அடிலைட்: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே அடிலைட் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.138 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பகல்-இரவு ஆட்டமாக ஒரு போட்டி நடைபெறுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
செப்பல்-ஹெட்லி டெஸ்ட் சீரிஸ் தொடரில் ஆட அவுஸ்திரேலியா பயணிக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இவ்விரு அணிகளுக்கு நடுவேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அடிலைட் ஓவல் மைதானத்தில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. அப்போட்டி பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.
டெஸ்ட் போட்டிகள் 1877ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன. இதுவரை ஆட்டத்தில் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஆனால் பகல்-இரவாக நடைபெற போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுவேயாகும். இதுவரை 2168 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவலகம் முடிந்தும், பள்ளிஇ,கல்லூரி முடிந்தும் வீடு திரும்புவோர் டெஸ்ட் போட்டிகளை பார்க்க வசதியாக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். பகலில் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் வருவதில்லை என்பதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் இனிமேல் இந்தியாவிலும் நடத்தப்பட இந்த முன்முயற்சி அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஒருநாளைக்கு 90 ஓவர்கள் வரை வீசப்பட வேண்டிய டெஸ்ட் போட்டியை இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் பகலில் ஆடும்போது, வீரர்களுக்கு பெரும் உடல் சிரமம் ஏற்படும். பகல்-இரவாக ஆடும்போது உடல் பாதிப்புகள் குறையும் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Published by

Leave a comment