கொழும்பு: பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இந்தியா, இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அதிகரித்திருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. தினந்தினம் வெளியாகும் செய்திகளைப் பார்த்து மனித குலத்தின் மிருகத் தனத்தை எண்ணித் தலைகுனிய வேண்டியுள்ளது.
பெண்களைத் தலைவர்களாவும், தாய்மையைப் போற்று பவர்களாகவும், பெண்தெய்வ வழிபாட்டை மிகவும் பக்திபூர்வமாகக் கடைப்பிடிப்பவர்களாகவும் தாங்கள் விளங்குவதாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெருமைப்படும் நிலையில் இந்த நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது என்பது கவலை தரும் விடயமாகவே உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களில் வல்லுறவுச் சம்பவங்கள் 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருப்பதை பொலிஸ் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2010, 2012 காலப் பகுதியில் 3,624 வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இதே நிலை 2015 ஆம் ஆண்டின் முதலரை ஆண்டு முடிவதற்குள்ளேயே கிட்டத்தட்ட மூவாயிரத்தையும் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் சம்பவம் முழு நாட்டையுமே உலுக்கியது. அதனை விட சிறிது காலத்திற்கு முன்னர் யாழ். குடாநாட்டில் பதினொரு வயது சிறுமியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக கடற்படையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால் இது நடந்து ஆறு மாதங் களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அதன் தொடர் என்னவென்பது தெரியாதுள்ளது. தற்போது கிளிநொச்சியில் சின்னஞ்சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் பதை பதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய ஓரிரு சம்பவங்கள் ஊடகங்களின் கவனத்தை திருப்பியிருக்கும் அதேசமயம் ஆயிரக்கணக்கானவை தொடர்பாக வெளிச்சத்துக்கு வருவதில்லையென பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்கும் பேராசிரியர் சாவித்திரி பெர்னாண்டோ குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது. உண்மைதான் பல சம்பவங்கள் வெளியே தெரியாது கெளரவம் மற்றும் பயமுறுத்தல் காரணமாக மறைக்கப்படுகின்றன.
பாலியல் துஷ்பிரயோகம் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்திருப்பதாக இலங்கையில் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆய்வை சுட்டிக்காட்டி அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். தொழில் புரியும் பெண்கள், குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் போது தொழிலை இழந்துவிடும் அச்சத்தால் முறைப்பாடு தெரிவிக்காமல் விடும் சம்பவங்களும் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா ஆய்வில் இலங்கையைச் சேர்ந்த ஆண்களில் சுமார் 20 சதவீதமானோர் வல்லுறவில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருந்தனர். அவர்களில் 65 சதவீதமானோர் ஒரு தடவைக்கு மேலாக இதில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களில் அவர்களின் குற்றச் செயலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்ததாகக் கூறியோர் 5 சதவீதத்தினர் மட்டுமே.
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களினால் பாதிக்கப்படுவோர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக பகிரங்கமாக வெளிப்படுத்தி நீதி கோருவதற்கு அதிகளவுக்கு முன்வராதமைக்குக் கலாசார விழுமியங்கள் தடையாக இருப்பது குறித்து மனித உரி மைகள் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்டை நாடான இந்தியாவில் பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மோசமாக இடம்பெறுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி அண்மையில்கூடக் கவலை தெரிவித்திருந்ததுடன் வல்லுறவுகள் குறித்து கேட்கும்போது வெட்கத்தில் நாங்கள் தலைகுனிகின்றோம்.
இதனை ஏன் எம்மால் தடுக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியதுடன் பெண் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் நன்னடத்தையை ஆண்பிள்ளைகளிடம் ஏன் பெற்றோர் எதிர்பார்ப்பதில்லை? என் றும் வினாவியிருந்ததை காண முடிந்தது. வீட்டைவிட்டு பெண் பிள்ளைகள் வெளியே போகும்போது எங்கே போகிறாய்? என்று கேட்கும் பெற்றோர் ஆண்பிள்ளை வீட்டுக்கு வரும்போது எங்கே போய்விட்டு வருகிறாய்? என்று கேட்பதில்லை.
அவன் தவறான விடயங்களைச் செய்திருக்கக்கூடும். வல்லுறவில் ஈடுபடுவோரின் மகன் எவரோ ஒருவரின் மகனாகவே இருப்பார். அதனால் மகள்மாருக்கு பிரயோகிக்கும் அதே அளவுகோலை ஏன் மகன்மாருக்கு பெற்றோர் பிரயோகிப்பதில்லை என்று தெற்காசிய நாடுகளின் சராசரிப் பெற்றோரின் மனநிலையைச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்தியப் பிரதமர், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு அப்பால் தமது மகன்மாருக்கு நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பெற்றோரின் பொறுப்பையும் வலியுறுத்தியிருப்பதையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
இலங்கையில் வல்லுறவில் பாதிக்கப்பட்டவரை குற்றச் செயலை மேற்கொண்டவர் திருமணம் செய்யும் சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் யோசனையை சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார முன்னாள் அமைச்சர் தெரிவித்திருந்தார். அத்துடன் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் யோசனையையும் அவர் முன்வைத்திருக்கிறார். இதனை இந்நாள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதைக் காணமுடிகிறது. பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த நபரை பாதிக்கப்பட்டவர் எவரும் திருமணம் செய்ய விரும்பமாட்டார்கள் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இது குறித்து எந்தவிதமான உடனடியான தீர்மானத்திற்கும் வந்து விட முடியாது. இது குறித்து ஆழமாக ஆராய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மன நிலையிலிருந்து ஒவ்வொருவரும் இதனை நோக்க வேண்டும்.
வல்லுறவுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அப்பால் கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பாகவும் தார்மீக நெறி முறைகள் தொடர்பாகவும் சிறு வயது முதல் ஆண்பிள்ளைகளுக்கு அறிவைப் புகட்டுவதற்கு பெற்றோர் அதிகளவுக்கு அக்கறை காட்ட வேண்டும். இதில் பெற்றோர்களின் பங்களிப்பும் பொறுப்புமே அதிகளவுக்கு தேவைப்படுகின்றன.
(ஆசிரியர் தலைப்பு, தினகரன் வாரமஞ்சரி)
Published by

Leave a comment