அந்தநாள் ஞாபகம்-5: நோன்பு காலம்

antha naal– MJ

காத்தான்குடி: இரவுகளில் பள்ளிகள் ஹயாத்தாக்கப்பட்டு மிகச் சிறப்பாக இருக்கும். இரவு 10 மணியுடன் வீட்டுக்குள் முடங்கிவிடும் மக்கள், ரமழானில் அதிகாலைவரை ஊருக்குள் நடமாடும் காலம். விளக்கு வெளிச்சத்திலும், தெருவில் கும்மிருட்டாய் ஒளிரும் மின் விளக்கிலும் மக்கள் இரவு வணக்கங்களை நிறைவேற்றி வந்தனர்.

இரவு 10 மணிக்கு காத்தான்குடியை வந்தடையும் தெருநாய்கள், ரமழானில் எங்கோ ஓடி ஒழிந்துவிடும். இல்லையென்றால் பள்ளிசெல்லும் சிறுவர்களின் கல்லடிக்கு தப்பாது.

பெண்களுக்கு வீடுகளில் தறாவீஹ் தொழுகைகள் இடம்பெறும். ஹாபிழ்களும், மௌலவிகளும் தொழுகைகளை நடாத்துவார்கள்.

ரமழான் வருவதற்கு முன்னரே அரிசி மா இடித்து கோப்பி வறுத்து, கொச்சிக்காய் பொருட்கள் அரைத்து தாய்மார்கள் நோன்புக்குத் தயாராகி விடுவார்கள்.

ஸஹருக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக இடம்பெறும். நோன்பு திறக்கும் இப்தாரைப் பார்க்கிலும் அன்று ஸஹர் உணவுகள்தான் தடல்புடலாக இருக்கும்.

அதிகாலை 3 மணிக்கு பக்கீர் பாவாக்கள் வீதிகளிலும், ஒழுங்கை முடுக்குகளிலும் நுழைந்து, தங்களது தகரா பாவாக்களைக் கொண்டு, ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் மக்களை எழுப்பிச் செல்வர்.

இப்போது போன்று ‘அலாரம்’ வசதிகளோ, ‘ஸ்மார்ட்போன்’ வசதிகளோ அன்றில்லை. ஒரே ஒரு வகையான ‘வைண்ட்’ கொடுக்கும் அலாரம் மாத்திரமே, அதுவும் ஒரு சில வீடுகளில் மாத்திரமே அன்று இருந்தது.

“ர்ர்ர்ர்ர்ர்….” என காதைத் துளைத்துச் செல்லும் ஒலியுடன் இருபது வினாடிகள்வரை ஒலிக்கும் அத்தகைய அலாரத்தின் சத்தம் எப்படியும் பத்து வீடுகளுக்காவது கேட்கும்.

இன்றுபோல் ஓங்கி தடைப்படும் சுவர்மதில்கள் அன்றில்லை. ஓர் வீட்டில் ஸஹருக்கு எழுந்தால், அடுத்தவீட்டில்  தூங்குபவர்களை தட்டி எழுப்பக்கூடிய வசதிகள் அன்று இருந்தன.

ஸஹருக்கான விசேட உணவுகளைச் சுடச்சுட சமைக்க அதிகாலை இரண்டு மணியிலிருந்தே தாய்மார்கள் ஆயத்தமாகி விடுவார்கள்.

இறைச்சிப் பொறியல், சுடு சோரு, மீன் பொறியல், கறுவாட்டு வறுவல், மரக்கறி, கறிகொச்சிக்காய்ப் பொறியல், வாழைக்காய், முட்டைப் பொறியல், கத்தரிக்காய் வதக்கல்….இப்படியே கறியும் பொறியலும் அதிகாலையில் மூக்கைத் துளைத்துச் செல்லும்.

இரண்டு பீங்கான் சோற்றுக்குப் பின்னர், கரைத்துக் குடித்தல் ‘பர்ழு ஐனா’க அன்று இருந்தது.

கரைப்பதற்கு விலாம்பழம், மாம்பழம், பணங்காய்ப்பாணி, ப(பு)ணாட்டு, குட்டான், தேங்காய்ப்பால், பழப்புளி, தயிர்…இப்படி பல வகைகளாக அன்றைய ‘டெஸர்ட்’ அமைந்தது. தயிருக்கு ஏறாவூரும், பணாட்டு, குட்டானுக்கு யாழ்ப்பாணமும் அன்று பிரசித்தி பெற்றிருந்தன.

கரைத்துக் குடிப்பதுதான் ஸஹர் உணவின் கிளைமாக்ஸ்!

antha naal

நோன்பு திறப்பதற்கு இன்றுபோல் அதிகளவான உணவுப் பறிமாற்றங்கள் அன்றிருக்கவில்லை. வீட்டில் தாய்மார்கள் கஞ்சி காய்ச்சுவார்கள். பேரீத்தம்பழம், தேங்காய்ப்பூ சம்பல், தன்னீர் இவற்றுடன் கட்லட், பெட்டீஸ் மற்றும் மையர்கிழங்கு (மரவெள்ளி) அவித்து, கொச்சிக்காய், வெங்காயம் கலந்த உப்புத் தண்ணீர் ஆகியவையுடன் எளிமையாக இப்தார் அமையும். 1980களின் பின்னரே சமூசா காத்தான்குடியில் பிரபல்யம் பெற்றது.

ஆனால், அன்றிரவு சாப்பாடு ஏதோ ஓர் வகையில் மிக விசேடமாகவே அமையும்.

இதைவிடவும் தறாவீஹ் தொழுதுவிட்டு வந்து உண்ணுவதற்கும் ஏதாவது ஓர் சிற்றுண்டி காத்திருக்கும். இவைகளை அன்றைய தாய்மார்களே தங்களது கைப்பட செய்து அசத்தினர். ஹோட்டல் சாப்பாடும் ஹோட்டல் சிற்றுண்டியும் என்றால் என்னவென்றே தெரியாத அன்றைய நாட்கள் அமிர்தமானவை!

நோன்பு திறப்பதற்கு ஊரின் முக்கியமான சில பள்ளிகளில் கஞ்சி காய்ச்சப்படும். விரும்பியவர்கள் பள்ளிவாயலுக்குச் சென்று MJகஞ்சி வாங்கி வருவர். பெரும்பாலும் ஒவ்வொரு வீடுகளிலும் அன்று கஞ்சி காய்ச்சுவதால், பள்ளிக்குப் போய் கஞ்சு வாங்குவது அன்று குறைவாகவே இருந்தது.

பள்ளிவாயல்களில் நோன்பு திறப்பதற்காக வறுமையானவர்களும் ,வழிப்போக்கர்களும் செல்வர். கஞ்சிக் கோப்பையும், பேரீத்தம்பழமும், தேங்காய்ப்பூ சம்பலும் அங்கு வழங்கப்படும். பூவரசம் இழைகளில் சம்பல் பரிமாறப்படும்.

உலக வரலாற்றில் முதன்முதலாக ‘நோன்புக் கஞ்சி’ காசிக்கு விற்கப்பட்டது என்றால் அது காத்தான்குடியாகத்தான் இருக்க முடியும். நவீன தாய்மார்களின் சோம்பல் காரணமாக ஹோட்டல் கஞ்சிக்கு கிராக்கி ஏற்பட்டுவிட்டது. இதனால் உண்ட கறியில் மிஞ்சிய கோழித் துண்டுகளும், சவ்வு இறைச்சித் துண்டுகளும் கோழிக்கஞ்சியாகவும், இறைச்சிக் கஞ்சியாகவும், மஞ்சள் கஞ்சியாகவும் உருவாகி, அஜினமோட்டோவின் மெருகூட்டலில் இன்று ஹோட்டல் கஞ்சி தனியிடத்தைப் பெற்றிருக்கிறது.

என்னதான் இன்றைய ஹோட்டல் கஞ்சி என்றாலும், பள்ளிவாயலில் காய்ச்சும் உப்புக் கஞ்சிக்கு இது ஒருபோதும் நிகராகாது!!

‘சர்பத்’ என்பது நோன்பாளியின் மகிழ்ச்சிப்பாணமாக அன்று இருந்தது. சர்பத்தை பல வர்ணங்களில் காய்ச்சி, போத்தல்களின் மேல் தோடம்பழங்களை அமர்த்தி வீதியோரங்களில் காட்சிக்கு வைக்ப்பட்டிருக்கும் அழகே ஓர் தனிதான்.

இதன் பின்னர் அதாவது 1990களின் ஆரம்பத்தில் “கூல் பார்”கள் பிரதான வீதியில் புகழ்பெற்றிருந்தன. ஃபாலுதா, மெங்கோ, வூடப்பில், ஃபுருட்சலட், லெசி, நெல்லி….என சர்பத்தின் சாயல் விரிவடைந்தது.

காத்தான்குடி குட்வின் சந்தி, சர்பத் கடைக்கே உரித்தானது போல் ரமழான் இரவுகளில் மிளரும். மாணவர்கள் வகுப்புத் தோழர்களுடன் வந்து அமர்ந்து ஏதாவது ஒரு குளிர்பாணத்தை குடித்துவிட்டு அரட்டையடிக்கும் இடமாக கூல்பார்கள் அமைந்தன. வீடுகளிலும் வாங்கிச் செல்வதற்கு நீண்ட வரிசைகள் அன்று இருந்தன. அத்தகைய மகிழ்ச்சியான காலங்கள் இன்றில்லை.

பகல்வேளைகளில் அப்போதிருந்த ஆலிம்களின் “ஹதீஸ் சொல்லுதல்” மார்க்க நிகழ்வு இடம்பெறும். இந்தவகையில் ஆலிம் அப்பா (காத்தான்குடி 4), முஸ்தபா ஆலிம் (காத்தான்குடி 5), அப்துல் ஜவாத் ஆலிம் (பதுறியா) ஆகிய ஆலிம்களால் ஹதீஸ் சொல்லும் நிகழ்வுகள் இடம்பெறும். தாய்மார்களுக்கான இந்நிகழ்வில் சீத்தைப்புடவை போர்த்திய தாய்மார்கள் ஆர்வமாக கலந்துகொள்வர்.

தாய்மார்கள் தங்களது சிறு குழந்தைகளையும் அழைத்துச் செல்வதால் அவ்விடங்களில் கம்பி மிட்டாய், இழுக்கு மிட்டாய் போன்ற காத்தான்குடியின் புராதண மிட்டாய்வகைகள் அங்கு விற்கப்பட்டு வந்தன. ரமழானில் மாத்திரமே காணக்கூடிய இத்தகைய வகைவகையான இணிப்பு மிட்டாய்கள் பார்ப்பதற்கு கண்களைக் குளிர்வித்துச் செல்லும்.

எமது வாசகர்களும் ‘அந்தநாள் ஞாபகம்’ எனும் எமது வரலாற்றில் தடம் பதிக்கலாம். காத்தான்குடியின் அன்றைய பாரம்பரியங்களை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எமக்கு எழுதி அனுப்புங்கள்.

Published by

Leave a comment