எம்.பிக்களின் எண்ணிக்கை 237

parliamentகொழும்பு: தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதன் படி பாராளுமன்ற உறுப்பினர் தொகை 237 ஆக உயர்த்தப்பட இருப்ப தோடு தொகுதிவாரி முறையினூடாக 145 எம்.பிக்களும் தேசியப் பட்டியல் ஊடாக 37 எம்.

பிக்களும் மாவட்ட விகி தாசார முறையினூடாக 55 எம். பி களும் தெரிவு செய்யப்பட உள்ளனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

புதிய தேர்தல் மறுசீரமைப்பு முறைக்கு அமைச்சர் றவூப் ஹக்கீம், பதில் அமைச்சர் அமீர்அலி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்ததோடு இதனால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படும்மென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இரட்டை வாக்குமுறை கொண்டு வரப்பட வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

அமைச்சர் திகாம்பரமும் சிறுபான்மை சார்பில் இங்கு கருத்துத் தெரிவித்துள்ளதோடு சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என அவர் இங்கு கோரியதாக அறியப்படுகிறது.

அமைச்சர்கள் றவூப் ஹக்கீம் மற்றும் பதில் அமைச்சர் அமீர் அலி ஆகியோருக்கும் அமைச்சர்களான சம்பிக ரணவக்க ராஜித சேனாரத்ன ஆகியோருக்குமிடையில் பலத்த வாதிப் பிரிவாதம் இடம்பெற்றதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதியில் 237 ஆக எம். பி தொகையை உயர்த்தும் புதிய முறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. விசேட அமைச்சரவை கூட்டம் சுமார் 2 1/2 மணி நேரம் நீடித்ததாகவும் அறிய வருகிறது.

இதன்படி புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று இரவு வர்த்தமானியில் வெளியிடப்பட ஏற்பாடாகியிருந்தது.

விருப்பு வாக்கு முறையற்ற புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தும் விவகாரம் 2 மாதங்களுக்கு மேலாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலையில் காணப்பட்டது. ஆரம்பத்தில் எம்.பிக்கள் தொகையை 255 ஆக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டதோடு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளை பாதுகாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டு சகல கட்சிகளினதும் யோசனைகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைச் சபையை மீண்டும் அமைச்சரவை கூடி ஆராய்ந்தபோதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 225 ஆக எம். பி தொகை பேணப்பட வேண்டுமென ஐ. தே. க கொள்கை ரீதியான முடிவு எடுத்ததோடு எம்.பி தொகை 255 ஆக அதிகரிக்கப்படவேண்டுமென ஐ. ம. சு மு தரப்பில் குறிப்பிட்டது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எம்.பி. தொகையை 225 ஆக பேணவும் தேசியப் பட்டியல் ஊடாக 25 பேரையும் தொகுதிவாரி முறை மூலம் 125 பேரையும் விகிதாசார முறை மூலம் 75 பேரை தெரிவு செய்யவும் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு தெரித்திருந்ததோடு இதற்கு ஆதரவு வழங்க முடியாது என முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இ. தொ. க ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஈ. பி. டி. பி, ஜே. வி.பி அடங்கலான 18 கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தன.

20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு காண்பதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் நேற்று காலை இடம்பெற்றது. இதன்போது 237 பேரை தெரிவு செய்யும் புதிய முறைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புதிய முறையினால் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டியதாக அறிய வருகிறது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பதில் அமைச்சர் அமீர் அலி, அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளிநாடு சென்றுள்ளதால் அவரின் பதில் அமைச்சராக நான் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றேன். சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இரட்டை வாக்கு சீட்டு முறையை கொண்டு வருமாறு கோரினோம்.

அதற்கு சில அமைச்சர்கள் ஆட்சேபம் முன்வைக்கின்றனர். சிறுபான்மையிருக்கு அநீதி ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளை நீதிமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் முன்வைக்க முடியும். 20 ஆவது திருத்தத்தை இனியும் காலங்கடத்த முடியாது எனவும் ஜனாதிபதி கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தின் பின் 20 ஆவது திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்

Published by

Leave a comment