எந்த நாளில் மஹிந்த வேட்புமனுவில் கையெழுத்திட்டார்? தொடரும் சர்ச்சை!

mahindaகொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுவில் எப்போது கைச்சாத்திட்டார் என்பது தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக நேற்றுக் காலை வேட்புமனுவில் மஹிந்த கையெழுத்திட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் அதற்கு முன்னைய நாளில் மஹிந்த வேட்புமனுவில் கையெழுத்திட்டார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் வேட்புமனுவில் மஹிந்த இன்னும் கையெழுத்து போடவில்ல என அவரின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

mahinda

எனினும், திடீரென நேற்றுக்காலை மகிந்த ராஜபக்ச வேட்புமனுவில் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மஹிந்த வேட்புமனுவில் கையெழுத்திட்ட போது, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படவும் இல்லை. அதுபற்றிய படங்களும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், நேற்றிரவே வேட்புமனுவில் கையெழுத்திட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.

இதில் ஒன்றில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த முன்பாக, சிராந்தி ராஜபக்ச பின்புறம் நிற்கும் போது மஹிந்த கையெழுத்திடுகிறார்.

இன்னொரு படத்தில் அவர் கையெழுத்திடும் போது, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, குமார வெல்கம, பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்தப் படங்களில் மின் குமிழ்கள் ஒளிருவதையும் காணமுடிகிறது. இதனால், மஹிந்த ராஜபக்ச நேற்றிரவே வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.

Published by

Leave a comment