தனியான உள்ளூராட்சி சபை கோரி சாய்ந்தமருது மக்கள் போராட்டம்

sainthamaruthuசாய்ந்தமருது: கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள் தங்களுக்கு தனியான உள்ளூராட்சி சபை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை முழு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை கூடிய மக்கள் தனியான உள்ளூராட்சி சபை வேண்டும் என்ற பிரகடனத்தைச் செய்து பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து வீதியில் அமைதிப் பேரணியொன்றையும் அவர்கள் நடத்தினர்.

சாய்ந்தமருது பிரதேச பொதுமக்கள் என்ற அமைப்பின் பெயரில் இந்தப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தற்போது கல்முனை மாநகரசபையின் கீழ் உள்ள சாய்ந்தமருது பிரதேசம் பல்வேறு வகைகளிலும் புறக்கணிக்கப்படுவதாக சாய்ந்தமருது பிரதேச மக்களால் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

sainthamaruthu

ஏற்கனவே தமது பிரதேசத்திற்கு நகரசபை அந்தஸ்த்துள்ள தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என்று பதவியிலிருந்த உள்ளூராட்சி அமைச்சர்களினால் உறுதிமொழி வழங்கப்பட்டிருந்ததாகவும் இதுவரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

தமது பிரதேசம் தனியான பிரதேச செயலக நிர்வாகத்தை கொண்டுள்ள போதிலும் தனியான உள்ளூராட்சி சபை கிடைப்பதில் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் சில பிரமுகர்கள் தடையாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய ஆட்சியிலும் பொது நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரியவினால் இது தொடர்பான உறுதிமொழியொன்று 3 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by

Leave a comment