கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அஹ்மட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆகியோரால் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஒப்பந்த மற்றும் பதிலீட்டு ஊழியர்கள் நியமனத்தில் காத்தான்குடி நகரசபைக்கென்று 2015.07.02 ஆம் திகதி 27 தனி நபர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், சென்ற காலங்களில் மொத்தம் 83 ஆளணி வளத்துடன் தான் நகரசபை நிர்வாகம் இயங்கியது. கழிவுகள் அகற்ற , வடிகான் துப்பரவிற்கு இன்னும் ஏனைய பணிகளுக்கான ஆளணி வளப் பற்றாக்குறை இங்கே மிகுந்திருந்தது.
நிரந்தர நியமனம் என்பது குதிரைக் கொம்பாக இருந்த காலகட்டத்தில், எம்மால் தொடர்ந்தெடுக்கப்பட்ட முயற்சிகளும் முன்னெடுப்புகளும் தந்த பலனாக 83 ஆக இருந்த ஆளணி வளம் நிரந்தர நியமனங்களுடன் 143 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து, எமது நிர்வாகக் காலத்திலேயே பூரணப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளினால் 2015.06.26 ஆம் திகதி 37 பேருக்கான நிரந்தர நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் பிரகாரம் காத்தான்குடி நகரசபையின் ஆளணி வளம் மொத்தம் 182 ஆக அதிகரித்த நிலையில் 35 வருடத்திற்கு ஆளணி வளப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழலில்தான் காத்தான்குடி நகரசபை ஆளணி வளத்தை நிறைவாக்கி எமது மக்களுக்கு குறைவில்லாத சேவையை நகரசபை வழங்க ஏற்பாடு செய்த பின்பே சபை கலைக்கப்பட்டு நாம் வெளியேறினோம்.
இன்று இவர்களினால் செய்யப்பட்டுள்ள பதிலீட்டு ஒப்பந்த அடிப்படையிலான இந்த நியமனம், மேலதிகமானது என்று கூட கூறமுடியாது. இந்த நியமனம் தேவையற்றது. ஏனெனில் காத்தான்குடி நகரசபையின் ஆளணி வளம் நான் மேற்குறிப்பிட்டவாறு நிறைவாக இருக்க எமது மக்களின் வரிப்பணத்தில், அதாவது மாதந்தோறும் 450 000/- ரூபாவை இவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்து எமது மக்களின் அபிவிருத்தி தேவைகளை முடக்குவதற்கு இவ்விருவரும் முனைந்துள்ளமையை முன்னாள் நகர முதல்வர் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிப்பதோடு எந்த அவசியமும் அவசரமும் இல்லாத நிலையில் காத்தான்குடி நகரசபைக்கென வழங்கப்பட்டுள்ள இந்நியமனம் இவர்களின் அரசியல் பலத்தால் புரியப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகம் என்பதையும் மக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இவ்வாறு மேலதிகமான இந்நியமனத்தின் மூலம் இவ்வூழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளமாக வழங்கப்படப்போகும் இப்பணம் எமது மக்களின் வரிப்பணமாக இருப்பதால் இவ்வாறான இவர்களின் அடாவடித்தனத்தை பொது மக்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக இவ்வாறு மேலதிகமான நியமனங்கள் கொடுத்து மக்களின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்யத் துணிந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முதலில் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளட்டும் என்பதையும் இச்செய்தியின் மூலம் கூறிக்கொள்கின்றேன்.
SHM. அஸ்பர் JP
முன்னாள் நகர முதல்வர்,
காத்தான்குடி
Published by

Leave a comment