LLRC யிற்கு புறம்பாக உண்மைகண்டறியும் ஆணைக்குழு ஒன்று நல்லாட்சி அரசினால் அமைக்கப்படல் வேண்டும்

maithiri– ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கொழும்பு: இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார்.

உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LLRC கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முதல் 2009 யுத்த நிறைவு வரை இடம் பெற்ற விவகாரங்கள் குறித்தே ஆராய்ந்து சிபாரிசுகளை முன்மொழிந்துள்ளது.

குறிப்பிட்ட ஆணைக்குழுவில் கூட முஸ்லிம் சமூகம் சார்பாக முறையான சாட்சியங்களி முன்வைக்கவோ அல்லது அது முஸ்லிம்களது விவகாரங்களை உள்வாங்க போதுமானதல்ல என்பதனை வலியுறுத்தவோ எந்தவொரு முஸ்லிம் கட்சிக் காரரும் முன்வரவுமில்லை.

குறிப்பாக மாவில் ஆறு ( 2006) யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு (2009) முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிவிஷேட கவனம் செலுத்துகின்றது.

maithiri

பாரிய அளவில் சர்வதேச அழுத்தங்கள் இருப்பதனால் சிபாரிசுகளை அமுல் நடத்துவதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம், மீள் கட்டமைப்பு, புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், இன நல்லிணக்கம், காணிகளை மீட்டுக் கொடுத்தல், வீடுகளை கட்டிக் கொடுத்தல், உள்கட்டமைப்பு அபிவிருத்தி என பல்வேறு கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

வட கிழக்கு வாழ் முஸ்லிம்கலைப் பொறுத்தவரை இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 கைச்சாத்திடப்பட்டது முதல் 2009 யுத்தம் நிறைவுறும் வரையும் குறிப்பாக 2002 மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சத்தப் படுகின்ற வரையும் பாரிய உயிர் உடமை காணி இழப்புக்களை சந்தித்ததோடு ஒட்டு மொத்த வடபுல முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர், வட கிழக்கு எங்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மூன்று தசாப்தகாலமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களது விவகாரங்களை ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து நிவாரணம் வழங்குகின்ற தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளையுடைய ஆணைக்குழு ஒன்றை 1987-2009 வரையிலான காலப்பகுதியை மையப்படுத்தி அமைக்க தவறியுள்ளன.

அவ்வாறான ஒரு ஆணைக்குழுவை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினதும், ஜனாதிபதிகளினதும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தனித்துவ முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இன்று வரை கோரி நிற்கவுமில்லை, போராட்ட அரசியலை சூதாட்ட அரசியலாக மாற்றி ஈற்றில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற சரணாகதி அரசியலாக மாற்றிவிடும் கையாளாகா அரசியலையே அவர்கள் செய்து வருகின்றனர்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் சார்பாகவும் முஸ்லிம் அரசியல் சிவில் மற்றும் சமயத் தலைமைகள் இவ்வாறானதொரு கோரிக்கையை நிபந்தனையாகமுன்வைத்தே தமது ஆதரவை தேசியக் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

தேசிய ஷூரா கவுன்ஸில் அவ்வாறனதொரு வேண்டுகோளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது,இறுதி நேரத்திலேனும் நல்லாட்சி அரசின் பங்காளிகளாய் ஆகிவிட்ட நாமது உரிமை போராட்ட அரசியல் குழுக்கள் பாராளுமன்றம் கலைக்கப்ப்படுமுன் அந்த கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவும், முடியுமாயின் ஹன்சார்டில் பதிவு செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

இனவாதிகளினதும், மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசியல் வாதிகளினதும் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்ப எடுத்தார் கைப்பிள்ளையாகவும், முஸ்லிம் அரசியல் வாதிகளின் பிச்சைக் காரன் கால் புண் போலவும் வடகிழக்கு முஸ்லிம்களது விவகாரங்கள் அரசியல் சதுரங்க பகடைக் காய்களாக மாறுவது முடிவிற்கு கொண்டு வரப்படல் வேண்டும்.

Published by

Leave a comment