டாக்கா: தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை பதிவு செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
2-0 என்ற கணக்கில் இருபது20 தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா, நேற்று வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடியது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்காக 20 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா முதல்முறையாக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். முன்னதாக அவ்வணிக்காக 4 சர்வதேச இருபது20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை ரபடா வீழ்த்தியிருந்தார்.
ரபடாவின் ஆட்டம்தான் நேற்று வங்கதேச துடுப்பாட்டத்தை புரட்டி போட்டுவிட்டது. ஏனெனில் மொத்தம் 8 ஓவர்கள் வீசிய ரபடா, 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். தான் ஆடும் முதல் ஒருநாள் போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் படைத்த மிகச் சிறந்த சாதனை இதுவாகும்.
அதிக விக்கெட்டுகளை சாய்த்த சாதனை ஒருபக்கம் என்றால் முதல் போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை படைத்த வீரர் பட்டியலில் 2வதாக சேர்ந்துள்ளார் ரபடா. முன்னதாக வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம், தனது முதல் ஆட்டத்தில் ஹட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
ரபடா தான் வீசிய 2வது ஓவரிலேயே தமிம் இக்பால், லிடன் தாஸ், மற்றும் மஹ்மதுல்லா ஆகிய 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இச்சாதனையை பதிவு செய்தார்.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவரின் உட்சபட்ச சாதனையும் ரபடாவுடையதே.
முன்னதாக 2006ல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மகயா என்டினி 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்தது அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளரின் திறமையாக இருந்தது. மேலும், முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் (மற்றும் அதற்கும் மேல்) வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் 2வது பந்துவீச்சாளர் ரபடா.
1991ல் இந்தியாவுக்கு எதிராக அலன் டொனால்ட் தான், களமிறங்கிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment