– அஷ்-ஷெய்க் கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
கொழும்பு: “இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து அவசர அவசரமாக மேற்படி திருத்தச் சட்டமூலத்தை திணிப்பதுவும், தேவைப்படின் சிறுபான்மை சமூகங்களும் சிறிய கட்சிகளும் குறிப்பிட்ட காலவரையரைகளுக்குள் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறுவதும் ஜனநாயக மரபுகளை மீறுகின்ற செயலாகும்.
கடந்த காலங்களில் இந்த நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி நோர்வேயிற்கும் ஜப்பானிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் சென்ற நாங்கள் அரசியல் சாசன திருத்தங்களூடாக புதிய பிரச்சினைகளை விதைக்க முனைவது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டது.”
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று காலை தேசிய ஷூரா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அதன் உதவிப் பொதுச் செயலாளர் ஷெய்க் இனாமுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :
ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களது அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து தேசிய ஷூரா சபை தந்து திருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது, குறிப்பாக அரசியல் சாசனத்தின் மீதான 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை வரவேற்கப்படவேண்டிய வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாகும்.
போருக்கு பின்னரான இலங்கையில் இனங்களுக்கிடயிலான சமாதான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரி அவர்களின் அரசு காட்டுகின்ற அக்கறையை தேசிய ஷூரா சபை வரவேற்கின்றது.
அதேபோன்று அமுலில் இருந்த விகிதாச்சார தேர்தல் முறை மற்றும் விருப்பு வாக்கு முறை கொண்டிருந்த பாதகமான அம்சங்களை கவனத்தில் கொண்டு தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வர மைத்திரி அரசு எடுத்த தீர்மானத்தினையும் தேசிய ஷூரா சபை வரவேற்கின்றது.
என்றாலும், போருக்குப் பின்னரான இலங்கையில் உண்மையான சமாதன சகவாழ்வை நல்லிணக்கத்தை கட்டி எழுப்பத் தேவையான அரசியல் தீர்வுகளை தேடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜனாநாயக அரசியல் நீரோட்டத்தில் இருந்து சிறுபான்மை சமூகங்களை ஓரம் கட்டுகின்ற தேர்தல் முறை சீர்திருத்தங்கள் உள்ளடங்கிய அரசியல் சாசனத்தின் மீதான 20 ஆவது திருத்த சட்ட மூலம் குறித்து தேசிய ஷூரா சபை தனது அதிருப்தியை வெளியிடுகின்றது.
இது ஒரு சமூகத்தின் பிரச்சினை மாத்திரம் அல்ல, அல்லது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினை மட்டுமல்ல இது ஒரு தேசியப்பிரச்சினையாகும், இந்த நாட்டில் உள்ள சிறிய கட்சிகள் இடதுசாரிக் கட்சிகள் போன்றவையும் இந்த சட்டமூலத்தினால் பாதிப்படைகின்றன.
தேர்தல் தொகுதிகளை மையப்படுத்திய பிரதிநிதித்துவ, மற்றும் விகிதாசார முறை பெரும்பான்மை இனத்திற்கு சாதகமாக இருப்பதுபோல் இரு பெரும் தேசியக் கட்சிகளை மாத்திரம் துருவப்படுத்துகின்ற முனைப்பாகவும் இருப்பதனால் இடதுசாரிக் கட்சிகளும் இந்த புதிய முறையினால் ஓரங்கட்டப்படவுள்ளன.
1970 களின் ஆரம்பப் பகுதிகளில் அல்லது 1980 களின் இறுதிப்பகுதியில் இந்த நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்சிகளின் பொழுது இடதுசாரிக் கிளற்சிக் குழுக்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்களை இந்த அரசு மறந்து விடக் கூடாது.
இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொறுத்த வரை வரலாற்றில் எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் வன்முறையை ஒரு தெரிவாகக் கொள்ளவில்லை, ஜனநயாக அரசியல் நீரோட்டத்திலேயே நாங்கள் நம்பிக்கை வைத்து தேசிய அரசியலில் பங்கெடுத்து வருகின்றோம். இந்த நாட்டில் ஒருமைப்பாடு, சுயாதிபத்தியம் அமைதி சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், தேசிய அபிவிருத்தி என்பவற்றிற்கு நாம் ஜனநாயக வழி முறைகளில் பங்களிப்புச் செய்து வருகின்றோம்.
இந்த நிலையில் தான் 20 ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டமூலம் எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சரிபாதியாக சுமார் 50% விகிதத்தினால் குறைத்துவிடப் போகின்றது எனற அச்சம் ஏற்பட்டுள்ளது.சிறுபான்மை சமூகங்கள் மாத்திரமன்றி சிறு கட்சிகளைக் கூட ஜனநாய அரசியலில் இருந்து ஓரம் காட்ட எடுக்கப்படும் இந்த சட்டமூலம் கிட்டிய எதிர்காலத்தில் மீண்டும் கலவர சூழ்நிலைகளுக்குள் தள்ளிவிடும் அபாயமா இருக்கின்றது, இதனை இந்த தேசத்தின் ஸ்திரத் தன்மையிற்கும் சமாதான சக வாழ்விற்கும், அபிவிருத்தியிற்கும் அச்சுறுத்தலாகவே அதாவது ஒரு தேசிய விவகாரமாகவே தேசிய ஷூரா சபை கருதுகின்றது.
இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து அவசர அவசரமாக மேற்படி திருத்தச் சட்டமூலத்தை திணிப்பதுவும், தேவைப்படின் சிறுபான்மை சமூகங்களும் சிறிய கட்சிகளும் குறிப்பிட்ட காலவரையரைகளுக்குள் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறுவதும் ஜனநாயக மரபுகளை மீறுகின்ற செயலாகும்.கடந்த காலங்களில் இந்த நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி நோர்வேயிற்கும் ஜப்பானிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் சென்ற நாங்கள் அரசியல் சாசன திருத்தங்களூடாக புதிய பிரச்சினைகளை விதைக்க முனைவது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க மாட்டது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஏனைய தேசிய ஷூறா சபையினர்
1. ஜே.தாரிக் மஹ்மூத் – தலைவர்
2. டீ.கே. அஸூர் – பிரதித் தலைவர்
3. எம்.எச்.எம்.ஹசன் – நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்
Published by


Leave a comment