புறக்கனிக்கின்றோமா ?

kattankudy dates (3)M.C Najmul Hussain

காத்தான்குடி: எம் சமூகம் புறக்கணிக்கும் ஒரு பகுதியினர் தான் தெருவோரத்திலே அனாதைகளாக விடப்பட்ட புத்தி சுயாதீனமற்றவர்கள். நான் ஒரு போதும் எமது சமூகம் அறவே கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டவில்லை . அவர்களுக்கு உணவு ( கொடுக்கின்றோம் உடையும் கொடுக்கின்றோம் ஆனால் வைத்திய வசதி வழங்கப்படுவதில்லை.

அவ்வாறு வைத்திய வசதி வழங்கப்பட்டிருந்தால் அவர்களின் உடைந்த கைகள் ஒழுங்காக ஒட்டப்படாத நிலையில் ( உதாரணம் :- சகோதரர் பரீட் ) நடமாட வேண்டிய நிலையோ, உடம்பிலே காயங்களுடன் நடமாட வேண்டிய நிலையோ (உதாரணம் :- சகோதரர் அலி ), வீதியிலும், ஆறுகளிலும் விழுந்து மரணிக்கவேண்டிய நிலையோ ஏற்பட்டு இருக்காது ( உதாரணம் :- சகோதரர் நசார் ). இதற்கெல்லாம் முடிவுதான் என்ன ? இது நிச்சயமாக தனி நபர் ஒருவரினால் செய்ய முடியாத ஒன்றாகும். ஆனால் ஏதாவது ஒரு சமூகரீதியான அமைப்பு நினைத்தால் அரசின் உதவியோடு இவர்களுக்கு உதவலாம். இவர்களுக்கு அரசின் பராமரிப்பில் ஓரளவு நிம்மதியான வாழ்வளிக்களாம். எந்த அமைப்பாவது முன்வருமா? என்ற எதிர்பார்ப்புடன் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

நானறிந்த வகையில் எமதூரைச் சேர்ந்த புத்தி சுயாதீனமற்ற நால்வர் நீர் நிலைகளில் விழுந்தும் ஒருவர் புகையிரதத்தில் அடிபட்டும் ஒருவர் வீதி விபத்திலும் இறந்துள்ளனர். இதே நிலை எமது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டால் பார்த்துக் கொண்டு இருப்போமா?

இது தவிர காணாமல் போனவர்கள், வாகனத்தில் அடிபட்டு இறந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் என பலரும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலதிகமாக போதைப்பொருள் பாவனையால் மன நலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைபவர்களும் எம்மத்தியில் ஏராளம் உண்டு. இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

உண்மையில் தனிப்பட்ட நபர் ஒருவரினால் இவ்வாறான பாரிய முயற்சி ஒன்றை செய்வது சாத்தியமற்றது.ஒரு வேளை தனிப்பட்ட நபர் ஒருவரின் முயற்சியில் அரசின் பராமரிப்பின் கீழ் இவர்களைக் கொண்டுவர முயற்சி செய்தாலும் இவர்களுக்கான முறையான பராமரிப்புக் கிடைக்கின்றதா ? என்பதைக் கண்காணிப்பது சாத்தியமற்றது.

மேலும் எமது ஊரில் பிறக்கும் போது மனநிலை பதிக்கப்பட்டவராகப் பிறந்தவர்களைப் போன்றே பிறந்தபின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை செலுத்தத் தவறும் நாங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை தெருவிலோ அல்லது பொது இடங்களிலோ நிம்மதியாக நடமாடவிடுகிறோமா ? என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு பரிகாசம் செய்வது முதல் அவர்களது ஆடைகளை அவிழ்ப்பது வரை என சகலவற்றையும் எங்களில் சிலர் நாளாந்த பொழுதுபோக்காக செய்து வருகின்றனர்.(தினமும் எமதூர் சந்தையில் காணலாம்)

எனவே சமூக நலனில் அக்கறையோடு செயற்படும் தவறுகளை பயமின்றி சுட்டிக்காட்டும் பத்திரிகை என்றவகையில் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்

” மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் எங்களைப் போன்ற மனிதர்களே. அவர்களுள் ஒரு சிலர் குணமடைந்தால் எங்களைவிட சிறப்பான பங்களிப்பை சமூகத்துக்கு ஆற்றலாம் “

குறிப்பு : இதன் பிரதி எமது ஊரில் உள்ள மார்க்க மற்றும் சமூக அமைப்புக்களுக்கு வெகு விரைவில் அனுப்பப்படும்.

M.C Najmul Hussain
kattankudy
hussainfm@yahoo.com

Published by

Leave a comment