ஜொகன்னஸ்பேர்க்: தென்னாபிரிக்க நகரான ஜொகன்னர்ஸ்பேர்க்கிற்கு அருகே உள்ள பிரபலமான லயன் பார்க்கில் அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை சிங்கம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அவர் கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஜொகன்னர்ஸ்பேர்க்கிற்கு 30 கிலோ மீட்டர் வடக்கே இருக்கும் லயன் பார்க்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பார்க்கிற்குள் செல்பவர்கள் கார் கண்ணாடியை மூடியே வைத்திருக்க வேண்டும் திறந்து வைத்திருக்க கூடாது என்று கடும் விதி இருக்கிறது.
இருந்தும் இவர்கள் பயணம் செய்தபோது கார் கண்ணாடியை இறக்கி வைத்துக்கொண்டு சிங்கங்களை பார்த்து ரசித்தபடி இருந்திருக்கிறார்கள். திடீரென்று ஒரு சிங்கம் இவர்கள் கார் கதவுக்கு ஊடே கால்களை விட்டு தாக்கியிருக்கிறது. அதில் பலத்த காயமடைந்த பெண் பயணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கொல்லப்பட்டவர் 22 வயதுடைய அமெரிக்க யுவதி என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பார்க்கை சுற்றிப்பார்க்கும் போது கார் கண்ணாடி கண்டிப்பாக மூடியிருக்க வேண்டும் என்று கடுமையான விதி இருந்தும் சிலர் ஆர்வமிகுதியால் கண்ணாடியை இறக்கி விட்டு ரசிப்பதால் இந்த மாதிரி அசம்பாவிதம் ஏற்பட்டு விடுவதாக அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த நான்கு மாதங்களில் நடந்த மூன்றாவது சம்பவம் இது என்றும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
Published by



Leave a comment