ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரப் பிரதேசம் கடந்த ஒரு வாரகாலமாக புகை மூட்டத்தினால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் நகரில் சேருகின்ற திண்மக் கழிவுகளையும் சாக்கடைகளையும் கொட்டுகின்ற ஏறாவூர் வாவிக் கரையோர குப்பை மேடு தீ வைக்கப்பட்டதன் காரணமாக ஏறாவூர் நகர பிரதேசத்தின் வாவிக்கரையோரப் பகுதி புகை மூட்டத்தினால் சூழப்பட்டுள்ளது.
இதன் விளைவாக அப்பிரதேசத்திலுள்ள சிறுவர்கள், நோயாளிகள் குறிப்பாக ஆஸ்த்துமா நோயால் வருந்துவோர் மற்றும் வயோதிபர்கள் அவஸ்தையுறுவதாகத் தெரிவிக்கின்றார்கள்.
ஏறாவூர் வாவியோரம் ஒரு பக்கம் சாக்கடைகளைக் கொட்டுகின்ற அதேவேளை அதனோடு இணைந்ததாக மறுபுறம் பாடசாலை, கலாச்சார மண்டபம், சமூகப் பராமரிப்பு நிலையம், வாவிக்கரையோரப் பூங்கா, விளையாட்டுத் திடல், மீனவர் விற்பனைக் கட்டிடம், பிரதேச செயலகம், பள்ளிவாசல்கள் என்பன அமைந்துள்ளன.
ஏறாவூர்: ஆவணப்படம்
நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று (கச்சான் காற்று) பலமாக வீசுவதால் இந்தப் புகையும், சாம்பலும், கங்கில்களும் மக்கள் வாழும் பிரதேசத்தில் வந்து படிகிறது.
இந்த குப்பைமேட்டுத் தீயை அணைப்பதற்கு ஏறாவூர் நகரசபை நிருவாகம் எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஏறாவூர் ஆற்றங்கரையோரப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனிடையே ஏறாவூர் நகரசபையின் ஆற்றங்கரையோரக் குப்பை மேட்டிற்கு யாரோ விசமிகள் தீவைத்துள்ளதால் இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கும் ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் இந்தத் தீயை அணைப்பதற்கு நகரசபை ஊழியர்கள் அயராது பாடுபட்டு வருகின்ற போதிலும் இன்னமும் அதனை முற்றாக அணைக்க முடியாதததால் குப்பை மேட்டிலிருந்து தொடர்ந்து புகை மூட்டம் கிளம்பி வருவதாகத் தெரிவித்தார்.
சுமார் 10 ஆயிரம் குடும்பளையும் 50 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஏறாவூர் நகர பிரதேசம் காணிப்பற்றாக்குறையை எதிர்நோக்குவதால் குப்பை கொட்டுவதற்குக் கூட இடமில்லாத வகையில் இங்கு ஒரு மனிதாபிமான நெருக்கடி தலைதூக்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு வெகு விரைவில் மாற்றுத் தீர்வு காணப்படாவிட்டால் இது மட்டக்களப்பு வாவியோடு மட்டும் நின்று விடாமல் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கைச் சூழலுக்கே அச்சுறுத்தலாக அமையும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து இந்தப் பிரச்சினையை ஒரு மனிதாபிமான நெருக்டியாகக் கருதி தீர்வை எட்ட வேண்டும்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக நிருவாகத்துக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் காணிப் பிரச்சினைகளைக் கையாளக் கூடிய அதிகாரம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்படாமலிருப்பது கவலைக்குரியது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
Leave a comment