“SLMC-NFGG கூட்டு” – ஒரு நேரான பார்வை

slmc[1]NFGG-Logo– ரா.ப. அரூஸ்

இன்று இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பேசுபொருளாக “SLMC-NFGG கூட்டு” என்பது பிரதான இடம் பிடித்திருக்கின்றது. இந்த விடயமானது பலராலும் பலவாறு நோக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. மேற்படி “SLMC-NFGG கூட்டு” விவகாரம் பற்றி முகநூல் நண்பர்களும் சில இணையத்தளங்களும் விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது யார் எப்படி விமர்சித்தாலும், யார் என்ன சொன்னாலும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளைத் தனித்துவப்படுத்திக் காட்டிய முதலாவது கட்சி என்றால் இதனை யாராலும் மறுக்க முடியாது. அதன் ஆரம்பத் தாக்கம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கவே முடியாத மானசீகமானதொன்றாகவே இருந்து வருகிறது. இடையிலே எம்.எச்.எம்.அஷரபின் மறைவிற்குப் பின்னர் இக்கட்சி ஏராளமான உடைவுகளையும் சவால்களையும் கண்டுங்கூட இன்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முதன்மைக் கட்சியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருந்து வருகிறது.

இது முகநூல் நண்பர்களக்குத் தெரியாவிட்டாலும் எமது பேரினத் தலைமைகளுக்கும் சர்வதேசத்திற்கும் நன்றாகவே தெரியும். காலத்திற்குக் காலம் எம்மவர்களால் அதிகமாக விமர்சிக்கப்படும் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான், அதே வேளை முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் கட்சியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான்!

ஆனால் எமது தேசம் கடந்த காலங்களில் ஒரு பேரினவாத அரக்கனின் பிடியில் மாட்டிக்கொண்டதன் விளைவாய் நாட்டின் சகல பிரஜைகளும் ஏதோ ஒரு வகையில் அனுபவித்த துன்பங்களைப் போலவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் சொல்லொண்ணா சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டதென்னவோ உண்மைதான். அக்காலகட்டத்தில் நிறையத் தடவைகள் இருதலைக் கொல்லியாய் கட்சியின் தலைமை உட்பட மாட்டித் திணறியதும் உண்மைதான். பேரினவாதத்தின் சூழ்ச்சிகளில் மாட்டிக்கொண்டு கட்சி பல உடைவுகளைச் சந்தித்ததும் உண்மைதான்.

ஆனால் அதற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கையாலாகாதவர் என்றோ, அரசியல் சாணக்கியமற்றவர் என்றோ, முற்று முழுதும் சமூக நலனில் அக்கறை அற்றவர் என்றோ கூறிவிட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அதிகமான விமர்சனங்களுக்குக் காரணமாய் அமைந்த விடயம் யாதெனில், விமர்சிப்பவர்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்களை மையப்படுத்தியே சிந்திக்கும் அதே சமயம் தலைமையோ தேசிய ரீதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் சிந்தித்து முடிவெடுப்பதுமேயாகும்.

இவ்வாறு நான் கூறுவதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸிற்கு ஜால்ரா அடிப்பதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். நானும் ஏராளமான விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை எனது எழுத்துக்களினூடாக அவ்வப்போது மிகக் காரமாகப் பதிவு செய்திருக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸ் காங்கிரஸ் மாத்திரமல்ல ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தலைமைகளைப் போல உரிமை அரசியல் செய்யவில்லை, மாறாக சுகபோக அரசியலே செய்துவருகிறார்கள் என நியாயமாக விமர்சித்திருக்கிறேன்.

ஆனால் நான் இந்தக் கட்டுரையில் தெளிவு படுத்த விளையும் விடயத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய நேரான பார்வையும் அத்தியவசியமாகின்றது. “…உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான விடயத்தின் பக்கம் முதலில் வாருங்கள்…” (அல்குர்ஆன் 3:64) எனும் இறை வழிகாட்டலுக்கிணங்கவே இக்கட்டுரையை எழுத முற்பட்டேன்.

NFGG ஐப் பொறுத்த வரையில் PMGG என்ற பெயருடன் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவ்வியக்கம் ஆரம்பந்தொட்டே அழகியதொரு நேர்மையான அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அத்தோடு அவ்வப்போது உண்மையின் பக்கம் உறுதியாக நின்று விமர்சன அரசியலையும் செய்து வருகின்றது. இவ்வியக்கத்தினரின் சமகால அரசியல் நகர்வுகளை நோக்கும் போது மிகச் சாணக்கியமான முன்னெடுப்புக்களைக் கண்டு கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. கறை படியாத கரங்களும் சுயநலமற்ற சிந்தனைகளும் இவர்களது பிளஸ் பொய்ன்டுகள்.

PMGG இனரால் அரசியல் தளத்தில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டவர்களே இந்த முஸ்லிம் காங்கிரஸ் இனர்கள்தான். ஆனால் எந்த இடத்திலும் முஸ்லிம் காங்கிரஸினர் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என்றோ அவர்களது அரசியல் முஸ்லிம்களுக்குத் தேவையில்லையென்றோ PMGG இனரின் விமர்சனங்கள் அமையவில்லை. எனது அவதானிப்புக்குட்பட்டவற்றுள், ஒரு சகோதரனை வழிநடாத்தும் அறிவுரைகளாகவே PMGG இனரின் விமர்சனங்கள் அமைந்திருந்தன.

முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் கலாசாரத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார்களே தவிர முஸ்லிம் காங்கிரஸை வீழ்த்தி முஸ்லிம்களுக்கான புதிய தலைமைத்துவமாக தாம் உருவெடுக்கவேண்டும் என்ற தலைமைத்துவ மோகமோ பதவி ஆசைகளோ PMGG இடம் இருந்ததாக நானறியவில்லை.

இந்தப் பின்னணியிலேதான் “SLMC-NFGG கூட்டு” எனும் விடயத்தினை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. தேசத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது முடியுமான வரைக்கும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று படவேண்டும் என்பதையும் தாண்டி சிறுபான்மையினராகிய நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். இதன் வெளிப்பாடாக கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு “சிறுபான்மையினர் ”என்ற ரீதியில் ஒன்றிணைந்து போனஸ் மூலம் ஒரு மாகாண சபை உறுப்பினரைப் பெற்றுக்கொண்ட NFGG இம்முறைப் பொதுத் தேர்தலில் “முஸ்லிமகள்” என்ற அடிப்படையில் கூட்டாகச் சேர்ந்து முஸ்லிம் உறுப்பினர்களின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதில் தவறேதுமிருப்பதாகத் தோன்றவில்லை.

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் முதுசொமாகத் திகழ்கிற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கூட்டுச் சேர்ந்திருப்பதானது பேரினவாதிகளுக்கும் அரசியல் சுயநலமிகளுக்கும் வேண்டுமானால் அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டுபண்ணியிருக்கலாம். ஆனால் நேர்மையாகச் சிந்திக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இதுவொரு இனிப்பான செய்திதான்.

கடந்த காலங்களில் PMGG தனித்துப் போட்டியிட்டதனால் வாக்குகள் துண்டாடப்பட்டு கிடைக்கவேண்டிய முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை இழக்கப்படுகிறது என்கிற விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால் இம்முறை அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்கு இந்த “SLMC-NFGG கூட்டு” வழிசமைக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்!

வரலாறுகளின் அடிப்படையில் பிரிவினைதான் தோல்விகளுக்குக் காரணங்களாக இருந்திருக்கின்றன. ஒன்றுபடுதல் விமர்சனங்களுக்குட்படலாம், ஆனால் அது வெற்றியின் அடையாளம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதுவும் ஒன்றுபட வேண்டிய தருணத்தில் ஒன்று படவேண்டிய கட்டாயத்தில் இவ்விரு முஸ்லிம் அமைப்புக்களினதும் கூட்டானது உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியதும் ஆரோக்கியமானதுமேயாகும். இந்த முன்னெடுப்பினைப் பற்றி ஒற்றை வாக்கியத்தில் சொல்வதானால் “பூவுடன் கூடிய நாரும் மணம் வீசும்!” என்று கூறலாம். இங்கு யார் பூ? யார் நார்? என்கிற விவாதம் நமக்கு அத்தியவசியமற்றது. ஏனெனில் எதுவானாலும் மணம் கிடைக்கப்போவது நமது சமூகத்திற்குத்தான்!

Published by

2 responses to ““SLMC-NFGG கூட்டு” – ஒரு நேரான பார்வை”

  1. Re-calling, Preference Votes, Leadership????

  2. Sri Lanka Muslim Nesan Avatar
    Sri Lanka Muslim Nesan

    நேர்மையின் விழுமியங்களை புறக்கணித்ததன் காரணமாகவே முஸ்லிம் அரசியல் இறைவனின் அருளை பெற்றுக் கொள்ள தவறியது’ -பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    ‘கடந்த 30 வருடகால முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இருக்கவில்லை. அதனால்தான் பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளையும் அதிகாரங்களையும் முஸ்லிம் அரசியல் பெற்றுக்கொண்ட போதிலும் வட கிழக்கு முஸ்லிம்களின் முதன்மையான பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை”. இவ்வாறு பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
    கடந்த 18.10.2013 அன்று காத்தான்குடி குட்வின் சந்தியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் (PMGG) நடாத்தப்பட்ட பொயக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    PMGGயின் பொதுச் செயலாளரும் காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவருமாகிய அஷ்ஷெய்க் ALM. சபீல் நழீமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் PMGG யின் சூறாசபை அமீர் MBM. பிர்தௌஸ் நழீமி, நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் (FJP) தலைவர் முஹம்மட் நஜா, மற்றும் வட மாகாண சபையில் PMGG தலைமை அரசியல் கூட்டமைப்பின் பிரதிநிதியாக அங்கம் வகிக்கும் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் நழீமி ஆகியோரும் உரையாற்றினர்.
    பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகின்ற போது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது…
    ‘முஸ்லிம்களின் உரிமைகளை வென்று தருவதாகவும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருவதாகவும் கூறுகின்றவர்கள் தமது அரசியலை கடந்த 30 ஆண்டு காலமாக மிகவும் வெற்றிகரமாகவும் இலாபகரமாகவும் நடாத்தி வருகின்றனர்.
    ஆனாலும், வட கிழக்கு முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் நீண்ட கால மற்றும் நாளாந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கூட அவர்களால் இதுவரை எதுவித தீர்வையும் காண முடியவில்லை.
    வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றப் பிரச்சினைகள், கிழக்கு மாகாணத்தில் பரவலாகக் காணப்படும் காணிப்பிரச்சினைகள் ஆகியன இதற்கு மிகச் சிறந்த இரண்டு உதாரணங்களாகும்.
    பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளும் அரசியல் அதிகாரங்களும் கைகளில் இருந்தும் கூட நமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன..?
    இறைவனின் “பறகத்” என்கின்ற அருள் நமது அரசியலில் இருக்கவில்லை என்பதே காரணமாகும் என்பதை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    இதனைப் புரிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியும்.
    பெரும் பெரும் பொருளாதார வசதிகளை கொண்ட ஒரு செல்வந்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருக்கிறது. திருப்திகரமாக சாப்பிடக்கூட முடிவதில்லை. அவரது பிள்ளைகள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சீரழிந்து செல்கிறார்கள். குடும்பத்தில் இன்னும் பல விடயங்களில் நிம்மதியில்லை. மொத்தத்தில் அவர் சேர்த்து வைத்திருக்கும் பொருளாதாரம் அவருக்கான நோயற்ற வாழ்வையோ அல்லது சீரான குழந்தைகளையோ அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கையையோ பெற்றுக் கொடுக்கவில்லை.
    அப்படியென்றால் அவரிடத்தில் அத்தனை பொருளாதார வசதிகள் இருந்தும் அவருக்கு இறைவனுடைய அருள் கிட்டவில்லை என்பதுதான் அர்த்தமாகும். இதே நிலைதான் முஸ்லிம் அரசியலிலும் 30 வருட காலமாக நிலவி வருகிறது.
    முஸ்லிம் தனித்துவ அரசியல் என்பது பெரும் பெரும் தேர்தல் வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கிறது. அரசாங்கங்களை மாற்றியமைத்திருக்கிறது. பெரும் பெரும் அமைச்சுப் பதவிகளைக் கொண்டிருக்கிறது.
    இறுதியாக கடந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கூட அச்சபையின் ஆட்சியைத் தீர்மாணிக்கின்ற பெரும் சக்தியாக மாறியது.
    இப்படியெல்லாம் இருந்தும் கூட முஸ்லிம்களின் எந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவர்களால் காண முடிந்தது..?
    கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகளில் ஒன்றுக்காவது இதுவரை தீர்வு காணமுடியவில்லை. வட மாகாண முஸ்லிம்களுக்கு உத்தியோக பூர்வ அகதி அந்தஸ்தைக்கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. முஸ்லிம்களின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றையாவது ஒருமித்த குரலில் பேசும் அளவுக்கு முஸ்லிம் அரசியலை ஒற்றுமைப்படுத்த முடியவில்லை.
    எனவேதான் முஸ்லிம் அரசியலில் இறைவனின் அருள் இல்லை என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.
    இதற்கான காரணம் என்ன..?
    நமது 30 வருட கால தனித்துவ அரசியல் வழிமுறைகளை திரும்பிப் பார்க்கின்ற போது இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கக்கூடிய வகையில் அது அமைந்திருக்கவில்லை.
    தேர்தல் வெற்றிகளையும் தனி நபர் பதவி அதிகாரங்களையும் மாத்திரமே இலக்காகக் கொண்டதனால் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்க வேண்டிய நேர்மையான விழுமியங்கள் எதனையும் முஸ்லிம் அரசியல் கொண்டிருக்க வில்லை.
    பொய், ஏமாற்று, சுத்துமாத்து, கழுத்தறுப்பு, வாக்குறுதி மீறல்கள், கள்ளவாக்கு போன்ற சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகள், வன்முறைகள், ஊழல் மோசடிகள் மற்றும் ஏனைய ஹறாமான செயற்பாடுகள் என்பனவே நமது முஸ்லிம் அரசியலில் மூலதனங்களாக இத்தனை காலமும் இருந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் தேர்தல்களில் நாம் வெற்றியடைந்தாலும் கூட இறைவனின் அருளை பெற்றுக் கொள்ளும் விடயத்தில்நம்மால் வெற்றிபெற முடியவில்லை.
    எனவேதான் இதற்கு தீர்வான மாற்று அரசியல் வழிமுறையினை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த மண்ணில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடக்கி வைத்தது.

Leave a reply to mohdrislan Cancel reply