிரதேச பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைத்துச் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இச்சங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் செயற்பாடுகளையும், அங்கத்தவர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குமாக மட்டக்களப்பு நகரில் சங்கத்திற்கான அலுவலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற தேவைப்பாட்டை நாம் கருத்தில் எடுத்து, மட்டக்களப்பு நகரில் ஒரு கட்டிடத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம்.
அந்த நடவடிக்கையின் தொடரில் நாம் பல கட்டிடங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதிலும், இறுதியில் இந்த மாநகரத்தின் மையப்பகுதியில் பொதுநூலகம், மஹாத்மா காந்தி பூங்கா, நீதிமன்ற வளாகம், மாவட்டச் செயலகம், மாநகர சபை, வங்கிகள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் போன்ற கேந்திர முக்கியத்துவமான நிலையங்களும், நிறுவனங்களும் அமைந்துள்ள இடத்தில் அமைந்து காணப்பட்ட இந்தக் கட்டிடமே பொருத்தமானது எனத் தீர்;மானித்து இதனைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.
மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான இக்கட்டிடத்தை எமது வேண்டுகோளுக்கமைய அச்சங்கத்தின் தலைவர், பொதுமுகாமையாளர் உள்ளிட்ட நிர்வாக சபையினர் மாதாந்த வாடகைக்கு வழங்க முன் வந்தனர். அவ்வாறு முன் வந்தமைக்காக மட்டக்களப்பு ப.நோ.கூ. சங்க நிர்வாகத்தினருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் இச்சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.குறிப்பாக, ஒரு ஊடகவியலாளர்களின் சங்கமானது எவ்வாறு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயற்பட வேண்டும் என்பதை எமக்கு பல சந்திப்புக்களின் மூலமாக உணர்த்தி, உரிய ஆலோசனைகளை வழங்கிய மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான மதிப்புக்குரிய திருமதி. பி.எம்.எஸ். சார்ள்ஸ் அம்மையாருக்கும் நான் இச்சங்கத்தின் சார்பாக இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக் கட்டிடம் பல வருட காலமாக எவராலும் பாவனைக்குட்படுத்தப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. குடிநீர் இணைப்பு இல்லாதிருந்தது. இதனை நாம் கையேற்கும்போது எவ்வாறான நிலைமையில் இருந்தது என்பதனை இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் சாட்சிப்படுத்தும். அவ்வாறானதொரு நிலைமையிலிருந்த இந்தக் கட்டிடத்தையே இன்று நாம் இவ்வாறு ஊடகர்களான நமது பயன்பாட்டிற்குரிய பொதுத்தளமாக மாற்றியமைத்திருக்கின்றோம்.
இந்தவகையில் எமக்கு ஒத்துழைப்புக்களையும், அனுசரணைகளையும் வழங்கிய நிர்வாக சபையினருக்கும், அங்கத்தவர்களுக்கும், நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கிய தனவந்தர்ககள், வர்த்தகப் பெருமக்களுக்கும் நான் சங்கத்தின் சார்பாக நன்றிகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.
இந்த அலுவலகப் புனரமைப்புப் பணிகளுக்காக 1,54,520 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதற்கான கணக்கு விபரங்கள் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மின்னிணைப்பு, நீரிணைப்புக்காக இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட்டிருக்கும் 68,932 ரூபா 41 சதத்தையும் நமது சங்கத்தின் முற்பணமாகப் பேணுமாறு மட்டக்களப்பு ப.நோ.கூ. சங்கத்தின் நிர்வாக சபையினருக்கு நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதனடிப்படையில் இப்புனரமைப்புப் பணிகளுக்கு மத்தியிலும் மேற்குறித்த முற்பண வைப்புத் தொகையானது நமது சங்கத்தின் நிலையான சொத்தாகவே கருதப்பட வேண்டும்.
நமது மாவட்டத்தில் பல்வேறு பெயர்களிலும் பலவாறான நோக்கங்களோடு ஊடக அமைப்புக்கள் அடிக்கடி தோற்றுவிக்கப்படுகின்ற போதிலும் அவை பொதுத்தளமொன்றை அமைத்து வெளிப்படையாகச் செயற்படுவதற்கு முன்வராமல் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பிரதான நிர்வாகிகளின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப்போய், அங்கத்தவர்களுக்கு விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத வெளிப்படைத்தன்மையற்ற வகையில் காணப்படுகின்ற இன்றைய சூழ்நிலையில், நாம் எமது செயற்பாடுகளையும் எமக்கு கிடைக்கப் பெறுகின்ற நிதியுதவிகள் மற்றும் பொருளுதவிகளையும் அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இங்கே வெளிப்படையாகவே சமர்ப்பித்திருக்கின்றோம்.
எமது மாவட்டத்தில் கடந்த காலங்களில் தோற்றுவிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலமும், பன்னாட்டு நிறுவனங்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுடைய ஊடகவியலாளர்களுக்கும், ஊடக அமைப்புகளுக்குமான அலுவலகத் தளர்பாடங்கள், கணனிகள், புகைப்படக் கருவிகள் போன்றவை எங்கே, எவர் வசம் இப்போதுள்ளது என்கிற தகவல்கள்கூடத் தெரியாத நிலையில்தான் அவ்வாறான அமைப்புக்களில் நம்பிக்கையுடன் அங்கத்தவராக இணைந்த ஊடகவியலாளர்கள் பலர் விசனத்துடன் காணப்படுகின்றனர். அவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் இச்சங்கத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, அத்திவாரத்திலிருந்து முறையான பதிவேடுகள் மூலம் நாம் எமக்குக் கிடைக்கப் பெறுகின்ற அனைத்து வளங்களையும் பேணி வருகின்றோம்.
மேலும், இம்மாவட்டத்திற்குள் மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் நலவுரிமைகளைப் பேணுவதிலும் எமது கிழக்கு ஊடக சங்கமானது அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட செயற்பாட்டை நாம் கண்டித்து அறிக்கையிட்டோம். அதேபோன்று யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களை குழப்பக்காரர்கள் என்று அம்மாவட்ட அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் பகிரங்கமாக விமர்சித்ததையும் நாம் கண்டித்து அறிக்கையிட்டோம்.
நாம் எந்த இனத்தை, எந்த மதத்தை, எந்த அரசியல் கட்சியைச் சார்ந்திருந்தாலும் ஊடகவியலாளன் என்கிற வகையில் ஒரே குடும்பத்தினர் என்கிற உறவுணர்வைக் கொண்டுள்ளோம். மாத்திரமன்றி, பத்திரிகைத்துறையிலும், இலத்திரணியல் ஊடக நிறுவனங்களிலும் செய்திச் சேவையாற்றுபவர்களை மாத்திரம் நாம் ஊடகவியலாளர்களாக வரையறுத்துக்கொண்டு செயற்படவில்லை.
இவற்றுக்கு அப்பால் இணையதளங்களிலும், முகநூல்களிலும் தமது உண்மையான சொந்தப் பெயர்களில் தகவல்களை வெளிப்படுத்தி வரும் அனைவரையும் ஊடகம் என்கிற எல்லையில்லா வெளிக்குள் உள்வாங்கி அவர்களையும் எமது சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கிய கர்த்தாக்கள் போன்ற யாவரும் எமது ஊடகக் குடும்பத்தின் உறவுகளாகும். அவர்கள் அனைவரையும் நாம் தொடர்ந்தும் உள்வாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
தற்போது எமது தலைமையகத்தையும், அதன் செயற்பாடுகளையும் மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தகர்களும், அரசாங்க அதிகாரிகளும், சமய சமூக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். பொது நூலகம், நீதிமன்றம், மாவட்டச் செயலகம், காந்தி பூங்கா, மாநகர சபை போன்றவற்றுக்கு தினமும் வருகை தருகின்ற பொதுமக்களும் எமது அன்றாடச் செயற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.
எமது அலுவலகம் அமைந்துள்ள சுற்றுச் சூழல் இப்போது இரவில் வெளிச்சமுற்றிருப்பதாகவும், அதனால் சமூகவிரோதச் செயற்பாடுகள் குறைந்துள்ளதாகவும் இரவு நேரக் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறையினரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான கருத்துக்களும், அவதானிப்புக்களும் எமக்கு உற்சாகத்தை அளிக்கின்றன. இன்னும் பல பிரகாசமான நடவடிக்கைகளை நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் வீ. பத்மசிறி சென்ற கூட்டறிக்கையையும், பொருளாளர் எஸ். சுச்சுதானந்தகுமார் கணக்கறிக்கையையும் சமர்ப்பித்தார். அவற்றை நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற்று அங்கீகரித்தனர்.
Published by





Leave a comment