சாய்ந்தமருது: சாய்ந்தமருதின் இரண்டாம் கட்ட அபிவிருத்தியாக தாமரைக்கேணி குள அபிவிருத்தி வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆரம்ப நிகழ்வில் காணி மீட்பு அதிகார சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் எம்.ஏ.ஹனீபா (மதனி) கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,
சாய்ந்மருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.றியாத் ஏ. மஜீத் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சாய்ந்தமருது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தோணா அபிவிருத்தியோடு இணைந்ததாக தாமரைக்கேணி குளமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என சாய்ந்மருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.றியாத் ஏ. மஜீத் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு வேண்டுகோள் கடிதத்தினை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீதிடம் கையளிக்குமாறும் அதற்கான நடவடிக்கையினை தான் மேற்கொள்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.
இதற்கமைவாக சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் ஊடாக கடிதம் வழங்கப்பட்டதை அடுத்து, பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைவாக இவ்வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.
தாமரைக்கேணி குள அபிவிருத்திற்கு துரித நடவடிக்கை எடுத்த கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர், பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், காணி மீட்பு அதிகார சபை செயலாற்றுப் பணிப்பாளர் எம்.ஏ.ஹனீபா (மதனி) மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோருக்கும் இவ் அபிவிருத்திற்கு பணிப்புரை வழங்கிய நகர அபிவிருத்தி, நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் சாய்ந்தமருது பிரதேச பொதுமக்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
தாமரைக்கேணி குளம் கடந்த சுனாமிக்கு பின்னர் அயர்லாந்து நாட்டின் கோள் அரசசார்பற்ற நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. காலப்போக்கில் உரிய பராமரிப்பின்றி இக்குளம் மாசடைந்தது.
இதன் பிற்பாடு இக்குள அபிவிருத்திக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பலனளிக்கவில்லை. தற்போது இக்குள அபிவிருத்தி மிக நீண்ட காலத்திற்கு பின்னர் நடைபெறுவதையிட்டு பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published by


Leave a comment