காத்தான்குடி: 1970களில் காத்தான்குடியில் கரப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுக்கள் ஒருவகையில் அவ்வப்போது விளையாடப்பட்டு வந்த போதிலும், 1980களின் ஆரம்பத்திலேயே காத்தான்குடி கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்றிருந்தது.
1970களின் பிற்பாடு, இலங்கை பிரஜைகள் பணியாளளர்களாக வளைகுடா நாடுகளுக்குச் சென்று வந்த இக்காலப்பகுதியையடுத்தே காத்தான்குடியில் கால்பந்தாட்டம் காலூன்ற ஆரம்பிக்கறது.
1980களின் ஆரம்பத்தில் யுனைட்டட் விளையாட்டுக்கழகமும், லக்கி விளையாட்டுக் கழகமும் உதயமாகின்றன. லக்கி என்று உதயம் பெற்ற இக்கழகம் பின்னர் சன்றைஸ் விளையாட்டுக் கழகமாக பெயர்மாற்றப்பட்டது.
1984ம் ஆண்டு நோன்புப் பெருநாள் விடுமுறையையொட்டடிய வார இறுதிநாட்களில் மின்னொளியில் மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை காத்தான்குடி யுனைடட் விளையாட்டுக் கழகம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது. இச்சுற்றுப் போட்டியில் காத்தான்குடியின் பிரதான கழகங்களுடன் பதுளை விளையாட்டுக்கழகமும் கலந்து சிறப்பித்திருந்தது.
1980-1990 காலப்பகுதியில் நோன்பு காலங்களைத் தவிர, பிரதி வெள்ளியும் ஞாயிறும் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் ஏதாவதொரு அணி விளையாடும் கால்பந்தாட்டப்போட்டி தவறாமல் இடம்பெறும்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய பிரதான நுழைவாயிலில் நுழைவுச்சீட்டு விற்பனை இடம்பெறும். அப்போதெல்லாம் ஆகக் கூடிய கட்டணம் 5 ரூபாவாகவே இருக்கும். பின்னர் 1990 ஆரம்பப் பகுதிகளில் 20 ரூபாய்வரைக்கும் கட்டணம் சென்றிருந்தது.
ஐம்பது சதம் இருந்தால்கூட சிறுவர்களை அனுமித்துக்கும் காலமது. இளைஞர்கள் சில்லரைகளை சேகரித்து, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்களைக் கொடுத்து போட்டிகளைக் காண்பர். கழகத்தின் நெருங்கியவர்கள் 10 ரூபாய்வரை செலுத்தி போட்டியைக் காணச் செல்வர்.
அப்போது காத்தான்குடியில் இரு பெரும் கழகங்களான யுனைடட், சன்றைஸ் புகழ்பெற்றிருந்தது. இருகழகங்களுக்கும் சம அளவான ஆதரவாளர்கள் காத்தான்குடியில் இருந்தனர். யுனைட்டட் சன்றைஸ் கழகங்கள் விளையாடும்போது மைதானம் இரு கழகங்களின் இரசிகர்களால் நிறைந்து காணப்படும்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய பக்கத்தில் யுனைட்டட் கழக இரசிகர்களும், மாமர-கிணற்றுப் பக்கமாக சன்றைஸ் கழக இரசிகர்களும் நிறைந்து போட்டியைக் காண்பர்.
1985இல் மீண்டும் யுனைடட் விளையாட்டுக் கழகம் பிரமாண்டமான சுற்றுப்போட்டியை நடாத்தியது. இச்சுற்றுப்போட்டியில் காத்தான்குடியின் யுனைடட், சன்றைஸ், விக்டரி, நூறாணியா மற்றும் மில்லத், பதுறியா ஆகிய விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொண்டிருந்தன.
யுனைடட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோல் காப்பாளர் மசூத், மற்றும் முன்னணி வீரர்களான நவாஸ் (ஆசிரியர்), மன்சூர், வசூர் டீன், ‘வெட்டுப்பிளயர்’ ஹனீபா, சபீக், கியாஸ் மற்றும் இஸ்ஸதீன் ஆகியோரையும்,
சன்றைஸ் விளையாட்டுக்கழகம் சார்பாக நம்பிக்கை கோல் காப்பாளர் பிர்தௌஸ் (ஆசிரியர்), சபீக், மொகிடீன், நிலாம், சரூக், சாஹிர் ஆகியோரையும் இந்நேரத்தில் ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
காத்தான்குடி 5 மார்க்கட் சுவரிலும் மற்றும் உள்ளுர் வீதிகளிலும், காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பஸ் தரிப்பு நிலையத்திலும் போட்டிக்கான போஸ்டர்கள் எழுதி ஒட்டப்பட்டிருக்கும்.
சன்றைஸ் நீலம், யுனைடட் மஞ்சள், நீலம், விகடரி சிவப்பு, நூறாணியா பச்சை மற்றும் மில்லத் மஞ்சள் ஆகிய நிறங்களில் போட்டிகளில் களமிறங்கும்.
இன்று போல் கடற்கரை அன்று புகழ்பெறவில்லை. வெள்ளியும் ஞாயிறும் கால்பந்தாட்டப் போட்டியை இரசிப்பதே காத்தான்குடி மக்களின் பிரதான பொழுது போக்காக அன்று காணப்பட்டது.
காத்தான்குடியில் கால்பந்தாட்டம் புகழ்பெற்றிருந்ததால் வீதிகளிலும், தோணா, சிற்சிறு காணிகள் மற்றும் மையவாடிகளிலும் இளைஞர்களும் சிறுவர்களும் கால்பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தனர்.
காத்தான்குடி 4, மையவாடியில் எவர்டன் விளையாட்டுக்கழகமும், காத்தான்குடி 6, மையவாடியில் கிரஸண்ட் விளையாட்டுக் கழகமும் விளையாடி வந்தது.
இதன் காரணமாக மற்றுமொரு விளையாட்டு மைதானத்தின் தேவை உணரப்பட்டது.இதன் காரணமாக 1984-85களில் மர்ஹூம் அகமட் பரீட் மீராலெப்பை (பா.உ) அவர்களின் முயற்சியினால் காத்தான்குடி இளைஞர்களின் விளையாட்டுத் தேவையைக் கருதி காத்தான்குடி மத்திய பகுதியில் பரீட் அரங்கு-பொது மைதானம் அமைக்கப்படுகிறது.
இதனையடுத்து கால்பந்தாட்டம் இரு மைதானங்களிலும் இடம்பெற்றாலும், மத்திய மகா வித்தியாலய மைதானமே அப்போது புகழ் ஓங்கி இருந்தது.
இக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டச் சம்பியனாக இருந்த மட்டு பாடுமீன் கழகம் மற்றும் சிவானந்தா டிஸ்கோ, ஏறாவூர் யங்ஸ்டார், வாழைச்சேனை அல்அக்ஸா, அக்கரைப்பற்று யூத் ஆகிய விளையாட்டுக் கழகங்களும் காத்தான்குடிக்கு வருகைதந்து விளையாடி மகிழ்ந்து சென்றனர்.
அப்போதும் இப்போதும் காத்தான்குடி விளையாட்டு உள்ளங்களை மகிழ்வித்துச் செல்லும் இருவரை ஒருபோதும் காத்தான்குடி விளையாட்டுச் சமூகம் மறக்க முடியாது. இவர்களுள் ஆரையம்மபதி மகேஸ்வரன் (மத்தியஸ்தர்) மற்றும் அக்கரைப்பற்று பாரூக்-நானா ( மக்கள் வங்கி, மத்தியஸ்தர்) காத்தான்குடி விளையாட்டு உள்ளங்களில் இன்றும் இடம்பிடிப்பவர்கள்.
இதன் பின்னர் காத்தான்குடி விக்டரி மைதானம் ஏற்படுத்தப்படுகிறது. மத்தியஸ்தரும் நூலக பொறுப்பதிகாரியுமான முபாறக், ரபீக் ஆகியோரின் முயற்சியில் விக்டரி விளையாட்டுக் கழகம் புகழ்பெறுகிறது. மேலும் புதிய காத்தான்குடியில் நூறாணியா கழகம் அமைக்கப்படுகிறது. முஸ்தபா மற்றும் மஜீத் (நைலோன்) ஆகியோரின் தலைமையில் இக்கழகம் சிறப்பாக செயல்பபட்டு வந்தது.
புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் மில்லத் உருவாகிறது. றியாஸ், பாயிஸ் ஆகியோரின் தலைமையில் இக்கழகம் 1990 இறுதிவரை நிலைத்திருந்தது.
1990 காத்தான்குடியில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையையடுத்து, 1980-90 வரை சிறப்பாக இயங்கி வந்த கால்பந்தாட்டத்தின் காத்தான்குடிக் கனவு சரிந்தது.
படித்துக் கொண்டு விளையாடிய இளைஞர்கள் அரசாங்க உத்தியோக்தைப் பெற்றுக்கொண்டதாலும், ஏனையோர் வெளிநாடு சென்றதாலும் காத்தான்குடியின் பொற்காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அனைத்து கால்பந்தாட்டக் கழகங்களும் கலைந்து செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்பான வாசகர்களுக்கு,
காத்தான்குடியின் “அந்தநாள் ஞாபங்கள்” எனும் பகுதி மிகச் சிறப்பாக எமது தளத்தில் கடந்து செல்கிறது. நீங்களும் தங்களது கடந்த அனுபவங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சமயம், அரசியல், கலாசாரம், விளையாட்டு போன்ற விடயங்களில் தங்களது அனுபவங்களை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எமக்கு எழுதி அனுப்புங்கள்.
நன்றி
இயக்குனர்.
Published by


Leave a comment