தௌஹீத் பிரச்சார நடவடிக்கைகளிலிருந்து என்னை நீக்குவது தொடர்பாக தாருல் அதர் அத்தஅவிய்யா அனுப்பி வைத்த மடலுக்கான பதில்

Dharul Athar13-06-2015

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்புக்குரிய தாருல் அதர் நிருவாக சகோதரர்களே,

வழமை போன்று தாங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள் என்பதை உணர்கின்றேன். தாங்கள் அனுப்பிவைத்த கடித விடயத்தில் சாதாரண மார்க்க அறிவுள்ள ஒருவரிடத்தில் ஆலோசனை பெற்றிருந்தால் கூட தங்களது சிறுபிள்ளைத்தனமான இந்த செயற்பாட்டிலிருந்து தவிர்ந்திருப்பீர்கள்.

எனினும் உண்மை வெளிவருவதற்கு அல்லாஹ் நாடினால் அதை எவராலும் தடுத்து நிருத்த முடியாது என்ற ஈமானிய நம்பிக்கைகேற்ப தங்களின் செயல் அமையப்பெற்றுவிட்டது. தாங்கள் அனுப்பிய கடிதத்தை விமர்சனம் செய்வதற்கு அதிக பக்கங்கள் தேவை. அதற்கு நேரம் இடம் கொடுக்காது. எனினும் தாங்கள் என்மீது முன்வைத்த மிகப்பெரிய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு எனக்கு உள்ளது.

அதாவது, உங்கள் கடிதத்தில் நான் எகிப்து சென்று ஒரு சில வருடங்களின் பின் தௌஹீதுக்கு முரணான கருத்துக்களை கூறிவருவதாகவும் அதனால்தான் என்னை தங்களது அமைப்பின் தஃவா செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும் இனிமேல் என்னை தஃவாவிற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் ஏனைய தௌஹீத் அமைப்புக்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளீர்கள்.

உண்மையில் இது நகைச்சுவைக்குரிய விடயம். என்னை தஃவா செயற்பாடுகளிலிருந்து நீக்குவதற்கு தங்களது அமைப்பு ஒன்றும் பெரும் பெரும் உலமாக்களைக் கொண்ட பத்வா கொமிட்டி கிடையாது. நீங்கள் தீர்ப்புக் கூறுவதற்கு உங்களது பத்வா கொமிடியில் எத்தனை உலமாக்கள் உள்ளனர்? என்கின்ற பெயர் விபரங்களை சற்று முதலில் வெளியிடவும்

அடுத்து, தௌஹீதுக்கு முரணான கருத்துக்கள் என்று தாங்கள் கருதுவது எவை? ஏனெனில், அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் தௌஹீதுக்கு முரணான கொள்கைகளை பின்வருமாறு பட்டியல் படுத்த முடியும்.

01— அல்லாஹ்விற்கு அவனது ருபூபியதிலோ உலூஹிய்யதிலோ, திருநாமங்கள் பண்புகளிலோ இணைவைப்பதாகும். (பின்வருபவை இதில் அடங்கும்)

1. அல்லாஹ் அல்லாத (சிலை, கப்ரு போன்ற) வைகளிடத்தில் பிரார்த்தனை செய்தல், அவற்றிற்கு சிரம்பணிதல், அவற்றிற்கு நேர்ச்சை செய்தல், அவற்றிற்காக அருத்துப்பலியிடல்.

2. எமது வணக்க வழிபாடுகளில் எமக்கும் அல்லாஹ்விற்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தல்.

3. அவனது திருநாமங்களை மறுத்தல் அல்லது மனோ இச்சைப்படி அவற்றிற்கு விளக்கம் கொடுத்தல்

02– மலக்குமார்கள், ரஸுல்மார்கள், வேதங்கள், மறுமை நாள், கழா கத்ர் போன்றஅம்சங்களை ஈமான் கொள்ளாமல் மறுத்தல்

03–கலிமாவிற்குஎல்லாம் அவனே போன்ற மிகத் தவறான அர்த்தங்களைக்கொண்டு வியாக்கியாணம் செய்தல்

04–நபிமார்கள், ரஸுல்மார்களைவிட அல்லாஹ்வின் நேசர்களை மேலாக கருதுதல். அவர்களை அல்லாஹ்விற்கு நிகராக ஆக்குதல்.

05—அல்லாஹ்வையும் ரஸுலையும் பரிகாசம் செய்தல்

06—நபித்தோழர்களை அவமதித்தல், அவர்களை தரக்குறைவாகப் பேசுதல்.

அதேபோன்று, கந்தூரிகள், நடன மற்றும் கூட்டு திக்ருகள், மௌளுத், வித்ரிய்யா, புர்தா மற்றும் தாயத்துக்கள், அடிப்படை ஆதாரமற்ற தெளிவாக அறியப்பட்ட பித்அத்கள் போன்றவைகளும் இஸ்லாத்தின் தூய்மைக்கு கலங்கம் விளைவிப்பதாக கருதப்படும்.

அன்புக்குரிய அதர் நிருவாக சகோதரர்களே, மேற்கூறப்பட்ட விடயங்களில் அல்லது இது போன்ற இங்கு கூறப்படாத அம்சங்களில் நான் ஈடுபட்டிருக்கின்றேனா? அல்லது அவற்றை ஆதரித்துப்பேசியுள்ளேனா? என்பதை சற்று விளக்கவும். நேர்மாற்றமாகத்தான் என்னை எல்லோரும் கண்டிருப்பார்கள். அதனால்தான் அல்லாஹ்வின் அருளால் தாருல் அதரைத்தவிரவுள்ள பெரும்பாலான தௌஹீத் பள்ளிகளில் இன்று வரை எனக்கு குத்பா, மார்க்க வகுப்புக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இங்கு இன்னுமொரு அம்சம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.அதாவது இத்தனை வருடங்களாக நான் தௌஹீதுக்கு மாற்றமான கருத்துக்கள் ;சொல்வதானது தாருல் அதர் பத்வா கொமிடிற்கு மாத்திரம்தான் தெரிந்ததா? இலங்கையில் உள்ள ஏனைய உலமாக்களுக்கு தெரியவில்லையா? உங்களது விவகாரம் அற்புதத்திலும் அற்புதம்?

எனவே, மேற்கூப்பட்ட தௌஹீதுக்கு முரணான கருத்துக்களை இதுவரைக்கும் நான் பேசியதுமில்லை. இனிமேல் பேசப்போவதுமில்லை. மாற்றமாக அவற்றை அல் குர்ஆன் அஸ்ஸுன்னா குறிப்பிடும் ஹிக்மா எனும் விவேகத்தைப்பயன்படுத்தி எதிர்க்கவும் செய்வேன். அவ்வாறிருப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும்.

இது தாருல் அதருக்குச் சொந்தமான கொள்கையல்ல. உங்கள் அறிவுபூர்வமான? அறிக்கையை வாசித்த போது கவலையோடு கூடிய சிரிப்பே வந்தது. நீங்கள் எந்த நினைவில் இப்படி எழுதினீர்கள்? ஏதோ நீங்கள்தான் உலகத்தில் தௌஹீதின் காவலாளிகள் போன்றல்லவா எழுதியுள்ளீர்கள். இன்னும் இன்னும் உங்களை நீங்களே உலகத்து முப்திகளாக கருதிக்கொண்டிருப்பதையிட்டு வியப்படைகின்றேன்.

விடயம் இவ்வாறிருக்க தாருல் அதர் நிருவாகம் ஏன் இப்படியான அபாண்டத்தை என் மீது சுமத்தியிருக்கிறது? இங்குதான் பல வருட இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. அதாவது, தாருல் அதர் என்ற அமைப்பு தௌஹீதுக்கு முரணாக கருதுகின்ற அம்சங்கள் எவை என்பதை அறிவுலகம் அறிந்தால் அழுகைதான் வரும்.
இவைதான் தாருல் அதர் நிருவாகத்தின் பார்வையில் தௌஹீதை தகர்த்தெரியும் காரியங்கள்.

01: காதில் ஓட்டையிட்டு மின்னி அணிதல்

02 : காப்பு, மின்னி, மாலை போன்ற வளையங்களை பெண்கள் அணிதல்

03 : தொழுகையை ஆரம்பிக்கு முன் மிஸ்வாக் செய்தல்

04 : சுஜுதிலிருந்து எழுகின்ற போது கையை விரித்து எழுதல்

05 : பயான் மஜ்லிஸ்களில் பெண்களைப் பார்க்காதவாறு திரையிடுதல்

06 : பள்ளிவாயலில் ஸப்(க)புகளை அடையாளப்படுத்துவதற்காக கோடு கீறல்

07: தணித்து தொழுவதைவிட இரண்டாம் ஜமாஅத் நடத்துவதை சிறந்ததாக
கருதுதல்

08: இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத பித்அத்கள் உள்ள பள்ளிகளில்
தொழுதல்

09 : ரமழானின் இறுதிப்பத்தில் ஜும்ஆ பள்ளிகளில் இஃதிகாப்க இருத்தல்

10 : வித்ர் தொழுகையில் குனூத் ஓதுதல்

11 : தாஸுஆ, ஆஷுரா நோன்பு வெள்ளி சனி தினங்களில் ஏற்பட்டால் அவற்றில் நோன்பு நோற்றல்

12 : ஜும்ஆவில் சூறா அல்காப்கஓதாமலிருத்தல்

13 : பெண்கள் பெண்களுக்கு இமாம் ஜமாஅத் நடாத்துதல்

14 : மையவாடியில் செருப்பணிதல்

15 : சர்வதேசப்பிறைக்கு மாற்றமாக நோன்பு மற்றும் பெருநாளை
அமைத்துக்கொள்ளுதல்.

16 : இராக்காலத்தில் நீண்ட நேரம் நின்று தொழ முடியாத ஒருவர் நபிலான (உபரியான) இரவுத்தொழுகைகளை குறிப்பிட்ட ரக்அத்களோடு மட்டுப்படுத்தாமல் அதிகமதிகமாக ஈடுபடல். (தனது சக்திக்குட்பட்ட வகையில் அதிகமாக தொழுதல்)

எனவே, தாருல் அதரினுடைய பார்வையில் மேற்குறிப்பிடப்பட்டவைகள் தௌஹீதுக்கு முரணான கருத்துக்களாகும். இவைதான் தாருல் அதர் நிருவாகம் விளங்கி வைத்த தௌஹீத்.

தாருல் அதரின் இந்தத்தவறான போக்கை எத்தனையோ தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளேன். இறுதியாக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அங்குள்ள மௌலவியையும் சபையில் வைத்து இவற்றை உணர்த்தினேன். ஆனால் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை. அது மாத்திரமின்றி ‘மேற்கூறப்பட்ட கிளைப்பிரச்சினைகளில்தான் தாருல் அதரின் தனித்துவமே இருக்கிறது. அவற்றை விட்டால் அமைப்பின் தனித்துவமே போய்விடும்’ என்று அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர் கேட்டார். அப்படியென்றால் கிளைப்பிரச்சினைகளில் தனித்துவம் காட்டுவதற்குத்தான் தாருல் அதர் என்ற அமைப்பே.

சுப்ஹானல்லாஹ். தாருல் அதரின் உத்தியோக பூர்வ மௌலவியும் அச்சபையில் இருக்கிறார். அதர் நிருவாகத்தை அந்த மௌலவி வழிநடாத்துகிறாரா? அல்லது அதர் நிருவாகம் அந்த மௌலவியை வழிநடாத்துகின்றதா? என்று புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இரண்டாவதுதான் சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன். ஏனெனில், மார்க்க அறிவுள்ள எவரும் இப்படியான பிற்போக்குத்தனமான சிந்தனைகளுக்கு ஒரு காலமும் துனை போகமாட்டார்.

இன்னுமொறு வார்த்தையில் சொல்லப்போனால் மித மிஞ்சிய தௌஹீத் அமைப்புக்களின் இன்னுமொரு வடிவம்தான் தாருல் அதர் என்று ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். ஏனெனில் ஒரு கால கட்டத்தில் ஜும்ஆவில் காப் ஓதுகின்ற விடயத்தில் அதரில் இருந்த பிடிவாதத்தினால் இன்றைக்கு அதரில் காண்கின்ற எந்த ஆலிம்களையும் அதர் சமூகம் ஒன்றறை வருடங்களாக காண முடியாமலிருந்தது. அல்லாஹ்வின் அருளால் மதிப்பிற்குரிய நஷ்மல் மௌலவி மற்றும் இறையடியானாகிய எனது முயற்சியினாலும் வெளியிலுருந்து உலமாக்களைக்கொண்டு வந்து சேர்த்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து உலமாக்களிடமிருந்தும் இவர்கள் பயன்பற வேண்டுமென்ற நன்னோக்கில்தான் இதைச்செய்தோம். ஆனால் கவலை என்னவென்றால் அதருக்கு வருகின்ற பொதுமக்கள் பயன்பட்டாலும் இந்த நிமிடம் வரைக்கும் அதர் நிர்வாகம் அணுவளவுகூட அவர்களிடமிருந்து பயன்பெறவில்லை. மக்களுக்கு
வெளிச்சம் காட்டுவதற்கு பிரபல மார்க்க அறிஞர்களை பயன்படுத்தும் அதர் நிருவாகம் மார்க்கத்தீர்ப்பு விடயங்களில் அணுவளவு கூட அந்த உலமாக்களிடமிருந்து பயன்பெறுவதில்லை.

தாருல் அதர் தௌஹீதுக்கு முரணானவைகளாக கருதும் மேற்கூறப்பட்ட கிளைப்பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றில் அன்சார் மௌலவி, கோவை அய்யூப் போன்ற பிரபலமான தாயிகள் ஒருமித்த கருத்தைச்சொல்லி விட்டால் அவர்களைக்கொண்டு வந்து மேடை போடுவார்கள். அவர்களுக்கு அதில் தன்னிகரற்ற மகிழ்ச்சி. ஆனால் அதே நேரம் ஏனைய கருத்து வேறுபாடான விடயங்ளை அங்கே அவர்கள் பேசுவதற்கு அனுமதி இல்லை. இதுதான் தஃவா அரசியல்? குர்ஆன் சுன்னா அறிஞர்களுக்கு மத்தியில் ஆய்வு அடிப்படையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தௌஹீத் கொள்கையென்று அங்கு கற்பிக்கப்படுகின்றது.

இன்னும் சொல்லப்போனால் அனைத்து உலமாக்களாலும் ஏகமானதாக விமர்சிக்கப்பட்ட இமாம் அல்பானி (ரஹ்) அவர்களின் அரிதான கருத்துக்கள் (கால் சறுக்கல்கள்) தௌஹீதின் அடிப்படையென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. அத்தோடு தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகைகளிலுள்ள அரிதான பத்வாக்களும் தௌஹீதின் கொள்கை என்று மூலைச்சலவை செய்யப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் முரண்படுபவர் தௌஹீத் கொள்கையை தகர்த்தெரிபவராம் என்ற பாமரத்தனமான கருத்து அதர் நிருவாகத்தின் எழுதப்படாத யாப்பாக அதன் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை இருந்து வருகின்றது.
எனது மேற்படிப்புக்காக எகிப்து சென்றதன் பின் உண்மையான குர்ஆன் சுன்னா அறிஞர்களது அழகிய வழிமுறையை எடுத்துச்சொல்ல முயன்ற போது அநியாயமாக எனக்கு சேறுபூசப்பட்டது.

தூய்மையான தஃவா அமைப்பில் சில கிளைப்பிரச்சினைகளை வைத்து அரசியல் நடாத்துவதில் எனக்கு உடன்பாடிருக்கவில்லை. அது உண்மையான தௌஹீதுமல்ல. இதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை கிளைப்பிரச்சினைகளிலும் தாருல் அதருக்கு வெளியிலிருந்து வருகின்ற உலமாக்கள் மாற்றுக்கருத்துக்கொண்டால் பரவாயில்லையாம். (ஏனென்றால் அவர்கள் பொது பயான் பண்ணுபவர்கள்) ஆனால் தாருல் அதரின் உத்தியோக பிரச்சாரகராக இருந்தால் மாற்றுக்கருத்துக்கூறக்கூடாதாம்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன். அதாவது, அதரில் இருக்கின்ற மௌலவிமார்கள் கருத்துவேற்றுமை படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லையாம். அதரிற்கு வெளியே இருந்து வருகின்ற தௌஹீத் உலமாக்களுக்கு அனுமதி உண்டாம். என்ன ஆச்சரியம்???? மொத்தத்தில் சொல்லப்போனால் குர்ஆன் சுன்னாவுடைய சரியான வழிகாட்டல், அணுகுமுறை தெரியாமல் அதர் நிருவாகம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இத்தனையையும் வைத்துக்கொண்டு எனக்கு பித்அத்வாதி என்று பட்டம் சூட்டுகின்றார்கள்;. அது மாத்திரமின்றி என்னை தஃவா செயற்பாடுகளிலிருந்து இடை நிறுத்துமாறு உலமாக்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.

உண்மையில் அதர் நிருவாக சகோதரர்களே, நீங்கள்தான் உலமாக்களின் ஆலோசனையைப்பெற வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளீர்கள். அதைவிட்டுவிட்டு நீங்கள் பத்வா கொடுத்துவிட்டு அந்த பத்வாவை ஏற்றுக்கொள்ளும்படி உலமாக்களுக்கே ஆலாசனை வழங்குகின்ற அளவுக்கு உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார்? நீங்கள் உலமாக்களிடத்தில் பாடம் படிக்க வேண்டுமே தவிர உலமாக்களுக்கு நீங்கள் படிப்பிக்க வேண்டிய தேவை இல்லை.

இன்னும் இந்த ஒழுக்கத்தை வரவழைத்துக்கொள்ளாமல் இருக்கின்றீர்களே என்று நான் ஆச்சரியப்படுகின்றேன். அதரில் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினையே இதுதான். தாடி வைத்து கரண்டைக்கு மேல் ஆடை அணிந்து நெஞ்சிலும் தக்பீர் கட்டினால் அவரை உலகத்து முப்தியாக ஆக்கி விடுவீர்கள். தயவு செய்து தங்களது அறிவுக்கண்களை திறங்கள். இஸ்லாமிக் சென்டரோடு முரண்பட்டு குத்பா ஓதியதற்கு அடிப்படைக்காரணமே ஜூம்ஆவில் காப் ஸுரத் ஓதுவதில் உள்ள தங்களது பிடிவாதமே. காப் ஸுரா ஓதாதவர்களை பித்அத் செய்கிறார்கள் என்று ஒரு காலத்தில் சொன்னீர்கள். அதற்காகத்தான் தனி குத்பாவும் ஆரம்பித்தீர்கள்.

மக்கள் ஒன்றரை வருடமாக இரு மௌலவிமார்களினுடைய குத்பாக்களை மாத்திரம் கேட்டு சடைவடைவதை அவதானித்த நீங்கள் பத்வாவை மாற்றுவதற்கு யோசித்தீர்கள். எனக்கு அந்நேரமே இதில் மாற்றுக்கருத்து இருந்ததினால் என்னை தௌஹீதை விட்டு உங்கள் பத்வா கொமிட்டி வெளியேற்றவில்லை. ஏனெனில் அதை உங்களது உள்ளங்கள் விரும்பின. இன்றைக்கு என்ன நடந்திருக்கிறது? இப்போது அப்படிச்சொன்னால் கோவை அய்யூப், அப்துல் ஹமீத் ஷரஈ போன்றோரையும் பித்அத்வாதிகள் என்று சொல்ல வேண்டிவரும்.?

உங்களது பாசையில் நான் கேட்கப்போனால் எது தௌஹீதுக்கு முரண்? காப் ஸுரா ஓதுவது முரணா? ஓதாமல் விடுவது முரணா?
அன்புக்குரிய அதர் நிருவாக சகோதரர்களே, நான் உங்களோடு ஒன்றித்திருந்தது ஈமானிய சகோதரத்துவ அடிப்படையில்தான். ஆனால் நீங்களோ அந்த தூய்மையை கலங்கப்படுத்தி மஸ்அலா (கிளைப்பிரச்சினை) சகோதரத்துவத்தை வைத்து ஒருவகையான அரசியலில் ஈடுபடமுனைந்தீர்கள்.

இதில் எனக்கு உடன்பாடில்லாததால் என்னை உங்களது அமைப்பிலிருந்து தூரமாக்கினீர்கள். தௌஹீத் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் எந்தக்காரணத்தையும் சொல்ல முடியாமலிருந்த உங்களுக்கு சர்வதேசப்பிறை மற்றும் தராவீஹ் தொடர்பான எனது நிலைப்பாடு பசியிலிருந்த உங்களுக்கு தீன்போட்டதைப்போன்று ஆகிவிட்டது. குறுகிய வட்டத்திற்குளிருந்து ஆய்வு செய்வதை விடுத்து பறந்த ஆய்வு வட்டத்திற்குள் நுழைகின்ற போது எனது நிலைப்பாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வீர்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி இத்தாள் கூறிக்கொள்கின்றேன்.

எனவே, எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய அதர் சகோதரர்களே! எனது எழுத்தில் தாங்கள் கடினத்தன்மையினை உணர்ந்தால் அதற்காக தங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறேன். எனக்கும் உங்களுக்கும் மத்தியில் இருந்த நெருக்கமான தொடர்பினால்தான் இப்படி எழுதியுள்ளேன். முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை நபிகளார் அதிகம் நேசித்ததினால்தான் அவர் பிழை விட்ட போது ‘முஆதே! நீர் குழப்பம் விழைவிப்பவனா?’ என்று கடுமையான தொனியில் வினவினார்கள். அதே நேரம் யாரென்ரே தெரியாத காட்டரபியிடம் மிகவும் நளினமாக நடந்துள்ளார்கள்.

எது எவ்வாறிருந்தாலும் மீண்டும் இப்படியான தவறுகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள பெரும் பெரும் அறிஞர்களிடத்தில் பல வருடங்களாக கால் மடித்து படித்த நல்ல பக்குவப்பட்ட முதிர்ச்சி பெற்ற உலமாக்களை தங்களது அமைப்பின் ஆலோசகர்களாக தெரிவு செய்யும்படி ஆலோசனையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அப்படியான உலமாக்கள் நிறையவே இந்த ஊரில் இருக்கின்றனர்.

தாங்கள் முதலாவதாக பிரதி அனுப்பிய மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா உலமாக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தங்களது அமைப்பை வழிநடாத்தினாலே தாங்கள் சரியான பாதையில் செல்வீர்கள் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். ஏனென்றால் நீங்கள் உலகாயுத எந்த நோக்கமுமின்றி அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக ஒன்று சேர்ந்தவர்கள். அவனுக்காக எதையும் இழக்கத்தயாராகவுமுள்ளவர்கள்.

உங்களது தியாகத்திற்கு அல்லாஹ் நிறைபூரணமான கூலிகளை வழங்குவானாக. எனினும், உங்களது இந்த மார்க்க உணர்வுகளை மார்க்கத்தை சிறந்த முறையில் கற்றறிந்த உலமாக்களின் வழிகாட்டுதல்களோடு அமைத்துக்கொள்வீர்களானால் சரியான தௌஹீத் கொள்கையை அறிந்து ஈருலகிலும் பயனடைவீர்கள். அல்லாஹ் எம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்தி நாம் விரும்புகின்ற சுவனபதியில் எம் அனைவரையும் நபிமார்களோடு ஒன்றுசேர்ப்பானாக.

குறிப்பு: நான் உண்மையில் தங்களுக்கான இந்த பதில் மடலை இணையத்தில் வெளியிட விரும்பி இருக்கவில்லை. எனினும் நீங்கள் அதற்கு என்னை நிர்ப்பந்தித்துவிட்டீர்கள் என்பதை மனவேதனையுடன் கூறிக்கொள்வதோடு இத்துடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளியும் வைக்க விரும்புகின்றேன்.

இதையும் தாண்டி தாங்கள் ஏதாவது பதில் சொல்ல விரும்பினால் அறிவார்ந்த ஆய்வு சபையொன்றிற்கு தங்களது அமைப்பின் மதிப்பிற்குரிய மௌலவியை அனுப்புங்கள். அதற்கு நான் எப்போதும் அல்லாஹ்வின் உதவியோடு தயாராக இருக்கின்றேன்.

தயவு செய்து மீண்டும் மீண்டும் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான பிரச்சினைகளுக்கு என்னை இழுக்காதீர்கள். அதற்கு எனக்கு நேரமும் இடம்கொடுக்காது. அவ்வாறு மீறும் பட்சத்தில் தங்களது பிற்போக்குத்தனமான போக்கை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டிய துற்பாக்கிய நிலை ஏற்படும் என்பதை மிகக்கவலையோடு கூறிக்கொள்கின்றேன். அவ்வாறான ஒரு மோசமான சூழல் உருவாகுவதை நான் ஒரு போதும் விரும்பவில்லை அதற்கு தயவுசெய்து இடமளிக்கவும் வேண்டாம். மாறிவரும் தூய்மையான தஃவா களத்திற்கு அது ஆரோக்கியமானதல்ல என்பதையும் உபதேசமாகக் கூறிமுடித்துக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்

இப்படிக்கு,

மௌலவி. MFM. சிபான் (அஸ்ஹரி) BA, HONS

பிரதிகள் :

1. மஃஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா, காத்தான்குடி
2. தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம், காத்தான்குடி
3. ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி
4. குபா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி
5. அம்மார் ஜும்ஆப் பள்ளிவாயல், பாலமுனை
6. ஏறாவூர் ஜும்ஆப் பள்ளிவாயல்
7. ஹிதாயா பள்ளிவாயல், காத்தான்குடி

Published by

Leave a comment