டாக்கா: வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை இழந்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தலையை பாதி மொட்டியடித்து கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டுள்ளது வங்கதேச பத்திரிகையொன்று. இந்த செயல், இந்திய ரசிகர்களை கடுமையாக கொதிப்படைய செய்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியது.
டெஸ்ட் போட்டியில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினாலும், மழையால் பல நாள் ஆட்டம் தடைபட்டு, இறுதியில் சமன் ஆனது.
வங்க பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், ஸ்டேஷனரிகளில் கிடைக்கும், கட்டர் வகை கருவியை கையில் வைத்தபடி உள்ளார். அவருக்கு கீழே இந்திய வீரர்கள், ரஹான, ரோகித்ஷர்மா, விராட் கோஹ்லி, டோனி, ரவிந்திர ஜடேஜா, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் ஆகியோர் பாதி ஷேவ் செய்யப்பட்ட தலையுடன் காட்சியளிக்கின்றனர்.
இந்திய வீரர்கள் கையில் உள்ள பெனரில் ‘நாங்கள் பயன்படுத்திவிட்டோம். நீங்களும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது. முஸ்தபிசுர் ரஹ்மானிடமுள்ள பெனரில், ‘டைகர் ஸ்டேஷனரி. வங்கதேசத்தில் உருவானது. முஷ்தபிஸ் கட்டர், டாக்கா, மிர்பூர் ஸ்டேடியத்தில் இருப்பார்’ என்று எழுதப்பட்டுள்ளது.
முஸ்தபிசுர் ரஹ்மான், கட்டர் என்று கிரிக்கெட் பாஷையில் அழைக்கப்படும் ‘ஸ்லோ’ பந்துகளை வீசி இந்திய பெட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். இதை குறிப்பிட்டுதான், அவர் கட்டர் (முடி வெட்டும்) என்பதை போலவும், இந்திய வீரர்கள் தலையை சிரைத்துவிட்டது போலவும், வங்கதேச பத்திரிகை தனது நக்கலைக் காட்டியுள்ளது.
Published by


Leave a comment