இரட்டை வாக்குச்சீட்டு தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் NFGGயும் பங்கு பற்றியது

NFGG-Logo– NFGG

கொழும்பு: 20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென சிறுபாண்மை மற்றும் சிறிய கட்சிகளால் கோரப்படும் இரட்டை வாக்கு நடை முறை பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடை பெற்றது. சிறுபான்மைக் கட்சிகள் பலவும் பங்கு பற்றிய இவ்விசேட கலந்துரையாடலில் முஸ்லிம் சமூகம் சார்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG), அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் (ACMC) பங்குபற்றின.

CaFFE அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இக்கலந்துரையாடலில் 20 ஆவது திருத்தத்தை வரைவதில் கொள்கை வகுப்பாளர்களாகச் செயற்படும் புத்தி ஜீவிகளான அசோக அபேகுணவர்தன, கீர்த்தி தென்னகோன், பேராசிரியர் சுதந்த லியனகே மற்றும் பேராசிரியர் றொஹான் சமரஜீவ ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்களும் கலந்து கொண்டனர்.

அத்தோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் YLS ஹமீட் கலந்து கொண்டார். ஏனைய சிறு பான்மைக் கட்சிகளான மனோ கனேசன், அத்தரலிய ரத்ன தேரர், Dr.குமரகருபரன் , நிஸாந்த வருணசிங்க, ரவி ஜயவர்தன, மற்றும் சரத் மனமேந்திரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுவதன் அடிப்படை நோக்கம் எது வென்பதனையும் அது விகிதாசார முறையினை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதனையும் விளங்கப்படுத்திய YLS ஹமீட், இரட்டை வாக்குச் சீட்டு முறை அமுல்படுத்தப்படுவதன் மூலமே சிறு பாண்மை சமூகங்களின் உண்மையான மாவட்ட விகிதாசாரத்திற்கேற்ப பாராளுமன்ற பிரதிநிநித்துவத்தினை பேணமுடியும் என்பதனைத் தெளிவு படுத்தினார். அத்தோடு அவ்வாறு செய்வதன் மூலமே சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் நியாயமான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசிய மட்டத்தில் உத்தரவாதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

இரட்டை வாக்குச் சீட்டு முறையினை தமது கட்சி சாதகமான ஒன்றாகக் காணுகின்ற போதிலும் இது இன ரீதியான அரசியல் பிரிவுகளை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதனால் தேசிய நலன் கருதி இதனைத் தாம் வர வேற்கவில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

இரட்டை வாக்குச் சீட்டு முறையானது சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் என்ற தோற்றப்பாடு இருக்கின்ற போதிலும் ஆழமாக ஆராய்கின்ற போது இம்முறைமை பெரும் பான்மை கட்சிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படும் எனவும், அவ்வாறு நடந்தால் சிறுபான்மை கட்சிகள் எதிர்பார்க்கும் நன்மைகள் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாதெனவும் பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார். இதற்குப் பகரமாக சிறுபான்மைக் கட்சிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாற்றுவழிகளை உள்வாங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தேர்தல் முறையினை வரைவதில் தாம் எதிர் கொள்ளும் நடை முறைச் சிக்கல்கள் என்னவென்பதனையும் இதில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமைகள் என்னவென்பதனையும் பேராசிரியர் ரஜீவ தெளிவு படுத்தினார்.

ஏறத்தாள மூன்று மணி நேரமாக நடை பெற்ற இம்முக்கிய கலந்துரையாடலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment