அந்தநாள் ஞாபகம்-1: கடித உறையும் தவளைப் பெட்டியும்

frog box– MJ

1992ம் ஆண்டு, காத்தான்குடியில் ஏற்பட்ட திருமண சீர்திருத்தங்களுக்கு முன்னர் அப்போதய திருமணங்களின் போது பல விடயங்கள் இருப்பினும் அவற்றுள் நகைச்சுவையுடன்கூடிய பிரதான இரு விடயங்களை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிச்சியடைகிறோம்.

அப்போதெல்லாம் அநேகமான திருமணங்கள் மாலை வேளையிலேயே இடம்பெறும். செல்வந்தர்களின் திருமணங்கள் இரவுச்சாப்பாட்டுடன் இரவில் இடம்பெறும்.

அஸர் தொழுகைக்குப் பின்னர் பெண் வீட்டாரின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து மாலை ஐந்து மணிக்கு மாப்பிளையை அழைத்துவர பெண் தரப்பினர் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வர்.

அங்கு, மாப்பிள்ளையின் உறவினரகள், நண்பர்களும் மற்றும் பெண் தரப்பினரும் ஒன்றுகூடி, சிற்றுண்டி உண்டு, ஃபாத்திஹாவும் ஓதிய பின்னர் மாப்பிள்ளை ‘ஸலாம்’ கொடுப்பதற்கு உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் குணிந்து இருகைகளையும் கொடுத்து ‘ஸலாம்’ சொல்வார்.

அப்போது ‘அல்லாஹூம்ம ஸல்லி….’ சொல்லிக்கொண்டே, கடித உறை ஒன்று மாப்பிள்ளையின் கைக்குள் திணிக்கப்படும். மணமகனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்துப் பெற்றுக்கொண்டு, சேகரிக்கும் கடித (பண) உறைகளை சேகரிக்க ஒரு பையுடன் வரும் தனது நண்பரிடம் அல்லது உறவினரிடம் கொடுத்துவிடுவார். பின்னர் பைத்துடன் மாப்பிள்ளை குடைகொண்டு பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டுச் செல்வார்.

திருமணம் முடிந்ததும் பெண் வீட்டார் மாப்பிள்ளைச் சாப்பாடு கொடுப்பது அன்று நிர்ப்பந்தம் போலவே எமது ஊரில் இருந்து வந்தது.

அவர் அவர் வசதிக்கேற்ப இருதரப்பையும் அழைத்து மாப்பிள்ளைச் சாப்பாடு பெண்வீட்டாரால் வழங்கப்படும். திருமணங்கள் போன்றே பகற்போசனமாகவும் அல்லது இராப்போசனமாகவும் இவ்விருந்து இடம்பெறும்.

சாப்பிட்டதன் பின்னர் இருதரப்பின் முக்கிய உறுப்பினர்களும் மாப்பிள்ளையின் நண்பர்களும் சூழ்ந்திருக்க, திருமணமன்று சேகரிக்கப்பட்ட கடித உறைகள் ஆரம்பத்தில் உடைக்கப்பட்டு, ‘கலக்ஸன்’ எண்ணப்படும். (சில இடங்களில் கடித உறை வேறு ஓர் நாளில் தனியாக கணக்கிடப்பட்டு வந்த நிகழ்வுகளும் உள்ளன).

frog box

இதன்படி, “அ. இ. அகமட், காத்தான்குடி-2 இருபது ரூபாய்”, “அப்துல் ஸமட், காத்தான்குடி-4 50 ரூபாய்”, “காசிம் (பெரியப்பா) 100 ரூபாய்” என்று கடித உறையை உடைப்பவர் கூற, அருகில் இருந்து ஒரு கொப்பியில் இன்னொருவர் பதிந்துகொண்டிருப்பார்.

இவ்வாறு இந்த கடித உறைகளை பணம் என பிரிக்கும்போது அவற்றில் சில வெற்று கடித உறைகளாகவோ அல்லது வெறும் வெற்றுத் கடதாசியைக் கொண்டதாகவோ அமையும்.

இதன்போது கடித உறைகளை உடைப்பவருக்கும், மாப்பிள்ளைத் தரப்புக்கும் அசடு வழிவதையும் பார்க்கையில் மனதுக்குள் எழும் மகிழ்வுக்கு அளவில்லை.

இவ்வாறான ஏமாற்று கடித உறைகள் உண்மையில் வசதி இல்லாதவர்களால் முகவரியில்லாத பெயரைக் குறிப்பிட்டு மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கும். அல்லது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் பெண் தரப்பின் இளைஞர்கள் பகடிக்காக இவ்வாறு செய்திருப்பர்.

அதன் பின்னர் மாப்பிள்ளைச் சாப்பாட்டிற்கு வந்த அன்பளிப்புப் பார்சல்கள் மேற்சொன்னவாறே பிரிக்கப்பட்டு பெயர் விபரங்களை வாசித்ததன் பின்னர் கொப்பியில் பதியப்படும்.

இங்கும் அன்பளிப்புப் பெட்டிக்குள்ளும் ஏமாற்று வித்தைகள் காத்திருக்கும். அதுதான் தவளைப் பெட்டி.

கல்யாணச் சாப்பாடன்று, கிணற்றடியில் ஒழிந்துகொண்டிருக்கும் தவளையொன்றைப்பிடித்து, மலிபன் பிஸ்கட் பெட்டியொன்றில் வைத்து, அதனை புரவுண் பேப்பரால் அழகாக பொதிசெய்து, எவருடைய பெயரையாவது அதில் எழுதி, சாப்பாட்டுக்குப் போகும்போது பொதியோடு பொதியாக கச்சிதமாக வைத்துவிடுவர்.

மாப்பிள்ளைச் சாப்பாட்டில் எப்படியாவது ஒரு தவளைப்பெட்டியாவது இருக்கும் என்பது அன்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுவதால், பார்சல்களை பிரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை.

இத்தகைய அன்பளிப்புப் பொதிகளை பிரிப்பதற்கு முன்னரே, பெட்டியை நாலுதரம் குலுக்கி, காதுவைத்து கேட்டுவிட்டே உடைக்க முயல்வார். சந்தேகப் பொதிகளை வேறாக வைத்துவிடுவார்.

ஆனால் நம்ம இளைஞர்கள் விடுவார்களா என்ன..?

வெற்றுப்பெட்டிக்குள் தவளையை வைத்தால் பாரமாக இருக்காது. அதனால் செங்கல் துண்டொன்றை வைத்து உண்மையில் அன்பளிப்பு உள்ளது போன்றே பொதிசெய்யப்பட்டிருக்கும் இப்பெபட்டி எப்படியோ மாட்டிவிடும்.

அவ்வளவுதான். வெள்ளையும் சுல்லியுமாய், குட்டையும் நெட்டையுமாய் மாப்பிள்ளைப் பாயில் உட்கார்ந்திருக்கும் மாப்பிள்ளையை நோக்கி பாய்ந்து ஓடும் தவளை. அப்பாடா….!

தவளை பாய்ந்து ஓடி எப்படியோ திறைச்சீலை மறைவுக்குள் இருந்துகொண்டு இந்தப் புதினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ‘பொண்டுகள்’ பகுதிக்குள் தவளை பாய்ந்துசெல்ல…… அவ்வளவுதான்…..!

சிலவேளைகளில் தவளை பெட்டியினுள் மரணித்தும் இருக்கும்! சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தவளைப் பெட்டிகளும், வேறு விதமான விநோதப் பெட்டிகளும் மாட்டுப்படும்.ஒன்றுக்கு மேல் தவளை அலர்ட் ஏற்படும்போது பொதி பிரிப்பவருக்கு ‘பக்கீரா’கிடும். “என்னப்பா… பகடிக்கு அழவே இல்லையா?” என அவர் கேட்கும் பரிதாபமும் இளைஞர்களை மேலும் உசாராக்கிச் செல்லும்.

எமது ஊரின் அன்றைய நிகழ்வுகளை இன்றைய சமுதாயத்தினரோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கில் ‘அந்தநாள் ஞாபகம்’ எனும் பகுதி இன்ஸா அல்லாஹ் இன்றிலிருந்து தொடர்ச்சியாக அவ்வப்போது எமது தளத்தில் இடம்பெறும். மார்க்கம், கலை, கலாசாரம், விளையாட்டு மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட பல்சுவை உண்மை சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் இப்பகுதியில் இடம்பெற இருக்கின்றன.

ஆர்வமுள்ள எமது அன்பு வாசகர்களும் இப்பக்கத்தை அலங்கரிக்க முடியும். உங்கள் கடந்தகால (ஊர்) அனுபவங்களை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பி இங்கு பகிர்ந்துகொள்ள முடியும்.

நன்றி,

இயக்குனர்

Published by

Leave a comment