வேட்பு மனுக்கள் ஏற்பு ஆரம்பம்: இறுதி முடிவின்றி பிரதான கட்சிகள் திண்டாட்டம்

Ranil-கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் தினங்களில் கட்சி தாவல்கள், கூட்டணி அமைக்கும் செயற்பாடுகள் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரதான கட்சிகள் இறுதி நேரத்திலேயே வேட்பு மனுத் தாக்கல் செய்யும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.தே.க. வேட்பு மனுக்கள் தயாரிக்கும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதோடு வேட் பாளர்கள் கையெழுத்திடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வேறு கட்சிகள் ஐ.தே.க.வுடன் இணைந்து வருவதால் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக ஐ.தே.க. வேட்புமனு பூர்த்தி செய்வது தாமதமாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முக பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதோடு நாளை முதல் வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருப்பதாக ஐ.ம.சு.மு. செயலாளர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட்ட பின் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட இருப்பதாக கூறினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் வேட் பாளர்கள் கையொப்பமிடும் நடவடிக்கைகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்தது.

Ranil-

மாவட்ட தலைமை வேட்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் படும் எனவும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனு தயாரிப்பது தொடர்பில் ஆராய கட்சி முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. த.தே.கூ. இல் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ஆட்சேபித்து மேலும் சில சுதந்திரக் கட்சி எம்.பிகள் ஐ.தே.க.வில் இணைந்து போட்டியிட தயாராவதோடு இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிய வருகிறது. இது தவிர முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இவ் அமைச்சர்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அறிய வருகிறது.

தனித்துப் போட்டியிடுவதாக ஹெல உருமய அறிவித்துள்ள அதேவேளை முன்னர் ஐ.ம.சு.மு. ஆட்சியில் அங்கம் வகித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி சமசமாஜக் கட்சி என்பன ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வாசுதேவ நாணயக்காரவின் கட்சி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மம்பிலவின் பிவிதுரு ஹெல உருமய என்பனவும் ஐ.ம.சு.முவுடன் போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

slmc_tna_logo[1]

இதேவேளை, ஊழல், மோசடி குற்றச்சாட்டுள்ள முன்னாள் ஐ.மு.சு.மு. எம்.பிகள் சிலருக்கு இம்முறை வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என சு.க.வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பு மனுக்கள் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்பட உள்ளதோடு அதனை தொடர்ந்து ஆட்சேபனை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட இருப்பதாக தேர்தல் செயலகம் கூறியது. வேட்பு மனு கையேற்பதையொட்டி மாவட்ட செயலகங்களுக்கருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு நேற்று முதல் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் என்பவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment