காத்தான்குடி: 1988-1989. இந்திய அமைதி காக்கும் படையினரின் கீழ் வட கிழக்கின் பெரும்பாலான பிரதேசங்கள் இருந்து வந்தன. 1987, இலங்கை-இந்திய அமைதி ஒப்பந்தத்தின் பின்னர், விடுதலைப் புலிகளைத் தவிர தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்திய அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து செயல்பட்டுவந்த காலம்.
இந்திய அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து செயல்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் தங்களது அடாவடிகளை மேற்கொண்டு வந்தனர்.
1988 கிழக்கு மாகாணசபைத் தேர்தல், கிழக்கு முஸ்லிம்களின் ஒன்றுபட்ட திருப்பமாக செயற்பட்டமைக்கு இத்தமிழ் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக இருந்தன.
இந்திய அமைதிப்படையினருடன் சேர்ந்து முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்தல், மிரட்டுதல், வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் கொள்ளையடித்தல் போன்றன இடம்பெற்று வந்தன.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு அரசியல் வளர்ச்சிக்கு மிகவும் கைகொடுத்திருந்த தமிழ் ஆயுதக்குழுக்களின் இவ்வாறான நடத்தைகளால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் உட்பட மேடையேறும் அத்தனை உறுப்பினர்களும், ஆதரவாளர்களை நோக்கி போராளிகளே என அழைத்து வந்தனர்.
போராளிகள் என்றால் ஆயுதம் ஏந்தும் போராளிகள் என்றே அப்போதைய இளைஞர்கள் கருத்திற்கொண்டனர். போராளிகள் என கூட்டத்திற்கு வரும் ஆதரவாளரர்களை அழைப்பதால் குறிப்பாக இளைஞர்கள் மதிமயங்கிப்போவதை முஸ்லிம்காங்கிரஸ் தலைமை பீடம் அப்போது அறிந்திருந்தது.
கையில் பிஸ்டல், ‘எக்கில்’ ஜே.ஆர். ரக கைக்குண்டுகளைச் சொருகிக்கொண்டு இந்திய அமைதிகாக்கும் படையினருடன் சவாரிவரும் தழிழ் இளைஞர்கள் போல், தாங்களும் ஆயுதம் ஏந்த வேண்டும், போராட வேண்டும் என்ற உணர்வலைகள் கிழக்கின் முஸ்லிம் இளைஞர்களிடம் ஏற்ட்டிருந்த காலம் அது.
1988 டிசம்பர் மாதம். காத்தான்குடி மௌலானா கபுறடி திடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருக்கிறது. பி.ப. 2 மணிக்கு வரவிருந்த அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் சேகு இஸ்ஸதீனையும் அவருடன் வருகை தரும் பிரமுகர்களையும் காண பிற்பகலில் இருந்து மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
மாலை 4 மணியளவில் சேகு இஸ்ஸதீன் குழுவினர் 3 பிக்அப் ரக வாகணங்களில், நவீன கனரக ஆயுதங்கள் ஏந்திய முஸ்லிம் இளைஞர்களுடன் மௌலானா கபுறடித் திடலுக்கு வந்து சேர்கின்றனர்.
“நாரே தக்பீர் அல்லாஹூ அக்பர்” கோசம் வானைப் பிளக்கிறது.
ஆயுதமேந்திய தென்கிழக்கு முஸ்லிம் இளைஞர்களைப் பார்த்து வியந்து நிற்கின்றனர் காத்தான்குடி மக்கள்!
சேகு இஸ்ஸதீன் பேசுகிறார்…
“இங்கு காணப்படும் வெள்ளைத் தொப்பிகள் அனைத்தும் இராணுவத் தொப்பிகளாக மாறவேண்டும்” என்ற போராட்ட முழக்கத்தை மௌலான கபுறடி மண்ணில் விதைக்கிறார்.
மீண்டும் “அல்லாஹூ அக்பர்” கோசம் முழங்குகிறது. மாலை 6 மணியளவில் கூட்டம் கலைகிறது.
மறுநாட்காலை ஊரில் இருந்த சில இளைஞர்களைக் காணவில்லை என்ற தகவல் ஊரில் பரவுகிறது.
இந்திய அமைதிகாக்கும் படையினருடன் இணைந்துள்ள தமிழ் ஆயுதக்குழுக்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் இணைக்கப்படுகின்றனர்.
காத்தான்குடி மக்களை ஏமாற்றிய மகிழ்ச்சியில் “மாமனிதர்” மர்ஹூம் அஸ்ரபும் தவிசாளர் சேகு இஸ்ஸதீனும் குளிர்காய்ந்திருக்கின்றனர்.
“காத்தான்குடி இளைஞர்களுக்கு நல்ல பூஜை இடம்பெறுகிறது” என தமிழ் ஆயுதக்குழுவினர் காத்தான்குடியில் சொல்லித் திரிந்தனர். பல சித்திரவதைகளுக்குப் பின்னர் ஒவ்வொருவொருவராக இந்திய அமைதிப்படை முகாமைவிட்டு காத்தான்குடிக்கு ஆயுதப்பயிற்சியைக் கைவிட்டு, தப்பியோடி வந்து சேர்கின்றனர்.
அன்று திசை திரும்பிய இந்த இளைஞர்கள் இன்றும் பல கஸ்டங்களை தங்களது வாழ்க்கையில் அனுபவித்து வருகின்றனர்.
காத்தான்குடியில் பேசிய இவ்வாறான பேச்சுக்களை தலைவர் அஸ்ரபோ சேகு இஸ்ஸதீனோ வேறு எங்கும் பேசவில்லை. வேறு எங்கும் ஆயுதப்பயிற்சிக்கு இளைஞர்களை அழைக்கவுவில்லை.
மௌலான கபுறடிப் பேச்சு நிச்சயமாக காத்தான்குடி இளைஞர்களை மாத்திரமல்ல பெரும்பாலான மக்களையும் “உசார் மடையர்களாக்கி” இருந்ததை இன்றும் மறக்க முடியாது.
ஒரு சமூகத்தை விற்று இன்னொரு சமூகம் குளிர்காய நினைக்க எடுத்த முயற்சி இன்றும் அவர்களுக்கு கைகூடவில்லை.
எல்லோரும் சிதறி, சிதைந்து ஒதுங்கிவிட்ட நிலையில் அன்றும் இன்றும் முஸ்லிம் காங்கிரஸ் வியாபார நிலையமாக அரசியல் சந்தையில் இயங்கிவருகிறது. கால் நூற்றாண்டைத் தாண்டும் இலங்கை அரசியல் வரலாற்றில் சமூகத்துக்காக எதைச் சாதித்திருக்கிறது…?


Leave a comment