“பிரதமர் ரணில் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர மஹிந்த தரப்புக்கு அதிகாரமில்லை”

Mujibur Rahmanகொழும்பு: பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் இது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடாகும் எனவும் குற்றம் சுமத்தினார்.

மஹிந்த சிந்தனையில் உருவான இந்த பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் மத்திய கொழும்பின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். மஹிந்த சிந்தனையின் கீழ் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்பட்ட பாராளுமன்றமே இது. கடநத ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த சிந்தனை தோல்வியடைந்தது. இந்த மஹிந்தவின் பாராளுமன்றத்தினால் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவும் இல்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணிகளின் பொதுக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ரணிலை பிரதமராக்குவோம் என மக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தது. இதனடிப்படையில் ஜனவரி 9 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

எனவே கடந்த பாராளுமன்றத்தினூடாக ரணில் பிரதமராக்கப்படவில்லை. மக்களின் ஆணைக்கமைய மைத்திரியினால் பிரதமராக்கப்பட்டார். எனவே இவருக்கு எதிராக சுதந்திர கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முடியாது. அப்படி கொண்டுவருகின்றமையானது மக்களின் வாக்குறுதிக்கு எதிரான செயற்பாடாகும். மக்களின் அபிலாசைகளை மதிக்காது சுதந்திர கட்சியும் மஹிந்த தரப்பும் செயற்படுவதானது வெட்கித் தலைகுனிய வேண்டிய விடையமாகும்.

ஆகையால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மஹிந்தவா? ரணிலா? மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதமர் என்பதை பார்க்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment