“பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கக் கூடாது” ஹரீஸ்

Harees MPss– ஹாசிப் யாஸீன்

கல்முனை: இருபதாவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களின் பேரம்பேசும் சக்தியினை இல்லாமல் செய்ய எத்தனிக்கும் பேரினவாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்கக் கூடாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டிடத் திறப்பு விழா கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று அரசாங்கத்திற்குள்ளிலிருக்கும் தெற்கிலுள்ள சில பேரினவாத கட்சிகள் இருபதாவது திருத்தச் சட்டத்தினை கொண்டு வந்து வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்து அவர்களின் பேரம் பேசும் சக்தியினையும் இல்லாமல் செய்ய முயற்சிக்கும் நடவடிக்கையினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு எதிராக சிறுபான்மைக் கட்சிகள் செயற்பட்டாலும் அவர்களின் வினைத்திறன் மற்றும் ஆளுகைகலுக்கு அற்பாட்பட்ட விடயங்களை முன்னெடுத்துச் செல்வதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அந்தஸ்தையும், அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் தொகுதிவாரி தேர்தல் முறை மூலம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்தாலும் அவர்களுக்கான கடமைகள், பொறுப்புக்கள், அதிகாரங்கள் என்பன சட்ட ரீதியாக வழங்கப்படவில்லை.

இன்று பிராந்திய மட்டத்தில் காணப்படுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவானது சட்ட ரீதியான பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சபை அல்ல. அது ஜனாதிபதியினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் ஒரு அலங்காரப் பதவியாகும். இவ்வாறு ஒரு முழுமைப்படுத்தப்படாத அதிகாரங்களை கொண்டு தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாது.

இவ்வாறு தொகுதிவாரி தேர்தல் முறையில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றபோது தொகுதி பாராளுமன்ற உறுப்பினரால் தொகுதி மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் எனக் கேட்க விரும்புகிறேன்.

ஜனாதிபதி அவசர அவசரமாக இத்தேர்தல் முறை மாற்றத்தினை கொண்டுவர முனைவதை தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment