மஹிந்த போட்டியிடுவது ஐ.தே.கவுக்கு ஆசிர்வாதமேயன்றி அச்சுறுத்தல் இல்லை

ranjan ramanayakaகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சுறுத்தலாகாது மாறாக இது மிகப் பெரிய ஆசிர்வாதமாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார்.

உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஊழல் மிக்க மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் களமிறக்க தீட்டியிருக்கலாமென சந்தேகிக்கப்படும் திட்டம் ஐ. தே. கவுக்கு சாதகமான சூழலை பெற்றுத் தந்திருப்பதாக சுட்டிக்காட்டிய ரஞ்சன் ராமநாயக்க, அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரவேசம் தேர்தல் களத்தில் விறுவிறுப்புடன் கூடிய கடும் போட்டியை ஏற்படுத்தியிருப்பது ஐ. தே. க. வேட்பாளர்களை உற்சாகப்படுத்தியிருப்பதாகவும் அவருடன் கம்பஹா மாவட்டத்தில் நேருக்கு நேர் போட்டியிட வாய்ப்பு கிட்டாதாவென காத்திருப்பதாகவும் அமைச்சர் ராமநாயக்க கூறினார்.

சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ரன்ஜன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பலர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கருத்து தெரிவிக்கின்ற போதும் ஜனாதிபதியவர்கள் எக்காரணம் கொண்டும் மஹிந்தவுக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை வாபஸ் பெற்றுவிடக்கூடாது என்பதே எனது கொரிக்கையாகும்.

மஹிந்தவை தேர்தலில் களமிறக்கியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய உயர்மட்ட அரசியல் பிரமுகர்களால் வகுக்கப்பட்ட திட்டமென பலரும் கூறுகின்றனர். உண்மை இதுவாக இருப்பினும் மஹிந்தவின் பிரவேசம் தேர்தல் களத்தை விறுவிறுப்படைய செய்துள்ளது என்பது தான் உண்மையென்றும் அவர் கூறினார்.

ஜனவரி 08 ஆம் திகதி வரையில் மஹிந்த ராஜபக்ஷ என்பவர் ஒரு திருடர், மோசடியாளர் என பிரசாரம் செய்து வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இப்போதும் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கூறமுடியாது. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே முதுகெலும்புடைய ஒரே நபர் அவர் மாத்திரமேயாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்தார். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாத்தார். இது ஒருவித அர்ப்பணிப்பு ஆகும். இதனை எவராலும் பிரிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வி கண்டார். பாராளுமன்றத் தேர்தலிலும் கம்பஹா மாவட்டத்தில் அவருடன் நேருக்கு நேர் மோதிப் பார்க்க ஆசைப்படுகின்றேன்.

இதிலும் தோல்வி கண்டபின்னர் மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபை பின்னர் நகர சபை, பிரதேச சபையென இறுதியாக கிராம மட்டங்களில் நடைபெறும் கூட்டுறவுச் சங்க தேர்தலில் போட்டியிடச் செல்வார். இது சரியாக உயர்தரம் படிக்கும் ஒரு மாணவன் க. பொ. த. சாதாரணதரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு தோற்றி இறுதியாக பாலர் பாடசாலையில் சேர்ந்து படிப்பது போன்ற தாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஊழல் மோசடிகளில் அகப்படாதவர்களே உள்ளனர். இவர்களுக்கு போட்டியாக ஊழல் மோசடி, மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவது எமக்கு பெரும் குதூக லத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 183 ரூபா 39 சதத்தை சம்பளமாக பெற்றிருந்தேன். அமைச்சரானதும் எனது சம்பளம் 02 இலட்சத்து 65 ஆயிரத்து 250 ரூபாவாகும். எனது இந்த சம்பளம் மக்களின் வரிப்பணமாகும். மக்களின் பணத்தை வாங்கி உண்டு, குடித்துவிட்டு அவர்களுக்காக ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பது நியாயமற்றதாகும். பாராளுமன்றத்தில் ஊமையாக இருப்பதற்காக எனக்கு இந்த சம்பளம் வழங்கப்படவில்லை. திருடனை திருடன் என்று கூறாவிட்டால் அவனும் திருடன் தான். நான் அதற்காக ஒருபோதும் அஞ்சமாட்டேன்.

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிர்க் கட்சியினர் இதுவரையிலும் சரியான பதிலை எமக்கு பெற்றுத்தரவில்லை. ஆகஸ்ட் 17 ஆம் திகதி இவற்றுக்கான பதில் எமக்கு கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

Published by

Leave a comment