மறைவான பல விடயங்களில் ஆழமான விசுவாசத்தைக் கொள்ளவேண்டிய கடப்பாடு ஒரு உண்மையான முஸ்லிமுக்கு இருக்கின்றது, முதலாவதாக ஒரு அழைப்பாளரின் அல்லது தூதரின் அழைப்பிற்கு செவி மடுத்து பிரபஞ்ச கர்த்தாவான எல்லாம் வல்ல அல்லாஹ்வைக் கொண்டு ஆழமான அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு விசுவாசியிடம் ஏற்படுகின்றது.
அவனது கட்டளைகளை அமுல் படுத்துகின்ற ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் கொண்டு அத்தனை வானவர்கள் அவர்களது பணிகள் குறித்து நாம் எமது புலன்களுக்கு புலப்படாவிட்டாலும் விசுவாசம் கொள்கின்றோம்.
இறுதித்தூதர் எமது தலைவர் எமது உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) முதல் அவருக்கு முன்வந்த அனைத்து நபிமார்கள் ரஸுல்மார்கள், அவர்களுக்கு அருளப்பட்ட மறைகள் தூதுகள் குறித்தெல்லாம் நாங்கள் ஆழமான நம்பிக்கை கொள்கின்றோம்.
பிரபஞ்சம் அதில உள்ள அத்துணை கிரகங்கள், நக்ஷத்திரங்கள், மண்டலங்கள், உலகம் அதிலுள்ள அத்தனை படைப்புக்கள் எல்லாவற்றின் இயக்கத்தின் பின்னாலும் ஒரு திட்டமிடப்பட்ட நியதிகள் எனும் கழாவையும் கத்ரையும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரத்தையும் எல்லையில்லா அவனது குத்ரத்துக்களையும் அழமாக விசுவாசிக்கின்ற கட்டாயத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றான்.
ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவினதும் நன்மை தீமைகள், உள்ளுணர்வுகள்,ஊசலாட்டங்கள் , சொல் செயால் அங்கீகாரங்கள் அத்தனையும் தெளிவான ஒரு பதிவேட்டில் பதியப்படுவதாக நாங்கள் ஆழமாக விசுவாசிக்கின்றோம்.
கப்ருடைய வாழ்க்கை, யுகத்தின் முடிவு, மஹ்ஷரில் மீண்டும் எழுப்பப்படல், மறுமை நாளில் கேள்வி கணக்கு கேட்கப்படல், சிராத் எனும் பாலத்தை தாண்டுதல், சுவர்க்கம், நரகம் செல்லுதல், சுகபோகங்கள், துன்பங்கள் வேதனைகளை அனுபவித்தல், அவற்றுடைய நிர்வாகம், எல்லாம் வல்ல அல்லாஹ்வினை, எமக்கு முன்வந்த தூதர்களை தரிசித்தல் எல்லா மறைவான விவகாரங்களிலும் அழமான விசுவாசம் நாம் கொண்டிருக்கின்றோம்.
இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்கான விலை நிலம் என்பதில் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டு எல்லாம் வல்ல அல்லாஹ்வும் அவனது தூதுவரும் அல்-குரான் அல்-ஸுன்னா ஆகியவற்றின் மூலம் எமக்கு காட்டித் தந்துள்ள உயரிய வாழ்வு நெறி இந்த ஆழமான விசுவாசக் கோட்பாடுகளினை மையமாக வைத்தே கட்டி எழுப்பப் படுகின்றது.
அத்தகைய அழமான நம்பிக்கைக் கோட்பாடுகள் ஒரு மனிதனை தனது “ஹவா” இச்சை வழி செல்லாமல் இறைவழி செல்கின்ற, உள்ளச்சத்தையும், உள்ளுணர்வுகளையும் ஏற்படுத்துகின்றன அந்த பயமும், பக்தியும், பரவசமும், இன்மை மறுமை வாழ்வு குறித்த கோட்பாட்டுத் தெளிவும் மனிதனை “ஹுதா” எனும் நேர்வழியில் இட்டுச் செல்கின்றன.
அவர்களது நம்பிக்கை கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக தக்வா எனும் உள்ளுணர்வின் விளைவாக அவர்களது செயற்பாடுகள் தூய்மை அடைகின்றன, அவர்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள், சக்கத்தை கொடுக்கின்றார்கள், அவர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டுள்ள செல்வங்களை இரை திருப்தியை மாத்திரமே இலக்காக கொண்டு செலவிடுகின்றார்கள்,
“அலிஃப், லாம், மீம் O இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும் O (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். O (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.O இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.”O (ஸுரத்துல் பகரா : 1, 2,3,4,5)
இத்தகைய அழமான விசுவாசக் கோட்பாடுகளின் உள்ளுணர்வுகளின் அடித்தளத்தில் ஒவ்வொரு விசுவாசியையும் புடம் போட்டு பயிற்றுவித்து அல்-குரானின் வழி நடக்கச் செய்கின்ற வருடாந்த பயிற்சிக் களமாகவே அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதம் முழுவதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும்,தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே,உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;.எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;.அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும்,உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).” (ஸுரத்துல் பகறா:185)
“:ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் (தக்வா) இறையச்சம் உடையோராக ஆகலாம்.” (ஸுரத்துல் பகறா:183)


Leave a comment