நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஶ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து மரச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதானது, முஸ்லிம் அரசியல் களத்தில் சமகாலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் முகவரியைப் பெற்றுக் கொடுக்காக ‘ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்’ எனும் அரசியற்கட்சியினை ஆரம்பித்தவர் என்ற வகையில் அழியாப்புகழ் பெற்றவராகத் திகழ்கின்றார்.
அதன் பின்னர், முஸ்லிம் அரசியற்களத்தில் ‘நல்லாட்சி’ எனும் சொல்லாடலை முதன் முதலாக இச்சமூகத்தின் முன்வைத்து, முதலாவது தேர்தல் களத்திலேயே ஒரு உள்ளுராட்சி மன்ற உறுப்பினரையும் பெற்றுக் கொண்ட பெருமையை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே பெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் தாய்க்கட்சியான மு.கா.விலும், அதிலிருந்து பிறந்து முஸ்லிம் சமூகத்தில் வளர்ந்து நிற்கும் அ.இ.ம.கா மற்றும் தே.கா போன்ற அரசியற் கட்சிகளிலும் முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ள போதிலும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அல்லது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனப்படும் இந்த இளம் அரசியல் தளத்தில் முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் விஷேடமாகக் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
ஊழல், மோசடி, ஏமாற்று, பொய்யுரைப்பு, கட்சித்தாவல், அதிகாரத் துஷ்பிரயோகம், அரசியல் வன்முறை, நாகரீகமற்ற பிரச்சாரம், அனாச்சாரச் செலவினம் போன்றவை ஏனைய முஸ்லிம் கட்சிகளின் மத்தியில் மலிந்துள்ளது காணப்படுவது போன்று, இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அமைப்பில் இவையெவையும் காணக்கிடைப்பதில்லை.
மாறாக, உண்மை, நேர்மை, ஊழல் மோசடியில்லாத வெளிப்படைத்தன்மை, இயக்கத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாத வகையில் சக அரசியற்கட்சிகளுடன் இணைந்து செயற்படல் போன்ற வெகுஜன வரவேற்புக்குரிய செயற்பாடுகளை இந்த அமைப்பில் நிறைந்து காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான குணவியல்புகளுடன் ‘நல்லாட்சி’த் தத்துவார்த்தத்தை தனது அடிநாதமாகக்கொண்ட இந்த மக்கள் இயக்கத்தை முளையிலேயே கிள்ளி அழித்துவிட உள்ளுர் அரசியல் ஜாம்பவான்களும், தேசிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கடந்த காலங்களில் முயன்று வந்துள்ள போதிலும்கூட, அவர்களது சவால்களையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து ஒவ்வொரு தேர்தல் களத்திலும் ஒவ்வொரு வகையான சாதனைகளை இந்த மக்கள் சக்தி இயக்கம் வெளிப்படுத்தி வந்துள்ளது கண்கூடு.
முதல் எட்டில் தனது தாயகத் தளத்தில் ஒரு உள்ளுராட்சி அதிகாரமுள்ள உறுப்பினரைப் பெற்றுக்கொண்ட இவ்வியக்கம், நான்காண்டுகளுக்குப் பின்னர் எதிர்கொண்ட இரண்டாவது தாயகத் தேர்தல் களத்தில் இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுச் சாதனை படைத்தது.
இரண்டாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இம்மக்கள் இயக்கம் முதல் தடவையாகக் களமிறங்கியபோது, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஐ.ம.சு.முன்னணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த 4000 வாக்குகளை திருடிக் கொண்டதால் இவ்வியக்கத்திற்கு கிடைக்கவிருந்த இறுதி மீதி வாக்குகளுக்கான ஆசனம் தட்டிப்பறித்துக் கொள்ளப்பட்டது. (இந்த 4000 வாக்குகள் திருட்டினால் கி.மா. சபையில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை த.தே.கூ. இழந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது)
இதன் பின்னர் வட மாகாண சபைக்கு நடாத்தப்பட்ட தேர்தலில் தமிழ் – முஸ்லிம் உறவு நிலை பெரிதும் விரிசலடைந்து காணப்பட்ட சூழலிலும் கூட, முஸ்லிம் சமூகத்தினதும் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் காரமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் மிகத் துணிச்சலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணிணைந்து தமிழ் – முஸ்லிம் உறவுக்கான அத்திவாரத்தை பலமாக இட்டதுடன், வடக்கு மாகாண சபையில் த.தே.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்புரிமையொன்றையும் பெற்று வரலாறு படைத்தது.
அதனைத் தொடர்ந்து ஊவா மாகாண சபைத் தேர்தல் களம் வந்தபோது, மஹிந்த அரசுக்கு விசுவாசமாக மு.காவும், அ.இ.ம.கா.வும் கூட்டுச் சேர்ந்து தந்திரமாக ஊவா முஸ்லிம்களுடைய வாக்குகளை அபகரித்து அரசியல் ஆதாயம் அடைய முற்பட்டபோது, ஐ.தே.கட்சியுடன் இம்மக்கள் இயக்கம் கூட்டிணைந்து செயற்பட்டதன் மூலம் ஊவாவிலும் காலூன்றிக் களம் படைத்தது.
இதனடியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நம்மைச் சந்தித்தபோது, அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ‘மதில்மேல் பூனை’களாக தத்தமது அரசியல் இலாபநட்டக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டு மௌனித்திருந்த வேளையில், முந்திச் சென்று எதிரணிக்கூட்டில் இணைந்து துணிகரமாக் கையெழுத்திட்டதன் மூலம் இலங்கை முஸ்லிம் சமூகத்தினிடையே ‘நல்லாட்சி’க் கோஷத்தை நாடளாவ ஒலிக்கச் செய்து ஊழலும், மோசடியும், அதிகாரத் துஷ்பிரயோகமும், அரசியல் அடாவடித்தனங்களும் நிறைந்த மஹிந்த ராஜபக்ஷவின் கொடுங்கோல் ஆட்சி முற்றுப் பெறுவதற்கு மணி கட்டிச் சரித்திரம் படைத்தது இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.
இவ்வாறான சாதனை வரலாறுகளைக் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைத்தான், எதிர்வரக்கூடிய பொதுத் தேர்தலில் ஶ்ரீ.ல.மு. காங்கிரஸானது, தனது பங்காளிக் கட்சியாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் கூட்டிணைத்துக் கொண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தனது நேர்மையான, வாய்மை தவறாத செயற்பாடுகளால் மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு, நாகரீக கனவான் அரசியல் வழியில் நடைபயின்று வந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் தற்போது ஶ்ரீ.ல.மு.காங்கிரஸும் ‘நல்லாட்சி’ அரசாட்சியை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் வலுப்படுத்தி இந்த நாட்டில் அமுல்படுத்துவதற்காகக் கூட்டுச் சேர்ந்திருப்பதானது, மு.கா.வில் இருந்து கொண்டே தலைவர் றவூப் ஹக்கீமை காலத்துக்குக் காலம் தர்மசங்கடத்திற்குள்ளாக்கி வரும் சில சுயநலமிகளுக்கு ஜீரணிக்க முடியாத கசப்பான விடயமாக இருக்கலாம்.
ஆனால், மு.கா.வின் அதியுயர்பீட உறுப்பினரும், முன்னாள் காத்தான்குடி நகர சபை முதல்வருமான அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை போன்றவர்களுக்கு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் மு.கா. தனது எதிர்கால அரசியல் பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தை உள்ளுர ஏற்படுத்தியிருந்ததுடன், அதனை வலியுறுத்தும் வகையில் ‘றவூப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன செய்ய வேண்டும?;’ என்ற தலைப்பில் பகிரங்கக் கடிதமொன்றினையும் எழுத வைத்ததன் அதிரடி மாற்றம்தான், இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த ‘SLMC & NFGG’ இணைவின் அத்திவாரம் என்றால் அது மிகையாகாது. (தொடரும்)


Leave a comment