மட்டக்களப்பு: இலங்கை நாட்டிலுள்ள அறபு மதரஸாக்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் உலமாக்கள் சமூகத்தில் கௌரவமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதை முக்கிய நோக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் ,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தற்காலிகமாக காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டு
ஒராண்டு பூர்த்தியடைந்துள்ள நிலையில் இப் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 01-07-2015 புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் இஸ்லாமிய பீடத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பீ.எம்.அலியார் ரியாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆளுநர் சபை தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சேகு அலி,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர்கள்,பள்ளிவாயல்களின் பிரதம நப்பிக்கையாளர்கள்,சமூக,சமய நிறுவனங்களின் தலைவர்கள், உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் உட்பட அதன் மாணவர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு நிகழ்வின் சிறப்புரையை அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஹாஷிம் சூரி நிகழ்த்தினார்.
இதன் போது அதிதிகளினால் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
மேற்படி மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கு 100 ஏக்கர் காணி தேவையாகவுள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 50 ஏக்கர் காணியை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் குறித்த 50 ஏக்கரை அபிவிருத்தி செய்கின்ற பொழுது மிகுதியான 50 ஏக்கரை அரசாங்கம் தருவார்கள் எனவும் இது தொடர்பில் தொடர்ச்சியாக பேசி வருவதாகவும் முதற்கட்டமாக இந்த பல்கலைக்கழகக் கல்லூரி வளாகம் 100 ஏக்கர் காணியில் அமைய இருப்பதாகவும் இதற்கான நிதி உதவியினை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனம் சவூதி அரேபிய நாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்களோடு இணைந்து இந்தப் பணியை நாங்கள் செய்வதாகவும்,இந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்தில் முதற்கட்டமாக 3000 மாணவர்கள் தங்கி கல்வி கட்பதற்கு அமையவுள்ளதோடு இந்த பல்கலைக்கழகக் கல்லூரி வளாகம் அமைவுள்ள 100 ஏக்கர் காணியில் 7000ஆண் மாணவர்களும் 3000 பெண் மாணவிகளும் ,450 போராசிரியர்கள் ,ஊழியர்கள் தங்கி இருந்து தங்களது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமையவுள்ள குறித்த பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கு 680 கோடி ரூபாவை முதற்கட்ட நிதியாக ஒதுக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆளுநர் சபை தலைவர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
Published by



Leave a comment