ஆகஸ்ட்டு மாதம் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல்.
கொழும்பு: பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது, இதற்கமைய, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜூலை 6ஆம் திகதி ஆரம்பமாகும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 13 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.
தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளில் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான பொறுப்பு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்றின் மூலம் எமது பிரதிநிதிகளை மாத்திரமன்றி முழு நாட்டினதும் அரசியல் தலைமைகளை, சட்டமன்ற உறுப்பினர்களை நாம் தெரிவு செய்கின்றோம்.
எமது கடந்த கால அரசியலில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை கருத்தில் கொண்டு மிகவும் சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும் முஸ்லிம்கள் நடந்து கொள்ளல் வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தகால எமது தனித்துவ அரசியல் போராட்ட அரசியலாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பதவிகளுக்கும், சலுகைகளுக்குமான சூதாட்ட அரசியலாக பரிணாமம் அடைந்து இறுதியில் பிச்சை வேண்டாம் நாயை பிடி எனும் சரணாகதி அரசியலாய் மாறிப் போனமை வரலாறாகும்.
பேரம் பேசும் அரசியல் பிளவுபட்டு சின்னாபின்னப்பட்டு சிறு சிறு குழுக்களாய் சோரம் போகின்ற நிலை ஏற்பட்டதனால் கடந்த காலங்களில் ஹாலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம்களின் எச்ச சொச்ச அடிப்படை உரிமைகளுக்கும் பேரின சக்திகள் அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கிய பொழுது எமது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் வாய் மூடி மௌனித்துப் போனார்கள்.
ஈற்றில் சிவில் சமூக செயற்பட்டாளர்கள் மேற்கொண்ட நல்லாட்சிப் பயணத்தில் இறுதி நேரத்தில் இணைந்து கொண்டதன் மூலம் அவர்களும் தத்தமது தலைகளையும், தலைப்பாகைகளையும், தப்பினோம் பிழைத்தோம் என காப்பாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்கள், அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் அததனைகும்ம் பின்னால் பாரிய உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் இராஜதந்திர, இராணுவ பின்புலங்கள் இருந்ததனை நாம் அவ்வப்போது சுட்டிக் கட்டினோம், நல்லாட்சி மாற்றத்துடன் அவை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதனையும் அவ்வப்போது அதன் கோர முகத்தை வெளிக்கட்டுவதனையும் நாம் அறியாமல் இல்லை.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.
அந்த வகையில் குறிப்பாக வடகிழக்கிற்கு வெளியே பெரும்பனமை சமூகங்கள் மத்தியில் சிதறி வாழுகின்ற முஸ்லிம் மக்கள் இனமத மொழி வேறுபாடுகளை மறந்து இருபெரும் தேசியக் கட்சிகளாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சிகளாக இருந்தாலும் மிகவும் அந்நியோன்யமாக அரசியல் இணைக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்தல் வேண்டும்.
வடகிழக்கிற்கு வெளியே இம்முறை முஸ்லிம் கட்சிகள் தத்தமது பிளவுகளை பிணக்குகளை அரங்கேற்றும் சந்தர்ப்பம் அருகிப்போய் அவர்களும் வழமை போன்று ஆசன ஒதுக்கீடுகளுக்காக மாத்திரம் பேரம் பேசி தேசியக் காட்சிகளில் சங்கமமாகி விட்டுள்ள செய்திகள் ஓரளவு ஆறுதலை தருகின்றது, ஏனெனில் சாதனைகள் எப்படிப் போனாலும் அவர்களால் சோதனைகள் வந்துவிடக் கூடாது என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
வாக்கு என்பது “சாட்சியமாகும்”,
வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,
வாக்கு என்பது “ஆயுதமாகும்”,
வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,
வாக்கு என்பது “வகிபாகம்” ஆகும்,
வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும்,
வாக்கு என்பது “சோதனை” ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!
தனிப்பட்ட முறையில் தேர்தலில் குதிக்கும் எண்ணம் எனக்கு அறவே கிடையாது, என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகப் பொருத்தமான பிரதிநிதிகளை காணுவதிலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் என்னால் முடியுமான பங்களிப்பை செய்வதாக உத்தேசித்துள்ளேன், இன்ஷா அல்லாஹ்.
Published by

Leave a comment