வித்தியாவின் கொலை ஒரு தனிப்பட்ட குடும்பத்தின், சமூகத்தின் பிரச்சினையோ அல்ல

Cute logo 01 (1)– எம்.ரீ.எம். பாரிஸ்

கொழும்பு: 18 வயதுபாடசாலை மாணவி வித்தியா வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்சினையோ அல்லது சமூகத்தின் பிரச்சினையோ அல்ல. மாறாக, இலங்கையில் அவதானத்துக்குரிய ஒருதேசியப் பிரச்சினையாகும். இத்தகைய ஒரு கொடிய பிரச்சினையை இல்லாதொழிப்பதில் ஊடக நிறுவனங்களுக்கும் அதிக பங்குண்டு.

குற்றவாளிகளுக்கு உச்சகட்ட தண்டணை வழங்கப்படுவது மாத்திரமன்றி, இத்தகை வன்முறைகளை இல்லாதொழிக்கும் சமூகப் பொறிமுறைகளின் செயற்பாட்டு ரீதியான முன்னெடுப்புகளை மேலும் நெறிப்படுத்த வேண்டியுமுள்ளது. இலங்கை அபிவிருததிக்கான ஊடக நிலையம் மற்றும் சக வாழ்வுக்கான கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தஅறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுலோகங்களையும் மக்கள் அணிவகுப்பையும் பிரசுரித்து வித்தியாவின் விவகாரத்தை அறிக்கையிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளை இல்லாதொழிப்பதோ அது தொடர்பில் நேர் நிலையான சிந்தனைப் போக்கை உருவாக்குவதே அவ்வளவு இலகுவானதல்ல. பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல், பாதிக்கப்படும் பெண்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல், வன்முறை மனோபாவத்தை சமூகமயப்படுத்தும் சமூக அமைப்புக்கள் மீது தாக்கம் செலுத்துதல் போன்ற தூர நோக்குள்ள செயற்பாடுகளுக்கு பக்க பலமாக இருப்பதன் மூலும் ஊடகங்கள் காத்திரமான பங்களிப்பினை ஆற்ற முடியும்.

இத்தகைய வன்முறைகளில் பாதிப்பு தழிழ் சமூகத்தில் மாத்திரமன்றி, சிங்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களிலும் இடம்பெறாமலில்லை. இலங்கையில் அமுலிலுள்ள வீட்டு வன்முறை தொடர்பான சட்டத்தின் பிரயோகத் தன்மையை மறு பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச்சம்பவம் உணர்த்துகின்றது. சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை இல்லாதொழிப்பதில் செயற்றிறன் அற்றிருக்கும் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் திருத்தங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசரத்தை இச்சம்பவம் உணர்த்துகின்றது.

சமய, இன வித்திசாங்களுக்கப்பால் இலங்கையில் செயற்பாட்டு ரீதியாக மந்த நிலையிலுள்ள சட்டப் பொறிமுறையின் செயற்றிறனை ஊக்குவிக்க ஊடகங்கள் முன் வர வேண்டும். வித்தியாவின் கொலை வெறும் உரையாடலுக்கான சம்பவமல்ல. முன்னாள் ஜனாதிபதி உட்பட சில இனவாத அரசியல் சக்திகள் இதனைப் போராட்ட உணர்வைத் தூண்டுவற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தமுற்படுகின்றனர்.

சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, யாழ் இளைஞர்களை வன்முறையின் பால் தூண்டிவிட முற்படுகின்றனர். கொலைக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதி உச்ச தண்டக்குட்படுத்தப்படுவது எவ்வாறு முக்கியமோ அதேயளவு முக்கியம் இத்தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி சுய நலன் பெற முற்படுபவர்களுக்கு துணை போகாமலிருப்பதாகும்.

இத்தகைய சில பிழையான பொருள் கோடல்கள் இந்த நாட்டில் பெண்களின் அந்தஸ்தைக் குறைத்து மதிப்படுவதாகும். பெண்கள் சம உரிமையினை அசட்டை செய்வதாகும். யாழ் குடாநாட்டில் வித்தியாவின் வன்கொலைச் சம்பவத்தையடுத்து, யாழ் இளைஞர்களும் பொது மக்களும் வீதிக்கிறங்கினர். அதன் போது, அவர்கள் சட்டத்தை மீறிய செயற்பாட்டிலும் ஈடுபட்டனர். ஆனால், இதனைப் பயங்கரவாததுடன் தொடர்படுத்துவது ஒரு இளம் யுவதியின் வன்கொலையை அசட்டை செய்வதாகும். இச்சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் முடிவதற்கு முன்னர் கஹவத்தையில் மக்கள் வன்முறையில் இறங்கினர். முன்னாள் ஜனாதிபதியோ அவர் சார்ந்த அரசியல் கட்சிகளோ இதனைப் பயங்கரவாதம் எனச்சொல்ல மாட்டார்கள்.

நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தலைமைகள் இத்தகைய சம்பவங்களை தமது சொந்த அரசியல் நலனுக்காகப் பயன்படுத்துவதை நிதானமாக அணுக வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில், ஊடக நிறுவனங்கள் தூரநோக்குடன் செயற்படுவது கட்டாயமானதாகும். இலங்கையில் வீட்டு வன்முறைக்கெதிரான சட்டம் கடுமையாக இருந்தாலும், அதன் அமுலாக்கம் மந்தமாக இருப்பது கவலைக்குரியதாகும். கிராமங்கள் தோறுமுள்ள பொலிஸ் பிரிவுகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரிவுகளை ஏற்படுத்திய பின்னரும் அதிக பட்சத் தண்டனைகள் சட்டத்திலுள்ள போதிலும், வன்கொடுமைச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன என்றால், இத்தகைய அமைப்புகளைத் தாண்டி பெண்களுக்கெதிரான வன்முறையை நிலை பெறச் செய்யும் சக்தியொன்று நிலை பெற்றுள்ளது என்பதே உண்மையாகும். இத்தகைய சக்தியுடன் போராடுவது ஊடகங்களின் கட்டாயக் கடமையாகும்.

Published by

Leave a comment