அந்தநாள் ஞாபகம்-7: ஸக்காத்துக் காசும் சிறைச்சாலையும்

antha naal7– MJ

காத்தான்குடி: இருபத்து ஐந்துக்கு, இருபத்து ஏழுக்கு அல்லது பெருநாள் இரவைக்கு ‘அடைக்கிறயாம்’ “அங்க அடைக்கிறயாம்”, “இங்க அடைக்கிறயாம்”. “அடைக்கிறயாம்” எனும் ஸக்காத் கொடுத்தல் ஓர் காலத்தில் காத்தான்குடியில் இருந்து வந்தது.

குறிப்பாக இறுதிப்பத்தின் பிந்திய நாட்களில் ஸக்காத் காசு கொடுத்தல் காத்தான்குடியின் அப்போதய செல்வந்தர்களின் நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வந்தது.

“அடைத்தல்” என்பது குறிப்பிட்ட செல்வந்தர் வசிக்கும் வீதியின் இருமருங்கிலும் நடப்படும் கம்புகளைக் கொண்டு வேலியமைத்து அவற்றுக்குள் “செக்குரிட்டி” நபர்கள் நிறுத்தப்பட்டு அவற்றின் ஊடாக ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுவர். காலை முதல் நண்பகல் வரைக்கும் உள்ளே போனவர்கள் போனதுதான். வெளியே வர முடியாது.

சில செல்வந்தர்களின் காணிகளிலும் இந்த அடைத்தல் நடைமுறை இருந்துவந்தது.

சுப்ஹ் தொழுகையிலிருந்து அடைத்தல் ஆரம்பமாகும். ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து அல்லது நண்பகலில் ஹாஜியார் தனது ஸகாக்களுடன் பணத்தை பையிலெடுத்துக்கொண்டு வந்து போடப்பட்ட மேசையில் பணத்தை வைத்துக்கொண்டு, வரிசையாக வருபவர்களுக்கு ஐந்தோ, பத்தோ கொடுத்து தனது ஸகாத் கொடுத்தலை ஊருக்கு அறிவித்து நிறைவேற்றுவார்.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை இந்த அடைத்தலில் அகப்பட்டு தவியாய் தவிப்பர். மிஞ்சிப்போனால் ஒரு இருபது ரூபாய்க்கு மேல் கிடைக்கவே கிடைக்காது.

antha naal7

1980களின் ஆரம்பத்தில் காத்தான்குடி செல்வந்தர்களின் சில ஸகாத் பணத்தைத் திரட்டி மெத்தைப் பள்ளிவாயலில் அடைத்துக்கொடுத்தல் இடம்பெற்றது.

சுப்ஹ்த் தொழுகையுடன் ஆரம்பமான அடைத்தல் நண்பகல் வரை நீடித்தது.

ஊரின் அநேகமானவர்கள் இந்த அடைத்தலில் பங்கேற்றாலும் கௌரவமான எந்த ஒரு ஏழையும், வயோதிபர்கள், அங்க வீனர்கள் அல்லது ஸக்காத்தைப் பெற தகுதியுடைய எவரும் இந்த அடைத்தல் சிறையில் அகப்படுவதில்லை.

நண்பகல் உச்சி வெயில் தாங்க முடியாமல் சிறைக்குள் அகப்பட்ட பலர் நோன்பை விட்டனர். பள்ளிவாயல் ‘ஹவ்து’ தன்னீரையும், வீடுகளிலுள்ள டப் தண்ணீரையும் அருந்தி நோன்பை விட்டவர்களும் அதிகம்.

சில அடைத்துக் கொடுத்தலில் 20 சதம் கூட பெற்று வெளியில் வந்த நிலை பலருக்கு அன்று ஏற்பட்டது.

உண்மையான ஸக்காத் எவருக்கு கட்டாயக் கடமையோ அவர்களை இணங்கண்டு அவர்களது பணத்தை அவர்களிடமே ஒப்படைக்கும் இஸ்லாமிய வழிமுறை தவறப்பட்டு, இந்த அடைத்துக் கொடுத்தல் சிறையில் நோன்பின் பாதிப் பொழுதைக் கழித்தவர்களே அதிகம்.

பெண்களுக்கும் சில இடங்களில் அடைத்துக் கொடுத்தல் இடம்பெற்று வந்தன.

1990ம் ஆண்டிற்குப் பின்னர் அடைத்துக் கொடுத்தல் முற்றாக நீங்கிவிட்டது.

இன்றும் என்னதான் ஊரில் ஸக்காத் நடை முறைகளில் முன்னேற்றம் என்றிருந்த போதிலும், ஸக்காத் பெற தகுதியானவர்களுக்கு ஸக்காத் பணம் போய்ச்சேர்வதில் பல தடங்கல்களும், சிரமங்களும் ஏற்படுகின்றமை கவலையளிக்கின்றது.

Published by

Leave a comment