லண்டன்: லண்டன் போக்குவரத்துக் கட்டமைப்பு மீது நடந்த தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டதன் பத்தாவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை லண்டனில் துவங்கியுள்ளன.
லண்டன் ஹைட் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுச்சின்னத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
லண்டனின் மூன்று சுரங்க ரயில்களிலும் ஒரு பேருந்திலுமாக நான்கு குண்டுகள் முதல் கட்டமாக வெடித்த நேரத்தைக்குறிக்கும் வகையில் அதே நேரத்துக்கு இந்த மலர்வளையம் வைக்கும் நிகழ்வும் நடந்தேறியது.
இன்றையை நினைவுகூறலை ஒட்டி கேமரன் வெளியிட்டிருக்கும் தனது செய்தியில், பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு அடிபணியாது என்று தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான M15 அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ வாக்கர் இந்த நினைவு நாளையொட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில் (பிரிட்டிஷ்) சமூகத்துக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரும் சவால் என்று அவர் வர்ணித்த செயல்களை தடுப்பதற்காக தமது அமைப்பினர் தினந்தோறும் செயற்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படியானதொரு அறிக்கையை அந்த அமைப்பின் தலைவர் வெளியிடுவது வெகு அபூர்வ நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

Leave a comment